

சுடுதண்ணீரில் குளிப்பதில் (Hot water bathing) நன்மைகளும் இருக்கின்றன, தீமைகளும் இருக்கின்றன. அதை எப்படி முறையோடு செய்ய வேண்டும் என்பதில் தான் மிகப்பெரிய சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
உடல் களைப்பாக இருக்கும்போது சுடுதண்ணீரில் குளித்தால், அது தசைகளைத் தளர்த்தி உடல் வலியைப் போக்கும்.
உடலில் 'மெலட்டோனின்' ஹார்மோன் சுரக்கத் தூண்டப்படுவதால், இரவு நேரங்களில் ஆழ்ந்த தூக்கம் வரும்.
சுடுதண்ணீரில் குளிக்கும்போது நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் உடலின் கடைசி பாகங்கள் வரை ரத்தம் சீராகப் பாய்கிறது.
சளி, இருமல், சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்குச் சுடுதண்ணீர் குளியல் ஒரு வரப்பிரசாதம். நீராவியைச் சுவாசிப்பது மூக்கடைப்பை நீக்கி, நுரையீரலில் உள்ள சளியை இளகச் செய்து சுவாசப் பாதையைச் சீராக்கும்.
பொதுவாக வீடுகளில் வாட்டர் ஹீட்டரை 60°C வெப்பநிலையில் செட் செய்திருப்பார்கள்; நிறுவனங்களும் இதையே பரிந்துரைக்கின்றன. ஆனால், இவ்வளவு சூடான தண்ணீரில் மனிதர்களால் குளிக்க முடியாது. பிறகு ஏன் இந்த அளவு?
மின்சாரச் சேமிப்பு: அடிக்கடி தண்ணீரைச் சூடுபடுத்த வேண்டிய அவசியம் இருக்காது, இதனால் மின்சாரக் கட்டணம் குறையும்.
பாக்டீரியா தடுப்பு: வாட்டர் ஹீட்டர் தொட்டியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் உருவாகித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்கவே உலக சுகாதார நிறுவனம் (WHO) உட்பட பல அமைப்புகள் 60°C வெப்பநிலையைப் பரிந்துரைக்கின்றன.
குளிருக்கு இதமாக இருக்கிறது என்பதற்காகச் சுடச் சுடத் தண்ணீரை உடலில் ஊற்றக் கூடாது. குளிப்பதற்கு உகந்த வெப்பநிலை என்பது நமது சராசரி உடல் வெப்பநிலையான 37°C முதல் 42°C வரை மட்டுமே.
தண்ணீர் சரியான சூட்டில் இருக்கிறதா என்பதை உங்கள் மணிக்கட்டு அல்லது முழங்கையை வைத்துச் சரிபார்த்துவிட்டுப் பிறகு குளிப்பது நல்லது.
அதிகச் சூடான நீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தை வறண்டு போகச் செய்யும்.
தலைமுடிக்கு அதிக வெப்பம் கொண்ட நீரைப் பயன்படுத்தும்போது, முடியிலுள்ள 'கெராட்டின்' புரதம் பாதிக்கப்படும். இது முடியின் வேர்களைப் பலவீனமாக்கி முடி கொட்டுவதற்கு வழிவகுக்கும்.
அதிக நேரம் சுடுதண்ணீரில் இருப்பது உடலின் ஈரப்பதத்தை முழுமையாக நீக்கிவிடும். 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே குளிப்பது சிறந்தது.
சுடுதண்ணீரில் குளித்து முடித்ததும், சருமத்தில் உள்ள ஈரப்பதம் மறையாமல் இருக்க ஒரு நல்ல Moisturizer அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவது சருமத்திற்குப் பாதுகாப்பு தரும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)