Food Coma: காலை நேர சோர்வு - பிரச்னை தூக்கத்தில் இல்ல; உங்க சாப்பாட்டில் இருக்குங்கோ!

food coma
food comaImg credit: AI Image
Published on

காலை எழுந்திருக்கும் போதே ஒருவித மந்தநிலை, மதிய உணவுக்குப் பிறகு அதீத சோர்வு, நாள் முழுவதும் உற்சாகமின்மை போன்றவை உங்களிடம் உள்ளதா? இவை அனைத்திற்கும் தூக்கமின்மை மட்டும் காரணமில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் உணவு முறையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

மருத்துவ ரீதியாக, இதை Food Coma அல்லது Postprandial Somnolence என்று அழைப்பார்கள்.

Food Coma ஏன் நடக்கிறது?

நாம் அதிக அளவில், குறிப்பாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக உயரும். இதை கட்டுப்படுத்த உடல் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இந்த இன்சுலின் மாற்றம் மூளையில் செரோட்டோனின் உற்பத்தியை தூண்டுகிறது. அது பின்னர் மெலடோனின் ஆக மாற்றமடைந்து தூக்க உணர்வை அதிகரிக்க உதவுகிறது.

இதே நேரத்தில், செரிமான செயல்பாட்டை முன்னிலைப்படுத்தும் Parasympathetic nervous system அதிகமாக செயல்படுகிறது. இதனால் உடல் ஓய்வு மற்றும் செரிமான நிலைக்கு மாறுகிறது. இந்த காரணிகள் சேர்ந்து உணவுக்குப் பிறகு ஏற்படும் சோர்வான நிலையான Food Coma-வை ஏற்படுத்துகிறது.

இந்த சோர்வை ஏற்படுத்தும் உணவுகள் எவை என்று இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வேம்.

1. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்:

வெள்ளை அரிசி, புரோட்டா, பிரட் போன்ற மைதா உணவுகள் மற்றும் பாஸ்தா போன்றவை இரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தும். இதனால் இன்சுலின் சுரப்பு அதிகரித்து, பின் சர்க்கரை அளவு வேகமாக குறையும். இந்த 'சர்க்கரை வீழ்ச்சி' மிக விரைவில் சோர்வடையச் செய்யும்.

2. சர்க்கரை நிறைந்த உணவுகள்:

இனிப்புகள், சோடா மற்றும் எனர்ஜி பானங்கள் குடித்தவுடன் ஒரு உடனடி உற்சாகத்தைத் தருவது போலத் தோன்றும். ஆனால், அந்த உற்சாகம் சில நிமிடங்களிலேயே மறைந்து, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களை தளர்ச்சியடையச் செய்யும். அதிகமாக எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் ஆற்றல் ஏற்ற இறக்கங்கள் (Energy fluctuations) ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
"வாக்கிங் போயிட்டு இதெல்லாம் சாப்பிட்டா எப்படீங்க?" - உங்க 'இதயம் பேசுகிறது'... கேளுங்க!
food coma

3. பதப்படுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள்:

பீட்சா, பர்கர் மற்றும் வறுத்த உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம். இவற்றைச் செரிமானம் செய்வதற்கு உங்கள் உடல் அதிக ஆற்றலைச் செலவிட வேண்டியிருக்கும். இதனால், அதிக ஆற்றல் செரிமான மண்டலத்திற்கே செலவாகி, தூக்கத்தை வரவழைக்கலாம்.

4. காஃபின்:

காபி அல்லது டீ குடித்தால் சோர்வு நீங்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அளவுக்கு அதிகமான காஃபின் உங்கள் தூக்கச் சுழற்சியைப் பாதிக்கும். ஒரு கட்டத்தில் காஃபின் உடலில் குறையும் போது, நீங்கள் முன்னைவிட அதிக சோர்வை உணர்வீர்கள்.

5. பால் பொருட்கள் மற்றும் சிவப்பு இறைச்சி:

சிலருக்குப் பால் பொருட்களில் உள்ள டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் மற்றும் மெலடோனின் தூக்கத்தை வரவழைக்கும். அதேபோல், அதிக புரதம் கொண்ட சிவப்பு இறைச்சியைச் செரிமானம் செய்ய உடல் அதிக நேரம் எடுப்பதாலும் சோர்வு ஏற்படலாம்.

சோர்வைத் தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை:

  • வெள்ளை அரிசிக்கு பதில் கைக்குத்தல் அரிசி, சிறுதானியங்கள் மற்றும் ஓட்ஸ் போன்றவற்றைச் சேர்க்கவும். இவை மெதுவாகச் செரிமானமாகி நாள் முழுவதும் சீரான ஆற்றலை வழங்கும்.

  • பல நேரங்களில் சோர்வு என்பது தாகத்தின் அடையாளமாக இருக்கலாம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
ஏசி, ஃபேன் இல்லாமலேயே வெயிலை ஈஸியாக சமாளிக்க சிம்பிளான வழிகள் இதோ!
food coma
  • ஒரே நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடுவதற்குப் பதிலாக, சிறிய இடைவெளிகளில் சத்தான உணவுகளைச் சாப்பிடுவது ரத்தச் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும்.

  • பாதாம், வால்நட் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றைச் சிற்றுண்டியாகச் சேர்த்துக் கொண்டால் உடனடி மற்றும் நீடித்த உற்சாகம் கிடைக்கும்.

  • உங்கள் உணவு முறையில் மாற்றங்களைச் செய்த பிறகும் தீராத சோர்வு இருந்தால், அது ரத்த சோகை அல்லது தைராய்டு பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் மருத்துவரை அணுகுவது நல்லது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com