
நம் வாழ்வில் உள்ள அனைத்து பதற்றங்களையும், கவலைகளையும் மறந்து நிம்மதியுடன் இருக்கும் ஒரே தருணம் தூங்கும் நேரத்தில் தான். ஆனால், சில நேரங்களில் நாம் தூங்கிக்கொண்டிருக்கும் போதே, நம்மை யாரோ கட்டி வைப்பது போலவும், அழுத்தம் கொடுத்து அசையாமல் வைப்பது போலவும் ஒரு உணர்வு தோன்றும்.
இந்த அனுபவம் கனவா? யதார்த்தமா? என்று புரியாமல், பயத்துடனும் குழப்பத்துடனும் விழித்துக் கொள்கிறோம். மருத்துவ ரீதியாக இதற்கான சரியான பெயர் தூக்க பக்கவாதம் (Sleep Paralysis) எனச் சொல்லப்படுகிறது.
நாம் தூங்கும் போது, தூக்கத்தில் பல கட்டங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது Rapid Eye Movement (REM) நிலை. இதுவே கனவுகள் உருவாகும் கட்டமாகும். REM நிலையில் தடை ஏற்படும்போது அல்லது தூக்கத்தின் ஒரு கட்டத்தில் நாம் திடீரென விழித்துவிட்டால், உடல் அசைய முடியாதபடி தோன்றும். இதுவே தூக்கப் பக்கவாதம்.
இந்த நிலையில், நமது மூளை விழித்திருந்தாலும் உடல் இன்னும் தூக்க நிலையில் தான் இருக்கும். சில நொடிகள் அல்லது சில நிமிடங்கள் இந்த நிலை நீடிக்கலாம். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தூக்கமின்மை. அதிக வேலை, ஓய்வு இல்லாமை போன்ற காரணங்கள் தூக்கப் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. இது பெரிதாகக் கவலைப்படக்கூடிய உடல்நல குறைப்பாடுகள் அல்ல. அனைவருக்கும் ஒருசில சமயங்களில் ஏற்படக்கூடிய இயல்பான அனுபவம்தான்.
சிலருக்கு இந்த நிலைமையால் அதிகம் அச்சம் ஏற்படலாமே தவிர உயிரை இழக்கும் ஆபாயம் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த நேரத்தில் சற்று அமைதியாக காத்திருக்க வேண்டும். சில நொடிகளில், உடல் மீண்டும் செயல்படத் தொடங்கிவிடும்.
இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழ பழகுங்கள். குறைந்தது 7–8 மணி நேரம் தூக்கம் தேவை.
தூங்கும் முன் அதிக நேரம் தொலைக்காட்சி, மொபைல் பயன்பாட்டை குறைத்துவிட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் தியானம், யோகா போன்ற மன அமைதியை தரக்கூடிய பயிற்சிகளை பின்பற்றுங்கள்.
மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்று உணர்ந்தால், தயங்காமல் ஒரு மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
தூங்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமின்றி இருட்டாகவும் இருக்க வேண்டும். ஒலி, வெளிச்சம் போன்றவை குறைவாக இருக்குமாறு அமைத்துக்கொள்வது சிறந்தது.
தொடர்ந்து தூக்க பக்கவாதம் ஏற்படுகிறதெனில், நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். இது மற்ற தூக்க பிரச்னைகளின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். எனவே, அதை தவிர்க்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது.