
பெண்கள் பெரும்பாலும் குடும்பம், வேலை என பல்வேறு பொறுப்புகளுக்கு இடையே தங்கள் உடல் நலத்தை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் இளம் பெண்கள் பலரும் ஹார்மோன் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். ஆரம்ப நிலையிலேயே இந்த அறிகுறிகளைக் கண்டறிவது மிகவும் முக்கியம்.
பல பெண்கள் தங்கள் உடல் உபாதைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்துகிறார்கள். ஆனால், சில அறிகுறிகள் தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளின் ஆரம்ப கட்டமாக இருக்கலாம். எனவே, பெண்கள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து, சில அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
முகத்தில் குறிப்பாக கன்னங்கள் மற்றும் தாடைப் பகுதியில் தொடர்ந்து பருக்கள் தோன்றுவது ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். இது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) போன்ற பிரச்சினைகளின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்த பருக்களுடன் உடல் எடை அதிகரிப்பும் இருந்தால் கூடுதல் கவனம் தேவை.
திடீரென அதிக முடி உதிர்வு ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது உடலில் இரும்புச்சத்து அல்லது புரதச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், நாள்பட்ட மன அழுத்தத்தின் காரணமாகவும் முடி உதிர்தல் ஏற்படலாம். எனவே, காரணமின்றி முடி கொட்டினால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
தொடர்ந்து சோர்வாக உணருவது பெண்களிடையே காணப்படும் பொதுவான பிரச்சனை. ஆனால், இது குறைந்த ஹீமோகுளோபின் அளவு, வைட்டமின் டி குறைபாடு அல்லது தைராய்டு பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, நாள்பட்ட சோர்வை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி மற்றும் அதிகப்படியான வயிற்று வலி போன்றவை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது PCOS போன்ற தீவிரமான பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். மாதவிடாயில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் அல்லது அதிகப்படியான வலி இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகள் மோசமான குடல் ஆரோக்கியம் அல்லது சில உணவு ஒவ்வாமைகளின் அறிகுறியாக இருக்கலாம். இந்த பிரச்சினைகள் தொடர்ந்தால், மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை மேற்கொள்வது முக்கியம்.
பெண்களே உங்கள் உடலில் இந்த மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் தயங்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பல பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உங்கள் ஆரோக்கியமே உங்கள் உண்மையான சொத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.