
நாம் உண்ணும் உணவு செரிப்பதற்கும், சத்துக்களை உடல் பாகங்கள் உள்வாங்கவும், முக்கிய பங்கு வகிக்கிறது குடல் எனப்படும் வயிற்றில் உள்ள உறுப்பு. குடலின் சுவர்கள் தசை அடுக்குகளால் வரிசையாக உள்ளன. அவை செரிமான பாதை வழியாக உணவை நகர்த்தும்போது சுருங்குகின்றன. இது பாதிக்கப்படும் போது பல இன்னல்கள் வருகிறது. அதில் ஒரு வகையை இங்கு காண்போம்.
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) Irritable Bowel Syndrome என்பது வயிறு மற்றும் குடலை பாதிக்கும் ஒரு பொதுவான நிலை. இது இரைப்பை குடல் என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் அறிகுறிகளாக தசைப்பிடிப்பு, வயிற்று வலி, வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் அல்லது இரண்டும் அடங்கும். IBS என்பது நீண்ட கால எச்சரிக்கை தேவைப்படும் ஒரு தொடர்ச்சியான நிலையாகும்.
சுற்றுச்சூழல் காரணிகள், மரபணு காரணிகள், குடலில் பாக்டீரியா நொதித்தல், பாக்டீரியா வளர்ச்சி, உணவு சகிப்புத்தன்மை, மாற்றப்பட்ட குடல் இயக்கம் ஆகியவைகள் இதன் அடிப்படை காரணங்கள் ஆகிறது. ஆனால் இந்த பாதிப்பினால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவதில்லை. ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கடுமையான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்.
வாய்வு பிரச்சினை, சோர்வு மற்றும் ஆற்றல் இல்லாமை, வாந்தி, குமட்டல், முதுகுவலி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளிட்ட சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் மலம் கழிக்கும்போது கட்டுப்படுத்த முடியாத நிலை (குடல் அடங்காமை) இவை அனைத்தும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் (IBS) அறிகுறிகள்.
பொதுவாக வாழ்நாள் முழுவதும் இருக்கும் பிரச்சனை என்பதால் பாதிக்கப்பட்ட நபர்கள் வாழ்வது மிகவும் வெறுப்பாக உணர்வது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு தீர்வு தரும் தகுந்த சிகிச்சையும் இல்லை எனினும் உணவு மாற்றங்கள், மன பதட்டமின்மை மற்றும் குடல் எரிச்சல் மருந்துகள் மருத்துவ ஆலோசனை ஆகியவைகள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது.
சிகிச்சைகள் ஒரு பகுதியாக இருந்தாலும் நமது உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதே இதற்கு சரியான தீர்வாக அமையும். உதாரணமாக குடலை சரிசெய்ய உணவில் நார்ச்சத்தை அதிகரிக்க வேண்டும். நீங்கள் மலச்சிக்கலுடன் போராடினால், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொடிமுந்திரி மற்றும் கொட்டைகள் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்களுக்கு உதவும்.
ஐபிஎஸ் அறிகுறியை தூண்டக்கூடிய பொதுவான உணவுகளான பால் பொருட்கள், பசையம் உள்ள கோதுமை போன்றவைகள் மற்றும் வாயுவை உண்டாக்கும் உணவுகள்/பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். உணவுகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உணவியல் நிபுணர் உதவியுடன் அறிகுறி அதிகமாவதைத் தவிர்க்கலாம்.
சில ஆராய்ச்சியாளர்கள் IBS என்பது மன அழுத்தத்திற்கும் குடலுக்கும் தொடர்புடையதாக கூறுவதால் மன அழுத்தத்தை தவிர்ப்பது நல்லது. இதற்கு யோகா உடற்பயிற்சி போன்றவைகள் உதவும்.
குறிப்பாக IBS, குடல் திசுக்களில் மாற்றங்களை ஏற்படுத்தாது அல்லது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்காது என்பது நலன் பற்றிய நேர்மறை தகவலாகிறது.