
சிலருக்கு முழங்காலுக்கு கீழுள்ள கால் பகுதியில் நரம்பு சுருண்டு சருமத்தின் மேற்பரப்பில் புடைத்தது போல தோற்றமளிக்கும். முழங்காலின் பின்புறம், தொடைகள், கணுக்கால், இடுப்புப் பகுதி, பாதங்கள் போன்ற இடங்களிலும் வெரிகோஸ் வெயின் ஏற்படலாம். இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வெரிகோஸ் வெயின் ஏற்படுவதன் காரணங்கள்:
பலவீனம் / சேதம்:
நரம்புகளுக்குள் உள்ள வால்வுகள் பலவீனமாகும் போது அல்லது சேதமடையும்போது வெரிகோஸ் வெயின் ஏற்படுகிறது. காலில் உள்ள வால்வுகள் இதயத்திற்கு மீண்டும் ரத்தத்தை எடுத்துச் சொல்ல உதவுகின்றன. அவை சரியாக வேலை செய்ய முடியாமல் போகும்போது நரம்புகளில் ரத்தம் தேங்கி வீங்கி முறுக்கியது போல காணப்படும்.
குடும்பம்:
பெற்றோர்களுக்கு அல்லது முன்னோர்களுக்கு வெரிகோஸ் வெயின் பிரச்னை இருந்தால் அது குடும்பத்தில் உள்ள பிறரையும் பாதிக்கலாம்.
முதுமை:
முதுமையின் காரணமாக நரம்புகளில் உள்ள வால்வுகள் தேய்மானம் அடைகின்றன. அதனால் நரம்பு சுருண்டு கொள்ளும் பிரச்னை ஏற்படுகிறது.
உடற்பருமன்:
தனது உயரத்தை விட அதிகமாக எடை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் அதிக எடை நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
கர்ப்பிணிகள்:
கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு வரலாம்.
நீண்ட நேரம் நிற்பது:
நீண்ட நேரம் நிற்பது அல்லது உட்கார்ந்து இருப்பது என்ற வேலைகளில் இருப்பவர்களுக்கு நரம்பு சுருண்டு கொள்ளும் பிரச்னை ஏற்படுகிறது. ஏனென்றால் குறைவான உடல் செயல்பாடு, முக்கியமாக கால்களை ஒரே பொசிஷனல் வைத்திருப்பதால் கால்களில் ரத்தம் குவிகிறது. மேலும் நரம்புகளில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இவர்களுக்கு வெரிகோஸ் வெயின் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
உடற்பயிற்சி இல்லாதது:
உடற்பயிற்சி இல்லாமல் இருப்பவர்கள் மற்றும் அதிக உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.
என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?
வெரிகோஸ் வெயின் கால்களில் அதீத வலி, தசைப்பிடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். நரம்புகள் வீக்கம் அடைந்து அலர்ஜி மற்றும் கால் கனமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கால்களில் ஏற்படும் சுருக்கங்கள் அரிப்பு, தடிப்பு, வறட்சி போன்ற சருமம் சம்பந்தமான சிக்கல்களை ஏற்படுத்தும். மிகவும் அரிதாக சிலருக்கு நரம்புகளில் புண்கள் உண்டாகலாம்.
வெரிகோஸ் வெயினை எதிர்கொள்வது எப்படி?
வெரிகோஸ் வெயின் பிரச்னை இருப்பவர்கள் அதை மேலும் மோசமாகாமல் தடுக்கலாம்.
1. தினமும் சிறிது நேரம் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்தாலும் கால்களுக்கு என்று ஒரு பிரத்தியேக பயிற்சி செய்ய வேண்டும். தினமும் 20 முறையாவது கால்களை நெஞ்சுக்கு நேர் மேலே உயர்த்தி கீழிறக்க வேண்டும். தொடர்ச்சியாக செய்யும் இந்தப் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் கால் தசைகளுக்கு நல்ல பயிற்சியாக அமைந்து ரத்தத்தை மீண்டும் இதயத்தை நோக்கி பாய உதவுகின்றன.
2. கட்டாயமாக ஹை ஹீல்ஸ் செருப்புகளை அல்லது ஷூக்களை தவிர்க்க வேண்டும். அதேபோல இறுக்கமான சாக்ஸ்கள் மற்றும் கால்களை இறுக்கிப் பிடிக்கும் லெக்கின்ஸ் ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
3. நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்கள், அதிக நேரம் அமர்ந்திருப்பவர்கள் அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். கால்களை நீட்டி மடக்க வேண்டும்.
4. ஆரோக்கியமான நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம். கால் வீக்கத்தை குறைக்க உப்பை குறைக்க வேண்டும்.
5. எடை மேலாண்மை அவசியம். குறைந்த எடை நரம்புகளின் அழுத்தத்தை குறைக்கிறது என்பது முக்கியமானது.
6. சுருக்க காலுறைகளை (compression stockings) அணியலாம். இவை கால்களில் மென்மையான அழுத்தத்தை செலுத்துகின்றன. ரத்தம் மேல் நோக்கி நகர உதவுகின்றன. வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கின்றன.