
யோகாசனம் பல நூற்றாண்டுகளாய் நாம் கடைப்பிடித்து வரும் பழமையான உடற்பயிற்சி முறையாகும். தினசரி யோகா செய்வது நம் உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும். ஆனால், யோகாசனம் எந்த நேரத்தில் செய்ய வேண்டும்? காலையில் செய்வது சிறந்ததா? அல்லது மாலையில் செய்வது சிறந்ததா? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
காலை நேரத்தில் யோகாசனம் செய்வது உடல் தசைகளை செயல்படுத்தவும், முழு உடலையும் உற்சாகப்படுத்தவும், மனதை மகிழ்ச்சியாக வைக்கவும் உதவும். காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உடலுக்கும், மனதிற்கும் உற்சாகமூட்டும் செயலாகும். இதனால் நாள் முழுவதும் நாம் விழிப்போடும், கவனத்துடனும் இருக்கலாம். இது உற்பத்தித்திறன் சிறப்பாக செயல்பட உதவும். இரவு நீண்ட நேரம் அசையாமல் தூங்குவதால், காலையில் எழுந்து யோகாசனம் செய்வதற்கு முன்பு வார்ம் அப், ஸ்ட்ரெச் ஆகியவற்றை செய்வது நல்லது.
காலை நேர யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள், நம்முடைய உடலில் உள்ள தசைகளையும், மூட்டுக்களையும் மெதுவாகவும், பாதுகாப்பாகவும் இயக்கத்திற்கு கொண்டுவர காலையில் யோகா செய்வது சிறந்ததாகும். நம் உடல் சுறுசுறுப்பாக இயங்கவும், புத்துணர்ச்சியுடன் இருக்கவும் காலையில் யோகா செய்வது நல்லது. நம் உடலில் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கவும். நாள் முழுவதும் அதிக ஆற்றல் பெறவும் காலை யோகா உதவுகிறது.
நிறைய பேர் காலையில் யோகா செய்வதற்கே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. காலை நேரத்தில் யோகா செய்யும் போது எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வெறும் வயிற்றில் செய்வது நல்ல பலனைத் தரும்.
நாள் முழுவதும் வேலை செய்வதால், மாலையில் யோகாவில் ஈடுப்படும் போது நம் உடல் இதற்கு தயாராக இருக்கும். மாலை நேரத்தில் யோகா செய்வதால் மனம் நிம்மதியாகவும், நிதானமாகவும் உணர முடியும். இரவு நன்றாக தூங்குவதற்கு உதவும். வேலையால் ஏற்பட்ட டென்ஷன், ஸ்ட்ரெஸ்ஸை போக்க உதவுகிறது.
எனவே, இதில் எந்த நேரத்தில் செய்யக்கூடிய யோகா உங்களுக்கு வசதியாக இருக்கிறதோ அதை தொடர்ந்து செய்து வருவதால் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம். முயற்சித்துப் பாருங்களேன்.