தற்போது உள்ள காலக்கட்டத்தில் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டும் என்று மக்கள் காலை, மாலை என இரு வேளையும் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் கொலஸ்ட்ரால் குறையும் என்று நம்புகிறார்கள். தினமும் ஒரு குறிப்பிட்ட தூரம் வாக்கிங் போவதால் கொலஸ்ட்ரால் குறையும் என்று சொல்லப்படுவது உண்மையா? இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
முதலில் கொலஸ்ட்ரால் என்பது வேறு, கொழுப்பு என்பது வேறு என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நமது உடலில் அதிகக் கொழுப்பு இருப்பதே உடல் பருமனுக்குக் காரணம். நமது சருமம் மற்றும் பிற உறுப்புகளில் Adipose tissue என்ற செல்கள் இருக்கின்றன. அதற்குள் நிறைய கொழுப்பு படிந்திருக்கிறது. இது கொலஸ்ட்ரால் இல்லை. இதை Triglycerides என்று கூறுவார்கள். கொலஸ்ட்ரால் என்பது 2000 மில்லி கிராம் அளவிற்கு உடலுக்குத் தேவைப்படும் ஒரு பொருள்.
நிறைய பேருக்கு உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவை அதிகம் இருப்பதால் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையும் அதிகமாக இருக்கிறது. இதனால் Triglycerides அதிகமாக உள்ளவர்கள் அதிகம். Triglycerides அதிகமாக இருப்பதால், VLDL (very low density lipoprotein) என்ற கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும். இதனால், டோட்டல் கொலஸ்ட்ராலும் அதிகமாக இருக்கும். எனவே, கொலஸ்ட்ரால் அதிகம் என்பதிலேயே பல வகைகள் உண்டு.
'LDL (Low - density lipoprotein) கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் நபர்களுக்கு உடற்பயிற்சி பயனளிக்குமா?' என்று கேட்டால், கண்டிப்பாக பயனளிக்காது. LDL கொலஸ்ட்ரால் மரபணு காரணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இவர்களுக்கு வாக்கிங் போவது பயனளிக்காது. இவர்கள் தீவிரமான உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்ள வேண்டும் அல்லது மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படியானால் கொலஸ்ட்ரால் குறைய வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதுவே, Triglycerides கொழுப்புகள் அதிகமாக இருந்து, VLDL கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், டோட்டல் கொலஸ்ட்ரால் அதிகரித்திருக்கிறது. ஆனால், LDL நார்மலாக இருக்கிறது என்றால், சரியான உடற்யிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு இருந்தால் Triglycerides கொழுப்புகள் அருமையாகக் குறையும். Triglycerides கொழுப்புகளை குறைக்க மாவுச் சத்துள்ள உணவுகளைக் குறைவாக சாப்பிட வேண்டும்.
அப்போதுதான் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை குறையும். இதனால் இரத்தத்தில் Triglycerides கொழுப்புகள் நன்றாகவே குறையும். இதனுடன் மது அருந்தும் பழக்கமிருந்தால் அதையும் நிறுத்துவது நல்லது. எனவே, HDL என்று சொல்லப்படும் Good cholesterol உடலில் அதிகரிக்கும்.
இதனால் இரத்தக் குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கும். எனவே, கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதற்கு வாக்கிங் போவது மட்டுமே தீர்வாகும் என்று நம்புவது தவறாகும். இதைப் புரிந்துகொண்டு சரியாக செயல்பட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.