
நம்மில் சில பேருக்கு, பற்கள் வெண்மையாகவும் சிலருக்கு பழுப்பு மற்றும் மஞ்சள் நிறப் பற்களாகவும் இருக்கும். பளிச்சென வெண்மை பற்கள் கொண்டவர்களை பார்க்கும் போது நமக்கு இப்படி மஞ்சள் நிறத்திலும், பழுப்பு நிறத்திலும் உள்ளதே என்று வருத்தப்படுவார்கள். இதற்கு காரணம் என்ன?
தேநீர், காபி, சோடா, சிவப்பு ஒயின் போன்ற சில பானங்கள் மற்றும் சோயா சாஸ், தக்காளி சாஸ் போன்ற சில உணவுகள் சாப்பிடுவது பற்களில் கறைகளை ஏற்படுத்தும்.
புகைப் பிடிப்பதால் புகையிலையில் உள்ள தார் மற்றும் நிகோடின் பற்களின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும். பற்களில் மஞ்சள் அல்லது பழுப்பு நிற கறைகளை ஏற்படுத்தும்.
சுகாதாரப் பழக்கங்கள்
சரியான முறையில் பல் துலக்காதது மற்றும் பற்களைப் பராமரிக்காதது, பற்களின் மேல் மஞ்சள் நிற 'பிளேக்' உருவாகக் காரணமாகிறது. இது நாளடைவில் பழுப்பு நிறக் கறைகளாக மாறலாம். மரபியல் ஒரு காரணம். சிலருக்கு இயற்கையாகவே பற்களின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பற்களின் உட்புற அடுக்கான 'டென்டின்' என்பது பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
சிலரின் பற்கள் மெல்லிய எனாமல் அடுக்கைக் கொண்டிருப்பதால், இந்த டென்டின் வெளியே தெரியும். வயது அதிகரிக்கும்போது பற்களின் எனாமல் அடுக்கு மெலிந்து, அதன் அடியில் உள்ள டென்டின் மேலும் அதிகமாக வெளியே தெரியும்.
குறிப்பாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பற்களின் நிறத்தை மாற்றலாம். சிலருக்கு இயற்கையாகவே பற்களின் எனாமல் அடுக்கு தடிமனாக இருக்கும். இதனால், பற்கள் மிக வெண்மையாகத் தோன்றும். இது மரபியல் காரணமாகவும் இருக்கலாம்.
தினமும் இரண்டு முறை சரியாக பல் துலக்குவது, ஃப்ளாஸ் பயன்படுத்துவது, மற்றும் வாய் கொப்பளிக்கும் திரவம் உபயோகிப்பது போன்ற பழக்கங்கள் பற்களை சுத்தமாகவும், வெண்மையாகவும் வைத்திருக்க உதவும்.
நிறமாற்றத்தை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்ப்பது மற்றும் அடிக்கடி தண்ணீர் குடிப்பது பற்களில் கறைகள் படியாமல் காக்கும். பற்களின் நிறம் என்பது ஒருவருக்கொருவர் வேறுபடுவது இயல்பானது. 'சத்துக்கள் நிறைந்த, தாவர அடிப்படையிலான உணவு முறைகள்' என்பது 'பல் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது' என ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
அந்த உணவுகள் எவை என்று நீங்கள் கேட்கிறீர்கள்?
வைட்டமின் C நிறைந்த சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, மற்றும் பெர்ரி பழங்கள் ஈறுகளின் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. இலை காய்கறிகளான கீரை, மற்றும் ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் K பல் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
கேரட், ஆப்பிள் போன்ற கடினமான காய்கறிகள், மென்று சாப்பிடும் போது பற்களை சுத்தம் செய்ய உதவுகின்றன. பார்லி, பழுப்பு அரிசி, மற்றும் ஓட்ஸ் போன்ற முழு தானியங்களில் உள்ள நார்ச்சத்து, வாயில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.
பாதாம், வால்நட், மற்றும் சியா விதைகள் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் ஈறுகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. பருப்பு வகைகளில் உள்ள புரதம் மற்றும் தாதுக்கள், வாய் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானவை.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உமிழ்நீர் உற்பத்தியை அதிகரித்து, வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஈறுகளைப் பாதுகாக்க, சத்தான உணவு மட்டும் போதாது, அதற்கு தினசரி சரியான பராமரிப்பும் அவசியம்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை, குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு மென்மையாகப் பல் துலக்க வேண்டும். கடினமான பிரஷ்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, ஈறுகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மென்மையான பிரஷ்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
பல் துலக்குவது மட்டும் போதாது, பல் இடுக்குகளில் சிக்கியிருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற, தினமும் ஒருமுறை ஃப்ளாஸ் (floss) பயன்படுத்த வேண்டும். மென்மையான பிரஷ் அல்லது விரல்களைப் பயன்படுத்தி, ஈறுகளை மெதுவாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஈறுகளை வலுப்படுத்த உதவும்.
வாய் கொப்பளிக்கும் திரவம்
ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, நுண்ணுயிர்களைக் கொல்லும் சிறப்பு வாய் கொப்பளிக்கும் திரவத்தைப் (mouthwash) பயன்படுத்தலாம்.
புகைப்பழக்கம் ஈறு நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று. புகையிலையில் உள்ள நச்சுப் பொருட்கள் ஈறுகளின் இரத்த ஓட்டத்தைப் பாதித்து, நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.
மன அழுத்தம் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது மன அழுத்தத்தைக் குறைத்து, ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றும்போது உங்கள் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.
வருடத்துக்கு ஒரு முறையாவது பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்வது அவசியம். இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கண்டறிந்து சரிசெய்யலாம்.
என்ன கல்கி வாசகர்களே! நீங்கள் புன்னகை மன்னன் அல்லது புன்னகை அரசியாக மாற வேண்டுமா? மேலே சொல்லப்பட்ட விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க. வெற்றி நிச்சயம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)