தசைப்பிடிப்பு என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தசைகளின் திடீரென தன்னிச்சையான சுருக்கங்களை குறிக்கிறது. இது பெரும்பாலும் கால்களில், குறிப்பாக இரவில் ஏற்படும். ஆண்களை விட பெண்களுக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. அதற்கான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பெண்களுக்கு அதிகம் தசைப்பிடிப்பு ஏற்படுவதன் காரணங்கள்:
இரவு நேர தசைப்பிடிப்பு: தசைப்பிடிப்பு அனைவருக்கும் ஏற்படும் பிரச்னைதான் என்றாலும், ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் தசைப்பிடிப்புகள் ஏற்படுகின்றன. இவை மிகுந்த வலியைத் தருபவை. அனேகமாக இரவு நேரங்களில் அதிக அளவு தசைப்பிடிப்பு வலியை பெண்கள் அனுபவிக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 60 சதவீதம் முதியவர்கள் இரவில் கால் தசைப்பிடிப்பால் அவதிப்படுகிறார்கள். அதிலும் அதிகமாக கெண்டைக்கால் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் தசைப்பிடிப்புகள்: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி தசைப்பிடிப்புகள் ஏற்படுகின்றன. சுமார் 40 சதவிகித கர்ப்பிணிப் பெண்கள் கால் தசைப் பிடிப்புகளை அனுபவிக்கின்றனர். கர்ப்பத்தின் பிற்பகுதியில் கருப்பைச் சுருக்கங்களை ஏற்படுத்தும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பல கர்ப்பிணிப் பெண்களுக்கு தசைப்பிடிப்புகள் ஏற்படுகின்றன. இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நரம்புகளின் அழுத்தம் காரணமாகவும் அவர்களுக்கு தசைப்பிடிப்புகள் ஏற்படுகின்றன.
மாதவிடாயின்போது ஏற்படும் பிடிப்புகள்: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தசைப்பிடிப்புகள் ஒரு பொதுவான நிகழ்வாக இருக்கின்றன. நிறைய பெண்கள் மாதவிடாயின்போது வயிற்று வலி என்று சுருண்டு படுத்துக்கொள்வார்கள். ஏனென்றால், மாதவிடாயின்போது அவர்களது கருப்பை சுருங்குவதால் வலி ஏற்படுகிறது. மேலும், அடிவயிற்றின் கீழ் மற்றும் சில நேரங்களில் கால்களில் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. பதின்பருவ சிறுமியரும் இந்தத் தொல்லைகளை அனுபவிக்கின்றனர்.
வயது முதிர்வு காரணிகள்: பெண்களுக்கு வயதாகும்போது அவர்களுக்கு தசைபிடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்கும் தசைப்பிடிப்புகள் உண்டாகும் என்றாலும் முதிய பெண்களுக்கு அதிகமாகவே ஏற்படுகின்றன. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 33 சதவீதம் பெண்கள் மாதத்துக்கு இரு முறையாவது தசைப்பிடிப்புகளை அனுபவிக்கின்றனர் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
வலி உணர்திறன்: பொதுவாக, ஆண்களை விட பெண்களுக்கு வலியை உணரும் அதிக உணர்திறன் உள்ளது. அதாவது, பெண்கள் தசைப்பிடிப்புகளை அனுபவிக்கும்போது அவர்களுக்கு வலி தீவிரமாக இருக்கும்.
வாழ்க்கை முறை காரணிகள்: உடலில் சரியான நீரேற்றம் இல்லாதபோது தசைப்பிடிப்புகள் ஏற்படுகின்றன. போதுமான அளவு பெண்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் அலைந்து விட்டு அதன் காரணமாக நீர் இழப்பு ஏற்பட்டால் தசைப்பிடிப்புகள் உருவாகும். மேலும், உடலில் போதுமான அளவு தாதுக்கள், குறிப்பாக பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை குறைவாக இருக்கும்போது தசைப்பிடிப்புகளுக்கு வழி வகுக்கிறது.
உடல் பயிற்சிகள் இல்லாதது: பொதுவாக, பெண்களை விட ஆண்கள் அதிகமாக நடக்கிறார்கள். உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். ஆனால், பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதும் அதிகமாக நடக்காததும் தசைப்பிடிப்புக்கு காரணமாக அமைகிறது. அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது அல்லது நிற்பது போன்றவற்றை பெண்கள் தவிர்க்க வேண்டும். சத்துள்ள சீரான உணவை உண்ண வேண்டும். உடலுக்கு தேவையான தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல உடல் சார்ந்த பயிற்சிகளை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் தசைப்பிடிப்புகளை பெருமளவில் தவிர்க்கலாம்.