காதில் சிறிய பூச்சிகள் நுழைந்துவிட்டால் அதன் குடைச்சல் நம்மை தொந்தரவு செய்துகொண்டே இருக்கும். அதை எடுக்கும் வரை நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. காதுக்குள் சென்ற பூச்சிகளை வெளியே எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ஒளி பாய்ச்சுவது: காதுக்குள் சின்னச் சின்ன பூச்சிகள், குறிப்பாக எறும்பு, சின்ன வண்டு போன்றவை காதுக்குள் நுழைந்து விட்டால் உள்ளே சென்று காது ஜவ்வு பகுதியை அல்லது சருமப் பகுதியை கடித்து வலியை ஏற்படுத்தும். இதற்கு முதலில் ஒரு இருண்ட அறைக்கு அழைத்துச் சென்று காது பகுதியில் டார்ச் லைட்டை அடித்து ஒளியை பாய்ச்ச சில பூச்சிகள் குறிப்பாக ஈக்கள், வண்டுகள், அந்துப் பூச்சிகள் போன்றவை வெளிச்சத்தை நோக்கி ஒளியால் ஈர்க்கப்பட்டு வெளிவந்து விடும்.
உப்பு கரைசல் நீர்: இது வேலை செய்யவில்லை என்றால் சிறிதளவு வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து காதுக்குள் விட, பூச்சிகள் உடனே வெளியேறிவிடும். பிறகு தலையை சிறிது நேரம் கவிழ்த்து வைத்து தண்ணீரை துடைத்து விடலாம். சில சமயம் பூச்சிகள் தண்ணீர் விட்டும் வெளியில் வராமல் இருக்கும். கவலைப்பட வேண்டாம். அவை உப்பு தண்ணீர் விடுவதால் இறந்து விடும். எனவே, ஜவ்வு பகுதியை கடிக்கவோ, சருமத்தை கடிக்கவோ செய்யாமல் இருக்கும். அதனால் வலியும் உண்டாகாமல் இருக்கும்.
தாவர எண்ணெய்கள்: காதுக்குள் தண்ணீர் விட்டாலும் சில சமயம் பூச்சிகள் இறந்து போகாததற்குக் காரணம் பூச்சிக்கு தேவையான ஆக்சிஜன் தண்ணீரிலும் இருப்பதால் சில பூச்சிகள் இறப்பதில்லை. இம்மாதிரி சமயங்களில் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை காதில் விட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தால் பூச்சிகள் இறந்து வெளியே வந்து விடும்.
சிலர் பூச்சியை வெளியே எடுக்கிறேன் பேர்வழி என்று காதுக்கு ஊக்குகள், காட்டன் பட்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவார்கள். இதுபோன்ற பொருட்கள் செவிப்பறையில் பட்டால் நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே, இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
பிற காரணங்கள்: சிலருக்கு காதிலிருந்து சீழ் அல்லது நீர் வரும். இது காது ஜவ்வில் ஓட்டை இருப்பதால் வரலாம். அப்படிப்பட்டவர்கள் சிறு பூச்சிகள் காதுக்குள் நுழைந்தால் தண்ணீர் விடாமல் இருப்பது நல்லது. உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து அவர் குறிப்பிடும் சொட்டு மருந்தை விடலாம்.
காது என்பது மிகவும் மென்மையான உறுப்பு. இதில் ஏதேனும் பூச்சி அல்லது சின்ன பொருட்களை குழந்தைகள் போட்டுக் கொண்டாலும் எடுப்பது சிரமம். வலி, குடைச்சல் போன்றவை ஏற்படும். பொதுவாகவே காது வலி, சீழ் வடிவது, கிருமி தொற்று போன்ற பல பிரச்னைகளுக்கு காது, மூக்கு தொண்டை நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது.
மருத்துவ ஆலோசனை: சிறு குழந்தைகள் ஓயாது அழுது கொண்டிருந்தால் காதில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்துகொள்ள கைகளை காதுக்கு அருகில் வைத்து தடவி கொடுக்க குழந்தையின் அழுகை குறைந்து விட்டால் காதில் ஏதோ பிரச்னை உள்ளது என்பதைக் கண்டறிந்து மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.
காது என்பது மூக்கு, வாயுடன் தொடர்புடையது என்பதால் இவற்றில் ஏற்படும் பிரச்னைகளால் கூட காது பாதிக்கப்படலாம். எனவே மூக்கு, வாயில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதையும் கண்டறிய சிறந்த காது மூக்கு தொண்டை நிபுணரை பார்ப்பது நல்லது.