

இன்றைய அவசர உலகில் நிம்மதியான தூக்கம் என்பது பலருக்கு எட்டாக்கனியாகிவிட்டது. தூக்கமின்மை பிரச்சனைக்காக மக்கள் விதவிதமான முறைகளை முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் 'Potato Bed' என்ற ஒரு முறை வைரலாகி வருகிறது.
பெயரைப் பார்த்ததும் படுக்கையில் உருளைக்கிழங்கைப் பரப்பி வைத்துத் தூங்க வேண்டுமா என நினைக்க வேண்டாம். இது உருளைக்கிழங்கைச் சாப்பிடும் முறையோ அல்லது அதை வைத்துச் செய்யும் மருத்துவமோ கிடையாது. இது ஒரு 'Comfort Technique'.
உண்மையில் உருளைக்கிழங்கிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நமது ஊர்களில் குழந்தைகளைத் தூங்க வைக்கும்போது ஒரு மென்மையான தொட்டிலில் இட்டு ஆட்டுவார்கள். அந்தத் தொட்டிலுக்குள் குழந்தை எவ்வளவு பாதுகாப்பாகவும், இதமாகவும் உணருமோ, அதே உணர்வை ஒரு பெரியவர் தனது மெத்தையிலேயே உருவாக்குவதுதான் இந்த 'Potato Bed' முறை.
எளிமையாகச் சொன்னால், உங்கள் படுக்கையில் தலையணைகள் மற்றும் போர்வைகளைக் கொண்டு ஒரு சிறிய 'கூடு' போன்ற அமைப்பை உருவாக்கி, அதற்குள் நீங்கள் ஒரு கருவைப் போலச் சுருண்டு படுத்துக் கொள்வதே இந்த முறை.
இதை எப்படி உருவாக்குவது?
நமது வீடுகளில் ஏற்கனவே நிறையத் தலையணைகள் மற்றும் போர்வைகள் இருக்கும். அதைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம்.
உங்கள் கட்டிலின் நடுப்பகுதியில் நீங்கள் படுக்கும் இடத்தைச் சுற்றி நான்கு பக்கமும் தலையணைகளை அடுக்கவும்.
அடுக்கப்பட்ட தலையணைகளின் மேல் ஒரு மென்மையான போர்வையை விரிக்கவும். இது ஒரு கூடு போன்ற அமைப்பை உருவாக்கும்.
அதற்குள் நீங்கள் ஒரு கருவைப் போல (Fetal Position) சுருண்டு படுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது உங்கள் மீது ஒரு மெல்லிய பருத்திப் போர்வையைப் போர்த்திக் கொண்டால், நீங்கள் ஒரு உருளைக்கிழங்கு அதன் தோலுக்குள் இருப்பது போலப் பாதுகாப்பாக உணர்வீர்கள்.
இது உண்மையில் தூக்கத்திற்கு உதவுமா?
குழந்தைகளைத் துணியால் சுற்றி வைப்பது அவர்களுக்கு எப்படிப் பாதுகாப்பான உணர்வைத் தருகிறதோ, அதே போன்ற ஒரு உணர்வை இது பெரியவர்களுக்கும் தருகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுப்பதாகக் கூறுகின்றனர்.
தலையணைகள் உங்கள் உடலைச் சுற்றி இருக்கும்போது, அது ஒரு கட்டிப்பிடித்தலுக்கு இணையான உணர்வைத் தரும். இது உடலில் செரோடோனின் மற்றும் மெலடோனின் ஹார்மோன்களைச் சுரக்கச் செய்து மனதை அமைதிப்படுத்துகிறது.
இதில் இருக்கும் ஆபத்துகள் என்ன?
உடலைச் சுற்றி அதிக போர்வைகள் மற்றும் தலையணைகள் இருப்பதால், உடலின் வெப்பம் வெளியேற முடியாமல் போகலாம். ஆழ்ந்த உறக்கத்திற்கு உடல் வெப்பம் சற்று குறைய வேண்டும். ஆனால் இந்த முறையில் உடல் சூடாகி உங்கள் தூக்கம் கலைந்து போகவும் வாய்ப்புள்ளது.
குறிப்பாகக் குழந்தைகளுக்கு அல்லது சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல. முகத்தைச் சுற்றி அதிக துணிகள் இருப்பது ஆபத்தை விளைவிக்கலாம்.
நீங்கள் ஒரு குறுகிய நேரத் தூக்கத்திற்கோ (Napping) அல்லது குளிர் காலங்களில் இதமாக உணர்வதற்கோ இந்த 'Potato Bed' முறையை முயற்சி செய்யலாம். ஆனால், தினசரி தூக்கத்திற்கு இது சிறந்ததா என்பது உங்கள் உடல் நிலையைப் பொறுத்தது. ஒருவேளை நீங்கள் இதைப் பயன்படுத்த விரும்பினால், பருத்தித் துணிகளால் ஆன போர்வைகளைப் பயன்படுத்துவது வெப்பத்தைத் தவிர்க்க உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)