

நாம் ரத்த வங்கி, கண் வங்கி, இருதய வங்கி, கல்லீரல் வங்கி மற்றும் சிறுநீரக வங்கி என்று எல்லாம் கேள்வி பட்டிருக்கோம். ஆனால், மல வங்கி (Stool Bank) பற்றி நாம் அறியவில்லை.
இது நமக்கு புதிது. விஞ்ஞானம் ராக்கெட் வேகத்தில் முன்னேறி கொண்டு வருகிறது. இந்த 21ம் நூற்றாண்டில் மலம் வங்கி பிரபலம் ஆகி விட்டது. ஆனால், நன்கு வளர்ந்த நாடுகளில் தான் இது நடைமுறையில் உள்ளது.
சிங்கப்பூர், ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் மல வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த சிகிச்சைக்கு Fecal Microbiota Transplant (FMT) என்று பெயர். மனிதனின் குடலில் கோடிக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. சிலருக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு அல்லது குடல் நோய்கள் ஏற்படும்போது, அவர்களது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். அவர்களுக்கு ஆரோக்கியமான ஒருவரின் மலத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைச் செலுத்துவதன் மூலம் நோயைக் குணப்படுத்த முடியும்.
யாரெல்லாம் மலம் கொடுக்கலாம் என்று பார்க்கலாம். இது ரத்த தானம் செய்வதை விடக் கடினமானது. தானம் செய்பவர் மிக மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம் அல்லது எந்தவிதமான தொற்று நோய்களும் இருக்கக்கூடாது.
அவர்களது மலம் மற்றும் ரத்தம் மிகத் தீவிரமாகப் பரிசோதிக்கப்படும். 90% மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தப் பரிசோதனையில் தகுதி பெறமாட்டார்கள் என்பதுதான் உண்மை.
இந்தியாவில் இன்னும் பொதுவான மல வங்கிகள் பெரிய அளவில் வரவில்லை என்றாலும், டெல்லி (ILBS - Institute of Liver and Biliary Sciences) போன்ற சில முன்னணி மருத்துவமனைகளில் இதற்கான வசதிகள் மற்றும் ஆய்வுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.
நமது உடல் ஒரு ரசாயன தொழிற்சாலை. படைப்பில் மலம் கூட பயன் தருகிறது. மலம் என்பது வெறும் கழிவு மட்டுமல்ல, அது உயிர்களைக் காக்கும் ஒரு மருந்தாகவும் மாறி வருகிறது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)