கிரியேட்டின் என்பது இன்று உடற்பயிற்சி செய்பவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள ஒரு சப்ளிமெண்ட். இது தசை வளர்ச்சி மற்றும் செயல்திறனை அதிகரிக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இது அனைவருக்கும் பொருத்தமானதா? யாரெல்லாம் இதைத் தவிர்க்க வேண்டும்? என்பது பற்றி இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
கிரியேட்டினை தவிர்க்க வேண்டியவர்கள்:
கிரியேட்டின் சிறுநீரகங்களால் செயல்லாக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதை உட்கொள்வதால் சிறுநீரகங்களில் கூடுதல் சுமை ஏற்படலாம். அதேபோல இது கல்லீரலுக்கும் சுமையை ஏற்படுத்துவதால், கல்லீரல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.
சில ஆய்வுகளின் படி இதய பிரச்சினை உள்ளவர்கள் கிரியேட்டின் உட்கொள்வதால் இதயம் பாதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், நரம்பியல் பிரச்சனை உள்ளவர்கள் கிரியேட்டின் உட்கொள்வதால் அவர்களின் நிலைமை மோசமாகலாம்.
சில மூலிகை மருந்துகள் கிரியேட்டினுடன் இணைந்து செயல்பட்டு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நீரிழப்பு மருந்துகள் உடலில் நீரை இழக்க செய்யும். கிரியேட்டின் உடலில் நீரை தக்க வைக்கும். இவ்விரண்டும் ஒன்றாக உட்கொள்ளும்போது சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
நீங்கள் ஏற்கனவே ஸ்டெராய்டு எடுப்பவராக இருந்தால், கிரியேட்டின் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில், ஸ்டராய்டுகள் உடலில் சோடியத்தைத் தக்க வைக்கும். கிரியேட்டின் உடலில் நீரை தக்க வைக்கும். இவ்விரண்டும் ஒன்றாக உட்கொள்ளும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.
குழந்தைகளின் உடல் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் கிரியேட்டின் போன்ற கூடுதல் ஊட்டச்சத்துக்களை கொடுப்பது பாதுகாப்பானது அல்ல. அதேபோல, கர்ப்பிணிகளின் கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் கிரியேட்டின் எவ்வாறு செயல்படும் என்பது பற்றிய போதுமான ஆய்வுகள் இல்லை. எனவே, கர்ப்பிணிகள் கிரியேட்டின் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
கிரியேட்டின், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நன்மை பயக்கும் ஒரு ஊட்டச்சத்து என்றாலும், அனைவருக்கும் இது பொருத்தமானது அல்ல. குறிப்பாக, உடல் நலக் குறைபாடுகள் உள்ளவர்கள், குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்பவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் கிரியேட்டின் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். கிரியேட்டின் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.