Woman Liver Cirrhosis Symptoms: ஒருவர் வாழ்வதற்கு கல்லீரல் மிகவும் இன்றியமையாத ஒரு உறுப்பாகும் . கல்லீரல் தனது செயல்பாட்டின் மூலம் இதயம் , சிறுநீரகம் , மூளை ஆகிய முக்கிய ராஜ உறுப்புகளை பாதுகாக்கிறது. கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் , ஒருவரின் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும் . கல்லீரல் வயிற்றின் மேல் வலது பக்கத்தில், உதரவிதானத்திற்குக் கீழே உள்ளது. இது மனித உடலின் மிகப்பெரிய உள் உறுப்பு ஆக இருக்கிறது. இதன் சராசரி எடை 1.5 கிலோவாக இருக்கும்.
உடலில் சேரும் நச்சுக்களை நீக்குவது இதன் முதன்மை பணியாக உள்ளது. கல்லீரல், உடனடியாகக் கிடைக்கும் ஆற்றலுக்காக கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது குளுக்கோஸை கிளைகோஜனாக மாற்றுகிறது. இரத்த சர்க்கரை அளவு குறையும் போது, கிளைகோஜன் மீண்டும் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு , புரதம் ஆகியவற்றை பராமரிக்கும் அமைப்பாகவும் கல்லீரல் உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் , மாறிவரும் வாழ்க்கை சூழல் காரணமாக பாதிப்படைகிறது. முன்பெல்லாம் மது அருந்தும் ஆண்களை மட்டுமே பாதித்த கல்லீரல் அழற்சி நோய் தற்போது பெண்களையும் பாதிக்கிறது.
உணவு பழக்க முறைகளால் பெண்களுக்கு கல்லீரல் அழற்சி நோய் வருகிறது. அதிக கொழுப்பு மிக்க உணவு வகைகளை சாப்பிடுவது கல்லீரலில் அதிகளவில் கொழுப்பை சேர்க்கிறது. கல்லீரலில் கொழுப்பு படிவதால் அதன் செயல்பாடுகள் குறைகின்றது. இது மட்டும் இல்லாமல் , ஹைப்பாட்டிடிஸ் வைரஸ் தொற்று ஏற்படும் போது அது கல்லீரலில் சேதத்தை ஏற்படுத்துகிறது.ஒரு சிலருக்கு மரபணு ரீதியாக கல்லீரல் அழற்சி வருகிறது. சில நேரங்களில் அதிகப்படியாக மருந்து உட்கொள்பவர்களுக்கும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன .
இது போன்ற சூழலிலும் பெண்களுக்கு கல்லீரலை பாதிக்கும் அழற்சி வருகின்றது. ஆரம்ப காலக் கட்டத்திலேயே இந்நோயை கண்டுபிடித்து விட்டால் , அதற்கு தகுந்த மருத்துவம் பார்த்து விரைவிலேயே குணப்படுத்தி விட முடியும் . எதையும் கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டால் அது உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும் .
ஒரு சில அறிகுறிகளை வைத்து கல்லீரல் அழற்சியை முன்கூட்டியே பெண்கள் கண்டறிந்து , அதிலிருந்து விரைவில் விடுபட முடியும் . இந்த அறிகுறிகள் நோயின் தன்மைக்கு ஏற்ப சில நேரங்கள் மாறுபடும்.
கல்லீரல் அழற்சியின் அறிகுறிகள் (woman liver cirrhosis symptoms):
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படுதல்
கண்ணின் வெண்விழிப் படலம் மஞ்சள் நிறமாக மாறுதல்
சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல்
அடிக்கடி வாந்தி , குமட்டல் , வயிற்றுப் போக்கு ஏற்படுதல்
பசியின்மை , அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக எடை குறைதல்
வயிறு பெரிய அளவில் உப்புதல் , கல் போன்று கடினமாக காணப்படுதல் .
மேல் வயிற்றின் வலது பக்கத்தில் வலி ஏற்படுதல்
கண் பார்வை அடிக்கடி மங்குதல்
உடலில் இரத்த அளவு குறைந்து , இரத்த சோகை நோய் ஏற்படுதல்
அடர் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்
இரவில் தூக்கமின்மை
மாத சுழற்சி தள்ளி போதல் அல்லது ஒழுங்கற்று இருத்தல்
கை , கால்களில் வீக்கம் ஏற்படுதல்
எப்போதும் சோர்ந்து காணப்படுதல்
இது போன்ற அறிகுறிகள் பெண்கள் கல்லீரல் அழற்சிக்கு ஆளானதை எச்சரிக்கின்றன. இந்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டு பெண்கள் உடனடியாக மருத்துவரை நாடுவது நலம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)