கோடைக் காலத்தில் தான் சில பழங்களின் சீசன் தொடங்குகிறது. கோடைக்காலத்தில் தர்பூசணி, முலாம்பழம் ஆகியவை சீசனாக இருந்தாலும் , மக்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது என்னவோ முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு தான். மாம்பழம் அதன் புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவைக்காக பெரும் அளவில் இந்தியர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. கோடைக்காலத்தில் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழமாக மாம்பழம் இருக்கிறது. வெளிநாட்டினர் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாம்பழத்தை கருதுகின்றனர்.
மாம்பழம் ஏராளமான ஊட்டச் சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் மாம்பழத்தை மதியம் மற்றும் இரவில் உணவு உண்ணும் போதோ, உணவு உண்ட உடனடியாகவோ மாம்பழத்தை சாப்பிட விரும்புகிறார்கள்.
சிலர் மாம்பழத்தை இரவில் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனாலும் அதை இரவில் உண்ணக்கூடாது. இரவில் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இரவில் மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன தீங்குகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
மாம்பழத்தில் அதிக சர்க்கரையும் ஏராளமான கலோரிகளும் இருப்பதால் இதை காலையிலோ மதிய வேளைகளிலோ சாப்பிடுவது தான் சிறந்தது. கலோரிகளை எரிக்க அதிக நேரம் தேவைப்படும் என்பதால் பகலில் இதை சாப்பிடுவது தான் சிறந்தது. இதில் உள்ள அதிக சர்க்கரை இரவில் உடலின் செரிமான செயல்முறை மெதுவாக்குகிறது. சில நேரங்களில் அது ஜீரணிக்க கடினமாக இருக்கும். இது வாயு, அஜீரணம், வயிற்று வலி மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் உண்ணுவது சரியானது அல்ல. அதிக இனிப்பு கொண்ட இந்த பழத்தை அவர்கள் குறைந்த அளவில் சாப்பிடலாம் . மாம்பழத்தில் பிரக்டோஸ் மிக அதிகமாக உள்ளது. இரவில் மாம்பழம் சாப்பிடுவது திடீரென இரத்த சர்க்கரையை அதிகரிக்கும், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஆபத்தானது. தூங்குவதற்கு முன் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது இன்சுலின் உணர்திறனையும் பாதிக்கும். இரவில் சர்க்கரை அதிகரிப்பது உடல் நலத்தை அதிகம் பாதிக்கும்.
அதிக கலோரி கொண்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் தேவைக்கும் அதிகமான சக்தி உடலுக்கு கிடைக்கிறது. இதன் காரணமாக உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் ஓய்வெடுக்க முடியாமல் உழைத்து கொண்டிருக்கும். இதனால் உடல் புத்துணர்ச்சியுடன் , அதிக ஆற்றலுடன் இருக்கும் . இதனால் ஒருவர் சோர்வுற்று முழுமையாக தூங்க முடியாது. மாறாக அவர் கண் திறந்தோ , அரை தூக்கத்தில் தான் இருப்பார் . மேலும் சரியான தூக்கமின்றி உடல் உறுப்புகள் சீர்கெடும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது. மாம்பழத்தில் உள்ள அதிக கலோரிகள் , எரிக்கப்படாமல் உடலில் சர்க்கரையாகவோ அல்லது கொழுப்பாகவோ சேரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இரவில் மாம்பழத்தை சாப்பிட்டால் , உடலில் கலோரிகளை எரிக்க போதுமான நேரம் கிடைப்பதில்லை. ஏனென்றால் இரவில் நாம் எந்த உடல் செயல்பாடுகளையும் செய்ய மாட்டோம். அத்தகைய சூழ்நிலையில், அது உடலில் கொழுப்பாக படிந்து உடல் எடையை அதிகரிக்கும். மாம்பழம் சீசனில் மட்டுமே கிடைக்கும் பழம் ஆதலால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் பகலில் சாப்பிடுங்கள்.