.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
இன்றைய காலகட்டத்தில் மனநல பிரச்னை என்பது பூதாகரமாக உள்ளது. ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பல வகையிலும் மனநல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை மனதிற்குள் வைத்து பூட்டி வைத்து வெளியே சொல்லாமல் இருப்பதுதான் முதல் காரணம்.
மனநல பிரச்னையில் ஆண்களை விட பெண்களே மூன்று மடங்கு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. இதை ஆரம்பத்திலேயே கவனிக்கவிட்டால் பெரிய அளவில் கொண்டு போய்விடும்.
பெண்களுக்கு பல நிலைகளிலும் மன அழுத்தம் ஏற்படுகிறது..
12 வயதில் ஏற்படும் பருவமாற்றம், குழந்தை பிறந்து பின் ஏற்படும் மாற்றம், மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் அழுத்தம் குடும்பத்தில் பிரச்னைகள், கணவன் மனைவி பிரச்னைகள் என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு தங்கள் மனதில் வைத்து பூட்டி வைத்துக் கொள்வதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இதற்கெல்லாம் காரணம் ஹார்மோன் மாறுபாடுகள்தான். அந்தந்த வயதுக்கு ஏற்ப ஹார்மோன் மாறுபடுவதால் பெண்கள் இது போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள்.
இவை தவிர சமூக மாற்றம், குடும்ப பிரச்னை வேலை பார்க்கும் இடத்தில் பிரச்னை என பல வகையிலும் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பெண்கள் அதிக கோபம் அடைகிறார்கள். கோபத்தை குறைத்துக் கொண்டு தங்கள் பிரச்னைகளை வெளியில் பகிர்ந்து கொண்டால் இவற்றில் இருந்து விடுபடலாம்.
வெளியே சொல்லாமல் தங்கள் பிரச்னைகளை மனதுக்குள் வைத்து பூட்டி வைப்பதால் தான் இது மாதிரி மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனால் தூக்கமின்மை உடல் சோர்வு மன அழுத்தம் இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது.
இதைத் தவிர திடீரென கோபப்படுவது, அழுவது, பேசாமல் இருப்பது, உடம்பு அசதி, உடல் சோர்வு, வலி போன்றவற்றின் காரணமாகவும் பெண்களுக்கு மன அழுத்தம்
ஏற்படுகிறது. இதற்கெல்லாம் தன் உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ தன் பிரச்னைகளை மனம் விட்டு பேச வேண்டும். இதன் மூலம் பாதி மன அழுத்தம் குறையும்.
நன்றாக புரதச்சத்து உள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் . வீட்டில் நேரம் கிடைக்கும் போது யோகா, தியானம் செய்யலாம். தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். அன்றைய பிரச்னைகளை அன்றே மறந்து விட வேண்டும். வீட்டில் இருக்கும்போது இசையை கேட்பது மனதுக்கு ஆறுதல் தரும். இதற்கு மேலும் பிரச்னை இருந்தால் ஒரு மனநல மருத்துவரை அணுகி அவரிடம் மனம் விட்டு பேசி ஆலோசனை பெறலாம்.
உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். இது ஆண்களுக்கும் பொருந்தும் பெண்களுக்கும் பொருந்தும். ஆனால், ஆண்களை விட பெண்களுக்கு மூன்று மடங்கு பாதிப்பு ஏற்படுகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். பெண்கள் தங்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)