
கடந்த காலத்தில் மனிதர்கள் குறைந்த அளவு சாப்பிட்டு நிறைய வேலைகள் செய்து வந்தனர். அதனால் அவர்களுக்கு எந்த நோயும் வரவில்லை. உடல் ஆரோக்கியமாகத் தான் இருந்தார்கள். தற்போதைய சூழ்நிலை மாறி வருகிறது. உணவு அதிகமாகி விட்டது, வேலைத்திறன் குறைந்துவிட்டது. 'மனிதன் இரண்டு வேளை தான் சாப்பிட வேண்டும்' என சித்தா ஆயுர்வேதம் கூறுகிறது. ஆனால், அதை யாரும் கடைப்பிடிப்பது இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நாம் மூன்று வேளை சாப்பிட ஆரம்பித்தோம். அதன் பின்னர் அது ஆறு முறை, ஏழு முறை உணவு என மாறிவிட்டது.
காரணம் நாம் என்ன சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம் மெட்டபாலிசம் சூரியனோடு தொடர்புக் கொண்டது. பயாலஜிக்கல் கிளாக் நம் உடலில் அன்றாடம் செயல்படுகிறது.
அதன்படி பார்த்தால் நாம் காலை உணவு காலை 10 மணி முதல் இரண்டு மணிக்குள் பசிக்கும் நேரத்தில் சாப்பிட வேண்டும். அதேபோன்று இரவு உணவு மாலை 5 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் பசிக்கும் நேரத்தில் சாப்பிட வேண்டும். இந்த இரண்டு வேளை சாப்பிட்டால் போதுமானது.
நாம் அதிகம் சாப்பிட்டு உடம்பை கெடுத்து கொள்கிறோம். இதனால் செரிமான பிரச்சனை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. பசி எடுக்கும் முன்னே அடுத்த வேலை உணவை சாப்பிட்டு உடலில் நஞ்சு மற்றும் கழிவுகளை உருவாக்கி சர்க்கரை நோய், உடல் பருமன், செரிமான கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகிறோம். நோய் தொற்று ஏற்பட்டால் பசி உணர்வு போய்விடும்.
சாப்பிடாமல் இருந்தால் உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்கள் கழிவுகள் வெளியேறி வயிறு சுத்தமாகும். நோய் வராமல் தடுக்கும் காலை உணவை தவிர்ப்பதால் ஒன்றும் ஆகிவிடாது. அதற்கு பதில் காலை 10 மணி முதல் இரண்டு மணிக்குள் பசி எடுக்கும் நேரத்தில் சாப்பிடுவது நல்லது. அதேபோன்றுதான் இரவு உணவும். இப்படி சாப்பிடுவதால் அசிடிட்டி, வாயு தொல்லை, செரிமான கோளாறுகள் ஏற்படாது. எப்போதுமே பசி வந்தால் தான் சாப்பிட வேண்டும். கண்டபடி கண்ட நேரத்தில் சாப்பிடக்கூடாது.
'நம் வயிறு ஒன்றும் குப்பைத்தொட்டி அல்ல' என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம் வயிறு காலியாக இருப்பதை நம் உடல் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும். உணவுகளைப் பொறுத்தவரை கைக்குத்தல் அரிசி, சிறுதானியங்கள் போன்றவை நல்லது. இவை தவிர நம் உணவில் தினசரி அறுசுவை கட்டாயம் இடம் பெற வேண்டும். இதற்கு தென் மாநில உணவு வகைகள் நல்ல பலன் கொடுக்கும்.
ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அதற்கு பசி எடுக்கும் போது சாப்பிட்டால், போதுமானது அதாவது ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு போதுமானது. நம் உடலை நாம் தான் பேணி பாதுகாக்க வேண்டும். இந்த முறையை கடைப்பிடித்தால் உடலில் எந்த நோயும் வராது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)