உமிழ்நீர் கல் தெரியுமா? சாப்பிடும் போது ஊறுகாய் வைப்பதற்கு இப்படி ஒரு காரணமா?

Salivary Stones
Kidney stone
Published on

உணவுப் பழக்கம் மாறி வருவதால் மனித உடலில் எண்ணற்ற நோய்களும் வந்து விடுகின்றன. இதில் சிறுநீரக கற்கள் உருவாவதும் தற்போது அதிகரித்து வருகிறது. உலகில் பத்து பேரில் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் பிரச்சினை இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பித்தப்பை கற்கள் உருவாவதையும் நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் உமிழ்நீர் கற்கள் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அவ்வகையில் உமிழ்நீர் கற்கள் குறித்த விழிப்புணர்வை வழங்குகிறது இந்தப் பதிவு.

மனித உடலில் கற்கள் உருவாவதும் ஒருவகையான விசித்திரமான திறன் தான். இரத்தத்தில் இருந்து ஆக்சலேட்டுகள் மற்றும் கால்சியம் போன்றவை சிறுநீரில் கசியும். இதன் அளவு அதிகமாகும் போது அது திட வடிவத்தைப் பெறுகிறது. அசாதாரண வடிவமான இந்த சிறுநீரக கற்கள், சிறுநீர்க் குழாயில் மான் கொம்பு போன்ற வடிவத்தில் இருக்குமாம். தொடக்கத்தில் சிறிதாக இருக்கும் போது பிரச்சினைகள் ஏதும் இருக்காது. ஆனால், இந்த கற்கள் சிறுநீர் செல்லும் பாதையை அடைத்து விட்டால், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்படும். அதோடு கீழ்முதுகில் கடுமையான வலியும் ஏற்படும். தினந்தோறும் தேவையான அளவு தண்ணீரைக் குடிப்பதாலும், சிறுநீரை அடக்கி வைக்காமல் இருந்தாலுமே இதனைத் தடுத்து விடலாம்.

மனித உடலில் உள்ள பல்வேறு திரவங்களால் கற்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதில் ஒன்று தான் உமிழ்நீர் கல். தாடை, காதுகள் மற்றும் நாக்கிற்கு கீழே இருக்கும் சுரப்பிகள் உமிழ்நீரைச் சுரக்கின்றன. உணவு செரித்தலில் இதன் பங்கு அளப்பரியது. சாப்பிடும் போது ஊறுகாய் வைப்பது கூட, உமிழ்நீர் அதிகளவில் சுரப்பதற்காகத் தான். உணவை விழுங்கிய பிறகு உமிழ்நீரையும் விழுங்கும் போது, உணவை ஈரமாக்கி விரைவில் செரிமானம் அடைய இது உதவுகிறது.

உமிழ்நீர் கற்கள் மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்ற தனிமங்களில் இருந்து உருவாகலாம். உமிழ்நீர் வாய்க்குள் செல்லும் குழாயில் கற்கள் உண்டாகி விட்டால், அது உமிழ்நீரைத் தடுத்து விடும். இச்சமயத்தில் வாயில் வீக்கம் ஏற்படுவது மட்டுமின்றி, கடுமையான வலியும் ஏற்படும். உமிழ்நீர் உள்செல்வது நின்று விட்டால், அங்கு தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதனால், வாயில் இருந்து துர்நாற்றம் வீசும்.

இதையும் படியுங்கள்:
கால்களில் வீக்கம் – எதனால் ஏற்படுகிறது? குறைக்கும் வழிகளும் சிகிச்சை முறைகளும்!
Salivary Stones

உமிழ்நீர் கல் ஏற்படாமல் இருக்கத் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டியது அவசியம். தண்ணீர் குடிக்கும் போது, வாயில் பாக்டீரியாக்கள் உருவாவது தடுக்கப்படும்; மலச்சிக்கலைத் தடுக்கும்; அதோடு சிறுநீரை நீர்த்துப் போகச் செய்யும். மேலும் எலுமிச்சையை உறிஞ்சுவது கூட உமிழ்நீர் கற்களை வெளியேற்ற சிறந்த நிவாரணமாக கருதப்படுகிறது. எலுமிச்சையை உறிஞ்சும் போது அதிகப்படியான உமிழ்நீர் சுரக்கும். இதனை அப்படியே விழுங்கினால் உமிழ்நீர் குழாயில் இருக்கின்ற கற்கள் தானாகவே வெளியேறி விடும்‌.

ஒரு பிரச்சினை உண்டாகி, வலியை அனுபவித்த பிறகு நிவாரண முறையை மேற்கொள்வதைக் காட்டிலும், வருமுன் காப்பதே சிறந்தது. தண்ணீர் குடித்தல், உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி போன்ற அன்றாட நடவடிக்கைகளின் மூலம் நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com