
ஜிமிக்கி(Jimikki) இந்தியப் பெண்களின் விருப்பமான காதணி, அதிலும் ஜிமிக்கிக்கு தென்னிந்தியாவில் அதிக ரசிகைகள் உள்ளனர். பாரம்பரிய இந்திய உடைக்கு பொருத்தமான காதணியாக இது உள்ளது. கோவில் மணி போன்ற இதன் அழகிய உருவம் பெண்களின் அழகை மேலும் கூட்டும். ஒவ்வொரு அசைவிலும் ஊஞ்சலாடும் ஜிமிக்கி, பார்வைக்கு நளினத்தை தரும். வெயிலில் மின்னி ஜிமிக்கியில் உள்ள கற்களும் புன்னகைக்கும். இவ்வளவு இருந்தாலும் ஒவ்வாமை மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு ஜிமிக்கி(Jimikki) காரணமாக இருக்கிறது என்பது அதிர்ச்சியான செய்தியாக இருக்கும்.
மோசமான சுகாதார நிலை காரணமாக ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் போன்ற பாக்டீரியாக்கள் காதணிகளில் உருவாகி வளர்கின்றன என்பதை ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. தங்கம் அல்லாத சாதாரண ஜிமிக்கிகளில் உள்ள நிக்கல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். தரம் குறைந்த உலோகங்களில் செய்யப்படும் ஜிமிக்கிகள் கவர்ச்சியாக இருந்தாலும் பாக்டீரியா தொற்று ஏற்படுத்துவதை ஆதரிக்க முடியாது.
காது தொற்று எவ்வாறு ஏற்படுகிறது?
தரம் குறைந்த உலோகங்கள் மூலம் தயாரிக்கப்படும் காதணிகள், வியர்வையில் வினை புரிந்து காதின் துளையில் பாக்டீரியாக்களை வளர வைக்கின்றன. இது முறையற்ற சுகாதார நிலை காரணமாகவும் ஏற்படுகின்றது. இதனால் சிறிய வலி, எரிச்சல், புண் போன்ற நிலைகள் ஏற்படலாம். ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் மற்றும் சூடோமோனாஸ் ஏருகினோசா போன்ற பாக்டீரியாக்கள் பொதுவாக காதணிகளில் காணப்படுகின்றன. போலி ஜிமிக்கிகள் நிக்கலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் படுகின்றன. நிக்கல் காதுகளில் புண்ணை ஏற்படுத்தி அரிப்புக்கு வழி வகுக்கிறது. புண், வீக்கம், சிவத்தல் ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. இது காலப்போக்கில் புண்ணை பெரிதாக்கி சருமத்தையும் பாதிக்கும்.
மோசமான சுகாதாரம்
காதில் தொற்று ஏற்பட முக்கிய காரணம், கைகளை கழுவாமல் அடிக்கடி ஜிமிக்கியை தொட்டு பார்ப்பது, பாக்டீரியாக்கள் அதிகமாக பரவ வழி செய்கிறது. காதணிகளை அடிக்கடி சுத்தம் செய்யாமல் இருப்பதும் நீண்ட காலம் அணிந்திருப்பதும் நோய் தொற்றுக்கு பாதையை வகுக்கிறது. தொற்றுகளில் இருந்து பாதுகாக்க தினசரி தோடுகளை வெந்நீரில் கழுவி சுத்தம் செய்த பின் பயன்படுத்த வேண்டும்.
கிருமி நாசினி கொண்டு காதணியை சுத்தம் செய்வது பாதுகாப்பை அதிகரிக்கும். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான காதணிகளை சுத்தம் செய்யாமல் அணிவதைத் தவிர்க்கவும். காதுகளில் உள்ள துளைகளில் சோப் போட்டு தினசரி கழுவி, காய்ந்த பின்னர் ஜிமிக்கியை அணிந்து கொள்ளவும். காது துளைகளில் சேரும் அழுக்குகள் காதை புண்ணாக்கும் முயற்சியில் இருப்பதை கவனத்தில் கொள்ளவும்.
காது குத்துதல்
காது குத்தும் போது உபயோகிக்கும் உபகரணங்களின் சுத்தத்தினை உறுதி செய்யுங்கள். கிருமி நீக்கம் செய்யப்படாத உபகரணங்களைப் பயன்படுத்துவது அல்லது முறையற்ற துளையிடும் நுட்பங்களைப் பயன்படுத்துவது பாக்டீரியாவை காதில் அதிகமான பரவலை ஏற்படுத்தும். இது காதில் வலி, வீக்கம் அல்லது சீழ் போன்றவற்றை ஏற்படுத்தும். தொற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைக்க, கிருமி நீக்கம் செய்யப்பட்ட உபகரணங்களை பின்பற்றவும்.
காது தொற்றை எவ்வாறு தடுப்பது எப்படி?
1. ஜிமிக்கிகளை சுத்தமாக வைத்திருங்கள்.
2. தினமும் அவற்றை வெந்நீரில் கழுவி அணியவும் அல்லது சானிடைசர் மூலம் தொற்று நீக்கம் செய்து பின்னர் அணிந்து கொள்ளவும்.
3. பாக்டீரியா பரவுவதைத் தடுக்க காதணிகளைக் கையாளும் முன் உங்கள் கைகளை சுத்தம் செய்யவும்.
4. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பிளாஸ்டிக் போன்றவற்றில் செய்யப்பட்ட ஜிமிக்கிகள் தொற்றுகளை அதிகம் ஏற்படுத்துவது இல்லை.
5. காது குத்திய பிறகு புண் ஆறும் வரை மருத்துவரின் ஆலோசனையை நாடலாம்.
6. தினசரி ஜிமிக்களை சுத்தம் செய்யவும்.
7. எடை குறைந்த ஜிமிக்கிகளை அணியவும், அதிக எடை கொண்டவை காதின் துளையை பெரியதாக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)