பெண்களே உஷார்! வைட்டமின் டி குறைபாட்டில் அலட்சியம் காட்டாதீர்கள்!

பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடுகள் பல ஆரோக்கிய கோளாறுகளை வரவழைத்து உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.
Vitamin D
Vitamin D
Published on

சமீப காலமாக தொடர்ச்சியாக பெண்களிடையே வைட்டமின் டி குறைபாடு அதிகரிப்பது தொடர்கதையாகி வருகிறது. இன்றைய வாழ்க்கை முறை தான் இந்த குறைபாடுகளுக்கு காரணமாக உள்ளது. பெண்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீண்ட நேரமாக சூரிய வெளிச்சம் இல்லாத அறைகளில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. சூரியன் நன்கு உதிக்கும் முன் வேலைக்கு கிளம்பி விடுவதாலும், சருமத்தில் சூரிய ஒளியை இவர்கள் பெறுவது குறைகிறது. தற்போது மகளிர் தினமும் சன் ஸ்கிரீனை பயன்படுத்துவது வழக்கமாகி விட்டதால், அதன் காரணமாகவும் விட்டமின் டி கிடைப்பது கடினமாகிறது.

பெண்களுக்கு இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகள், பால் மற்றும் பால் பொருட்களின் குறைந்த அளவிலான நுகர்வுகள், உடல் பருமன், ஹார்மோன் சமநிலை இல்லாமல் இருத்தல் ஆகியவையும் வைட்டமின் டி குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. இந்த குறைபாடுகள் பல ஆரோக்கிய கோளாறுகளை வரவழைத்து உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

வயது அதிகமாகும் போது உடல் வைட்டமின் டி உற்பத்தி செய்வதையும் குறைக்கிறது. மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களில் அதிக நேரம் செலவழிப்பதும், உடல் செயல்பாடு குறைவதாலும் பல உடல்நல குறைபாடுகள் தோன்றுகின்றன.

இதையும் படியுங்கள்:
வைட்டமின் டி உடலுக்கு ஏன் அவசியமாகிறது?
Vitamin D

வைட்டமின் டி குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள்:

ஆரம்ப நிலை அறிகுறிகளாக பெண்களுக்கு தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம் இருக்கலாம். உடல் வலி, கைகால் வலி, மூட்டு வலி போன்ற எலும்பு சார்ந்த வலிகளை பெண்கள் அனுபவிக்கலாம். வைட்டமின் டி குறைபாடு காரணமாக ஒரு சில பெண்களுக்கு அடிக்கடி சளியும், நோய் தொற்றும் ஏற்படும். சில நேரங்களில் மனச்சோர்வு, தூக்கமின்மை போன்ற உணர்வுகளும் கூட ஏற்படக்கூடும். இதன் காரணமாக தலைமுடி உடைவதும், உதிர்ந்து போவதுமாக இருக்கும்.

எலும்பு மெலிதல் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்:

55 வயதைக் கடந்த பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவதால், எலும்புகளின் வலிமை குறைய தொடங்குகிறது. உடலில் போதுமான அளவில் வைட்டமின் டி இல்லாவிட்டால் குடலால் கால்சியத்தை உறிஞ்ச முடியாது. இதனால் எலும்பு சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன.

தசை மற்றும் நரம்பு மண்டல நோய்கள்:

மூளையிலும் தசைநார்களிலும் வைட்டமின் டி ஏற்பிகள் உள்ளன. இவற்றிற்கு வைட்டமின் டி கிடைக்காவிட்டால் தசையின் வலிமை குறைந்து போகும், மேலும் நரம்பு மண்டல சமநிலை இழப்பு ஏற்பட்டு நடக்கும் போது அடிக்கடி தடுமாறி விழத் தொடங்குவார்கள்.

​நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்பு:

வைட்டமின் டி ஆனது உடலின் வெள்ளை அணுக்களை ஒழுங்குபடுத்தும் செயல்களை செய்கிறது, இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால், வைட்டமின் டி இல்லாத போது தன்னுடல் தாக்க நோய் மற்றும் சுவாச நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

கருவுறுதலில் தோல்வி:

சமீபத்திய சில ஆய்வுகள் கருவுறுதலுக்கும் வைட்டமின் டி க்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்புகளை உறுதிப்படுத்துகிறது. PCOS பாதிப்பு உள்ள பெண்களுக்கு வைட்டமின் டி சிகிச்சை அளிக்கப்பட்டபோது நேர்மறையான முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.

வைட்டமின் டி குறைபாட்டை நிவர்த்தி செய்வது எப்படி?

தினமும் காலையில் சூரிய ஒளி வந்ததும் 20 நிமிடங்கள், உடலில் சூரிய ஒளிபடும் அளவிற்கு நடமாட வேண்டும். தினசரி உணவில் பால் சார்ந்த பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். காளான்கள், கொழுப்பு நிறைந்த மீன்கள், சீஸ், ஓட்ஸ் போன்றவற்றில் இயற்கையாக வைட்டமின் டி கிடைக்கிறது. மேலும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் டி மாத்திரைகளும் எடுத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com