
'பாப்கார்ன் லங் டிஸீஸ்' (Popcorn Lung Disease) பற்றித் தெரியுமா? இதற்கான தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு ஆலோசனைகள் இங்கே..
'பாப்கார்ன் லங்' என்பது மூச்சு விடுவதில் சிரமம் உண்டாக்கக் கூடிய ஓர் அபூர்வமான நோய். இது நுரையீரலின் மிகச் சிறிய காற்றுப்பைகளை வீக்கமடையச் செய்யும். அவைகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது என்பது முடியாதது எனக் கூறப்படுகிறது. ஈ-சிகரெட் போன்ற சாதனங்களை உபயோகித்து, டயாசெடில் (Diacetyl) போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனங்களை தொடர்ந்து வாப்பிங் (Vaping) செய்வதே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. (வாப்பிங் என்பது நிக்கோட்டின், கஞ்சா மற்றும் வேறு சில திரவப் பொருட்களை ஆவியாக்கி மூச்சுக் குழாய் வழியே உள்ளிழுத்து வெளிவிடுவதாகும்.)
சாதாரண சளி அல்லது ஆஸ்துமா போன்ற நோய்களுக்கான அறிகுறிகளே இதற்கும் காணப்படுவதால், 'பாப்கார்ன் லங்' நோயைக் கண்டுபிடித்து முறையான சிகிச்சை அளிப்பதில் தாமதமேற்பட்டு விடுகிறது.
பாப்கார்ன் தயாரிக்கும் தொழிற்சாலைகளில், பாப்கார்னுக்கு வெண்ணெயின் சுவையூட்டும் செயலில் உபயோகிக்கப்படும் 'டயாசெடில்' என்னும் இரசாயனம் தொழிளாலர்களின் மூச்சுக் காற்றோடு கலந்து அவர்களின் நுரையீரலை சென்றடைகிறது. நாளடைவில், இதன் மூலம், அவர்களின் நுண்ணிய காற்றுப் பைகள் (Air sacs) வீக்கமடைந்து நோய் உண்டாகிவிடுகிறது. இதன் காரணமாகவே இந்நோய்க்கு 'பாப்கார்ன் லங் டிஸீஸ்' என்ற பெயர் உண்டாகியுள்ளது. டயாசெடில் என்ற இதே இரசாயனம் ஈ -சிகரெட்களிலும் சுவையூட்டியாக சேர்க்கப்படுகிறது.
அதன் பின்விளைவாக ஒர்க் அவுட் பண்ணும்போது மூச்சு விடுவதில் சிரமம், வறண்ட இருமல், சோர்வு மற்றும் இழுப்பு (Wheezing) போன்ற அசௌகரியங்கள் உண்டாகும். இதே மாதிரியான அறிகுறிகள் நடைப்பயிற்சி அல்லது வேறு வகையான பயிற்சிகளை மேற்கொள்ளும்போது உண்டாகுமாயின் அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம்.
வாப்பிங் பழக்கம் உள்ளவர்கள் லேசா சளி பிடிக்கும் போதே, மருத்துவரின் (Pulmonologist) பரிந்துரையோடு, செஸ்ட் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், நுரையீரல் செயல்பாடுகளை கண்டறியும் சோதனை மற்றும் பயாப்சி (தேவைப்பட்டால்) போன்றவற்றை எடுத்துக் கொள்வது நலம்.
சிகிச்சை:
இந்த நோய் முற்றிலும் குணப்படுத்த முடியாதது. ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால், ப்ரெட்னிசோன் (Prednisone) போன்ற கார்ட்டிகாஸ்டெராய்டு (Corticosteroid) மருந்தை மருத்துவர் பரிந்துரை செய்வார். சுய சிகிச்சையை அறவே தவிர்க்க வேண்டும்.
இன்ஹேலர் மற்றும் ப்ரோன்ச்சோடைலேட்டர் (Bronchodilator) போன்ற மூச்சுக் குழாய் தசைகளை தளர்த்தும் மருந்துகள், மூச்சுப் பாதையை திறந்து மூச்சுவிட உதவி புரியும்.
முற்றிய நிலையில் ஆக்ஸிஜன் தெரபி பரிந்துரைக்கப்படும். எதுவும் வேலைக்காகாத நிலையில் கடைசி தேர்வாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை கருத்தில் கொள்ளப்படும்.
தடுப்பு முறைகள்:
நோய் உறுதிப்படுத்தப்பட்டவுடன், காரணத்தை கண்டுபிடித்து அதை உடனடியாய் நிறுத்துவது அவசியம்.
வாப்பிங் காரணமென்றால் முற்றிலும் அதை நிறுத்த வேண்டும். தேவைப்பட்டால் கவுன்ஸ்லிங் மற்றும் படிப்படியாக குறைக்க உதவும் வகுப்புகளுக்கும் சென்று பயனடையலாம்.
புகை மாசடைந்த சூழலில் இருப்பதை தவிர்த்தல், நுரையீரல் ஆரோக்கியம் காக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், அட்வான்ஸ்டு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளுதல் நல்ல பலன்களைத் தரும்.
மேலும், குறிப்பிட்ட இடைவெளிகளில் உடற் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் சிகிச்சையில் காணப்படும் முன்னேற்றத்தை கவனித்து மருந்துகளின் அளவை மாற்றியமைக்கவும் உதவும்.
வருமுன் காப்போம் என்ற கோட்பாட்டை மனதில் கொண்டு நம் வாழ்வியல் முறையை வளமாக்கினால் நோயற்ற வாழ்வு பெறலாம்.