உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருகிறதா? உடலுக்குள் நடக்கும் விபரீதம்!

போதுமான தூக்கம் இருந்தும் அடிக்கடி கொட்டாவி வருகிறதா? இது எதனால் ஏற்படுகிறது, எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதற்கான முழுத் தகவல்கள்.
Yawn | கொட்டாவி
Yawn | கொட்டாவிImage Credit: ChatGPT
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 

அடிக்கடி கொட்டாவி வருவது ஏன்? தூக்கமின்மையா, வேறு காரணமா? தெரிந்து கொள்ளுங்கள்.

நமக்குத் தூக்கம் வரப்போகிறது அல்லது வந்துவிட்டது என்பதற்கான உடல்மொழி தான் கொட்டாவி வருவது. கூட்டத்தில் நாம் தேமே என்று அமர்ந்திருக்கும் போது ஒருவர் கொட்டாவி விட்டால் போச்சு, அதைப் பார்த்தாலே நமக்கும் கொட்டாவி வருவது உண்டு. கொட்டாவி விட்டவரைத் தொடர்ந்து ரிலே ரேஸ் போல தொடர் கொட்டாவிகளைக் காணலாம்.

சிலருக்கு எப்போதும் அதிகப்படியான கொட்டாவி வருவதுண்டு. தூக்கம் வரும்போதும், சோர்வாக இருக்கும்போதும் கொட்டாவி விடுவது இயல்பானது. ஆனால், போதுமான நேரம் தூங்கிய பிறகும் அடிக்கடி கொட்டாவி வந்துகொண்டே இருந்தால் அதை அலட்சியப்படுத்துவது நல்லதா?

உண்மையில், கொட்டாவி என்பது தூக்கத்தின் அறிகுறி மட்டுமல்ல. தூக்கக் குறைபாடு, மன அழுத்தம், சில மருந்துகளின் பக்கவிளைவுகள் உள்ளிட்ட பல காரணங்களாலும் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இங்கு கொட்டாவி பற்றி திரட்டிய தகவல்களைக் காணலாம்.

கொட்டாவி என்பது எதனால் வருகிறது?

கொட்டாவி என்பது பசி தூக்கம் போல் தன்னிச்சையாக நடைபெறும் ஒரு உடல் செயல்பாடு. கொட்டாவி வரும் போது நமது வாயை அகலமாகத் திறந்து ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுகிறோம். சிலருக்கு சத்தத்துடன் கொட்டாவி வருவதுண்டு.

கொட்டாவி ஏன் வருகிறது என்பதற்கான துல்லியமான அறிவியல் விளக்கம் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை எனினும் மூளையின் விழிப்புநிலையைப் பராமரிப்பது, உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவது போன்ற காரணங்கள் தொடர்புடையதாக இருக்கலாம் என இதுவரை வந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Yawn | கொட்டாவி
Yawn | கொட்டாவி

அடிக்கடி கொட்டாவி வருவதற்கான முக்கிய காரணங்கள் இவைதான்...

இரவில் போதுமான நேரம் தூங்காமல் இருப்பது கொட்டாவிக்கான பொதுவான காரணம். மேலும் இரவு தாமதமாகத் தூங்குவது. அடிக்கடி தூக்கம் கலைவது. தூக்க நேரம் குறைவாக இருப்பது. வேலைப்பளுவால் ஓய்வின்மை.

இவை பகல் நேரத்தில் தூக்கக் கலக்கத்தையும் அடிக்கடி கொட்டாவி வருவதையும் ஏற்படுத்தலாம்.

தூக்கத்தில் மூச்சுத்தடை (Sleep Apnea) ஒரு காரணம். தூங்கும்போது சுவாசம் மீண்டும் மீண்டும் தடைப்படுவதால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுகிறது. அதிகமாகக் குறட்டை விடுதல். தூக்கத்தில் மூச்சு நின்று மீண்டும் துவங்குவது. காலையில் தலைவலி. பகலில் அதிக தூக்கம். காலையில் எழுந்தாலும் சோர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

மன அழுத்தம், கவலை, பதற்றம் போன்ற உணர்வுகளும் சிலருக்கு அடிக்கடி கொட்டாவி வரத் தூண்டலாம்.

குறிப்பாக, முக்கியமான நிகழ்வுகளுக்கு முன்பு அல்லது பதற்றமான சூழ்நிலையில் கொட்டாவி வரும் வாய்ப்பு உண்டு.

நீண்ட நேரம் கணினி அல்லது செல்போன் பார்ப்பது, ஓய்வில்லாமல் வேலை செய்வது, உடல் உழைப்பு அதிகமாக இருப்பது போன்றவை சோர்வை ஏற்படுத்தும் காரணத்தால கொட்டாவி அதிகரிக்கலாம்.

சில மருந்துகளின் பக்க விளைவுகளும் காரணமாகலாம். குறிப்பாக சில மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள் (Antidepressants), அதிலும் SSRI வகை மருந்துகள், அதிகப்படியான கொட்டாவியை ஏற்படுத்தக்கூடும்.

மருந்து எடுத்துக் கொள்ளத் தொடங்கிய பிறகு கொட்டாவி அதிகரித்திருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். தானாகவே மருந்தை நிறுத்துவது தவறு.

நரம்பியல் தொடர்பான பிரச்சினைகளினாலும் கொட்டாவி வரலாம். அரிதான சில சந்தர்ப்பங்களில் அதிகப்படியான கொட்டாவி ஒற்றைத்தலைவலி, வலிப்பு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ், பக்கவாதம் (Stroke) போன்ற பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே இது போன்ற அறிகுறிகளுடன் கொட்டாவி அதிகரித்தால் கவனம் தேவை.

மனதில் சலிப்பு மற்றும் பசியினாலும் கொட்டாவி வரலாம். நீண்ட நேரம் ஒரே வேலையைச் செய்வது, ஆர்வமில்லாத சூழலில் இருப்பது, பசி போன்றவையும் கொட்டாவியைத் தூண்டக்கூடும்.

கொட்டாவி வந்தால் உடலில் ஆக்சிஜன் குறைகிறது எனும் பலருக்கும் சந்தேகம் உண்டு. ஆனால் கொட்டாவி வந்தால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து விட்டது என்று அர்த்தமல்ல.

கொட்டாவி என்பது உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை அதிகரிப்பதற்காக மட்டுமே நடைபெறும் செயல்பாடு என்பதற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை.

எனவே, ஒவ்வொரு முறையும் கொட்டாவி வருவதை ஆக்சிஜன் குறைபாட்டுடன் தொடர்புபடுத்த வேண்டியதில்லை என்கிறது மருத்துவம்.

இதையும் படியுங்கள்:
பறவைக் காய்ச்சல் குழந்தைகளுக்கு ஆபத்தா? பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
Yawn | கொட்டாவி

எந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டும்?

கொட்டாவி அடிக்கடி வருவதுடன் கீழ்க்கண்ட அறிகுறிகளும் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

  • போதுமான தூக்கம் இருந்தும் பகலில் அதிக தூக்கம் வருவது.

  • காரணமே இல்லாமல் தொடர்ந்து கொட்டாவி வருவது.

  • வாகனம் ஓட்டும்போது கூட தூக்கம் வருவது.

  • இரவில் அதிகமாகக் குறட்டை விடுவது அல்லது மூச்சுத்தடை ஏற்படுவது.

  • தொடர்ந்து தலைவலி மற்றும் உடல் சோர்வு இருப்பது.

  • புதிய மருந்து எடுத்த பிறகு கொட்டாவி அதிகரிப்பது.

  • குறிப்பாக கொட்டாவியுடன் திடீரென முகம் ஒரு பக்கம் சாய்வது.

  • கை அல்லது காலில் பலவீனம், பேச்சுக் குழறல், பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம். எனவே தாமதிக்காமல் அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.

ஆகவே கொட்டாவி வருவது இயல்பான உடல் செயல்பாடுதான் என்றாலும் தொடர்ந்து அதிகமாகக் கொட்டாவி வந்தால் அதைத் தூக்கமின்மை என்று மட்டும் நினைக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். தூக்கத்தின் தரம், மனநிலை, மருந்துகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் எனப் பல காரணங்கள் இருக்கலாம் என்பதால் சாதாரண கொட்டாவி தானே என்ற அலட்சியம் வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
40 வயதை நெருங்குகிறீர்களா? போனைத் தள்ளி வைத்துப் படிக்கும் பிரச்சனைக்கு என்ன காரணம்?
Yawn | கொட்டாவி

Reference: