40 வயதை நெருங்குகிறீர்களா? போனைத் தள்ளி வைத்துப் படிக்கும் பிரச்சனைக்கு என்ன காரணம்?

பிரெஸ்பியோபியா (Presbyopia) என்றால் என்ன? கண் வலிக்கான காரணங்களும் ரீடிங் கண்ணாடிகள் மூலம் தீர்வு காணும் வழிகளும்.
Presbyopia | வெள்ளெழுத்து
Presbyopia | வெள்ளெழுத்துImage Credit: ChatGPT
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

40 வயதுக்குப் பிறகு அருகில் உள்ள எழுத்துகள் மங்கலாக தெரிவது 'வெள்ளெழுத்து' அல்லது 'ப்ரெஸ்பியோபியா' (Presbyopia) எனப்படும். வயதாகும் போது கண்ணில் உள்ள இயற்கையான லென்ஸ் தனது நெகிழ்வுத்தன்மையை இழப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. இதனால் அருகில் உள்ள பொருட்களைக் கூர்மையாகப் பார்ப்பது கடினமாகிறது. இது பொதுவாக ஆபத்தான பிரச்சனை இல்லையென்றாலும், சரியான கண் பரிசோதனை மூலம் மற்ற கண் நோய்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

வெள்ளெழுத்து அறிகுறிகள்:

வெள்ளெழுத்து பாதிப்பு மெதுவாகத் தொடங்கி கீழ்க்கண்ட சில அறிகுறிகளை ஏற்படுத்தும்.

புத்தகம், செய்தித்தாள், செல்போன் போன்ற அருகில் உள்ள எழுத்துக்கள் மங்கலாகத் தெரிவதுடன், அவற்றை கண்களுக்குச் சற்று தொலைவில் தள்ளி பிடித்தால் தான் எழுத்துகள் தெளிவாக தெரியும் நிலை ஏற்படும். இதனால் படிப்பதை இன்னும் தெளிவாகப் பார்க்க, காகிதம் அல்லது போனை முகத்தில் இருந்து தள்ளி வைத்து படிப்பது என்ற நிலை உண்டாகும்.

சாதாரண வாசிப்பு தூரத்தில் சிறிய எழுத்துக்களைப் படிப்பதோ, ஊசியில் நூல் கோர்ப்பதோ சற்று சிரமமாக இருக்கும்.

நீண்ட நேரம் படிக்கும் பொழுதோ, கணினியில் வேலை செய்யும் பொழுதோ, படித்து முடித்த பிறகு கண் வலி, கண்களில் எரிச்சல், சோர்வு அல்லது தலைவலி ஏற்படுவது.

மங்கலான வெளிச்சத்தில் படிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்பதால், அருகில் வேலை செய்ய அல்லது படிக்க அதிகப்படியான வெளிச்சம் தேவைப்படுவது போன்றவை வெள்ளெழுத்து ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஆகும்.

Presbyopia Eye Care | வெள்ளெழுத்து
Presbyopia Eye Care | வெள்ளெழுத்து

கண் மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

40 வயதுக்கு மேல் ஆனவர்கள் பார்வைக்கு பிரச்சனை இல்லாவிட்டாலும் கூட, வருடத்திற்கு ஒரு முறை அல்லது 2 வருடங்களுக்கு ஒரு முறை முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இது கண்ணழுத்த நோய் (Glaucoma) மற்றும் கண்புரை போன்ற பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும்.

புதிதாகப் படிப்பதில் சிரமம் ஏற்படும் பொழுது அல்லது கண்ணாடி அணிய வேண்டிய தேவை உணரப்படும் பொழுது.

நீரிழிவு நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் இருந்தால் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

குடும்பத்தில் யாருக்காவது கண் அழுத்த நோய் (Glaucoma) இருந்தால் தாமதிக்காமல் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலச் சரும வறட்சியா? பாட்டி காலத்து நலங்கு மாவை வீட்டிலேயே தயாரிங்க!
Presbyopia | வெள்ளெழுத்து

உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டிய அவசர (எச்சரிக்கை) அறிகுறிகள் சில:

கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் அது சாதாரண வெள்ளெழுத்தாக இல்லாமல் வேறு தீவிர பாதிப்பாக இருக்கலாம் என்பதால் உடனடியாக கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

  • ஒரு கண்ணிலோ அல்லது இரண்டு கண்களிலோ திடீரெனப் பார்வை மங்குதல் அல்லது பார்வை இழப்பு.

  • பார்வை மங்கலுடன் சேர்ந்து கண்களில் கடுமையான கண் வலி, நீர் வடிதல் அல்லது சிவப்புத் தன்மை ஏற்படுவது.

  • கண்களுக்கு முன்னால் மின்னல் போன்று ஒளிக் கீற்றுகள் (Flashes of light) தெரிவது அல்லது கண்ணில் கருப்புப் புள்ளிகள் மிதப்பது போல் தோன்றுதல்.

  • நேர்க்கோடுகள் அல்லது எழுத்துக்கள் வளைவாகத் தெரிதல்

  • இரட்டைப் பார்வை (Double vision)

  • விளக்குகளைச் சுற்றி ஒளிவட்டங்கள் (Halos) தெரிவது அல்லது இரவில் வாகனம் ஓட்டுவதில் சிரமம் ஏற்படுவது.

வெள்ளெழுத்து என்பது இயல்பான முதுமை மாற்றம் தான். இந்தப் பார்வை குறைபாட்டை சரி செய்ய நிறைய எளிய வழிகள் உள்ளன. அதற்கு முதலில் மருத்துவரை கலந்தாலோசித்து ரீடிங் கண்ணாடிகள், பைஃபோகல் (Bifocal) அல்லது புரோகிரஸிவ் (Progressive) கண்ணாடிகள் மூலம் இதற்கு சுலபமாக தீர்வு காண முடியும்.

இதையும் படியுங்கள்:
இரவில் இரண்டு மூன்று முறை சிறுநீர் கழிக்க நேர்ந்தால் உஷார்! மருத்துவர்கள் எச்சரிக்கை!
Presbyopia | வெள்ளெழுத்து

Reference