
ஒரு கப் காபி அல்லது காஃபின் கலந்த பானம் ஒன்றை அருந்திவிட்டு 20 நிமிடங்களுக்கு ஒரு குட்டித் தூக்கம் போட வேண்டும். இது காபி தூக்கம் அல்லது காஃபின் தூக்கம் என்று அழைக்கப்படும். பொதுவாக காஃபின் மூளையை பாதிக்கத் தொடங்க சுமார் 20 நிமிடங்கள் ஆகலாம். அதற்குள் தூங்கி எழுந்த உடன் காஃபினின் பயன்களை அனுபவிக்கலாம். உற்சாகமாக வேலை செய்யத் தொடங்கலாம். இதுவே நாப்புச்சினோ டெக்னிக் 'nappuccino technique' எனப்படுகிறது.
நாப்புச்சினோ டெக்னிக் எப்படி வேலை செய்கிறது?
நமது மூளையில் நாள் முழுவதும் அடினோசின் என்கிற வேதிப்பொருள் உருவாகி, சோர்வாக உணர வைக்கிறது. தூங்கும் போதுதான் இந்த வேதிப்பொருளின் அளவு குறைகிறது.
காஃபி குடித்த பின்பு புத்துணர்ச்சியாக உணர்வதற்கு 15 லிருந்து 20 நிமிடங்கள் பிடிக்கும். காபி குடித்துவிட்டு தூங்குவதன் மூலம் அடினோசின் என்கிற வேதிப்பொருள் ஓரளவு வெளியேறிவிடும். தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் காஃபின் செயல்படத் தொடங்கி சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
நாப்புச்சினோ டெக்னிக்கின் நன்மைகள்;
1. விழிப்புணர்வு மற்றும் ஆற்றல்;
ஒரு சிறிய துக்கத்திற்கு பிறகு நாம் அருந்திய காபியில் உள்ள காபின் வேலை செய்து உடலுக்கு உற்சாகத்தையும், விழிப்புணர்வையும் அதிகரிக்கும். அதே சமயத்தில் ஆற்றலின் அளவு அதிகரித்து சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவோம்.
2. மேம்பட்ட அறிவாற்றல்;
நாப்புச்சினோ கவனம் மற்றும் நினைவாற்றல் போன்ற அறிவாற்றல் செயல்களை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடினமான பணிகளை கூட மிக எளிதாக செய்ய முடியும்.
3. மந்த நிலை மாறுதல்;
அதிகாலையில் எழுந்து வேலை செய்து கொண்டு இருக்கும்போது பிற்பகலின் போது உடலும், மனமும் சோர்வடையத் தொடங்கும். ஆனால், நாப்புச்சினோ டெக்னிக் இந்த மந்த நிலையை மாற்றி உற்சாகத்தை அளிக்கும். சோர்வான மனநிலையை மாற்றுவதனால் நேர்மறையான மனநிலைக்கு திரும்ப முடிவும். மனதில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
4. நாப்புச்சினோ டெக்னிக்கை பயன்படுத்தும் விதம்;
சரியான நேரத்தில் காப்பியை குடித்துவிட்டு உடனடியாக 15லிருந்து 20 நிமிடங்கள் தூங்க முயற்சி செய்ய வேண்டும். காபி குடித்த பிறகு அதிக நேரம் விழித்திருக்காமல் உடனே உறங்க வேண்டும். அதே சமயத்தில் அதிக நேரம் தூங்குவது மந்த நிலைக்கு வழிவகுக்கும். 20 லிருந்து 30 நிமிடத்திற்குள் எழுந்து விட வேண்டும். இல்லையென்றால் அது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக சோம்பலை ஏற்படுத்தி விடும்.
இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு காஃபின் கலந்த பானங்கள் உட்கொள்ளக் கூடாது. பொதுவாக இரவு உறங்கும் நேரத்திற்கு 6 மணி நேரத்திற்குள்ளாக இந்த டெக்னிக்கை உபயோகப்படுத்தக் கூடாது. இது இரவு தூக்கத்தைக் கெடுக்கும்.
காஃபின் உணர் திறன் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். அதிக உணர் திறன் உடையவராக இருந்தால் காஃபின் குறைவாக உள்ள பானத்தை பயன்படுத்தலாம்; அல்லது மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.
யாரெல்லாம் நாப்புச்சினோ டெக்னிக்கை பயன்படுத்தக் கூடாது?
காஃபினுக்கு அதிக உணர்திறன் உள்ளவர்கள் இந்த டெக்னிக்கை முயற்சி செய்யக் கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு நடுக்கம், பதட்டம், தூக்கத் தொந்தரவு போன்றவை ஏற்படலாம். தூக்கமின்மைக் கோளாறு உள்ளவர்களும் மருத்துவ ஆலோசனையின் பிறகு இதை எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் இதய நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும். அதே சமயம் இந்த டெக்னிக்கை உடல் ஒத்துக்கொள்ளாவிட்டால் அதைத் தவிர்ப்பது அவசியம்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.