பொதுவாக இந்தியாவில் வட இந்தியாவாக இருந்தாலும் சரி தென்னிந்தியாவாக இருந்தாலும் சரி எல்லா உணவிலும் கடுகை தாளித்து கொட்டும் வழக்கம் உண்டு. வட இந்தியாவில் கடுகை மட்டும் உபயோகிக்காமல் கடுகுத் தூளையும் கடுகு எண்ணெயையும் உணவில் சேர்த்து கொள்வார்கள்.
ஏன் நாம் கடுகை எல்லா உணவிலும் தாளித்து கொட்டுகிறோம்? என்ன காரணம்? பார்க்கலாமா இப்பதிவில்.....
1. சாம்பார், ரசம்,சட்னி, துவையல், டால், சப்ஜி என எதுவாக இருந்தாலும் இந்த கடுகை எண்ணெயில் போட்டு பட படவென வெடித்த பிறகு நாம் செய்த உணவோடு கலக்கும் போது அதனுடைய ருசியே மாறி விடுகிறது. கடுகிற்கு அத்தனை மகிமை இருக்கிறது.
2. ஏராளமான மருத்துவ குணங்களை கடுகு கொண்டுள்ளது. கடுகு ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.
3. திரிகடுகம் என்னும் 3 மருத்துவ பொருட்களில் கடுகிற்கு தான் முதலிடம்.
4. கடுகு விதைகளில் குளூக்கோஸினோலேட்ஸ் மற்றும் மைரோசினேஸ் ஆகிய கலவைகள் நிறைந்துள்ளன. இது உடலில் கேன்சர் உருவாகக் காரணமான செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
5. உடலின் பல்வேறு பகுதிகளில் வலிகள் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு நிவாரணம் தரும் மக்னீசியம் கடுகில் நிறைந்துள்ளது.
6. கடுகு விதையில் ஏராளமான நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அவை கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன.
7. கடுகு இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து கொலஸ்டரால் அளவை நிர்வகிக்க உதவுகிறது.
8. கடுகில் அதிக கலோரி ஆற்றல் இருக்கிறது. 100 கிராம் கடுகிலிருந்து நமக்கு கிட்டதட்ட 508 கலோரி ஆற்றல் நமக்கு கிடைக்கும்.
9. கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளன.
10. ஒற்றைத் தலைவலியை போக்கும் தன்மை கடுகிற்கு உள்ளது.
11. குளிர் நாட்களில் கடுகுக்கீரையை சமைத்து சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது. கடுகுக் கீரையில் Anti oxidants இருக்கின்றன.
12. கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகை அரைத்து தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
13. சிறுநீரின் அளவை பெருக்கும் தன்மை கடுகிற்கு இருக்கிறது.
14. எந்த ஊறுகாய் செய்தாலும் சிறிதளவு கடுகுப் பொடியை சேர்த்தால் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.
15. பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையும் கடுகிற்கு உண்டு.
16. கடுகு விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
17. கருப்பு கடுகு விதையை தாளிப்பதற்கு பயன்படுத்துவார்கள். மஞ்சள் நிற விதையிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. வட இந்தியாவில் இருப்பவர்கள் கடுகு எண்ணெயில் தான் சமையல் செய்வார்கள். இந்த எண்ணெயில் omega 3 இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது.
18. உடம்பில் வலி இருந்தால் இந்ந எண்ணெயை சூடு செய்து தடவினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
19. சளி தொல்லை இருப்பவர்கள் இந்த எண்ணெயோடு ஒரு பல் பூண்டையும் போட்டு சுட வைத்து நெற்றியிலும் மார்பு பகுதியிலும் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
20. கடுகு எண்ணெயை உபயோகித்தால் சருமம் பொலிவு பெறும்.
இத்தனை பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் கடுகில் நிறைந்திருப்பதால் தான் நம் முன்னோர்கள் எல்லா உணவிலும் கடுகை தாளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
கடுகு சிறிது எனினும் அதன் காரம் பெரிதன்றோ.... என்ற வாக்கியத்திற்கான அர்த்தம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.