
இன்றைய அதிவேக நவீன தொழில்நுட்ப உலகில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மன அழுத்தம் அவர்களைப் படாத பாடு படுத்துகிறது. எதற்கெடுத்தாலும் இந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருந்துவோர், முதலில் அதைப் பற்றிய அடிப்படை உண்மைகளை அறிந்து கொண்டு அதை எதிர்கொள்ள வேண்டும்.
இந்த மன அழுத்தம் ஏற்படுவது எதனால்?
வேலைப்பளு, பள்ளி, குடும்பம், ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகள், தினசரி நாம் செய்ய வேண்டியிருக்கும் கட்டாயமான வேலைகள் – இவற்றால் தான் பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
திடீரென்று வேலையை இழத்தல், மணமுறிவு, திடீரென்று ஏற்படும் உடல் பாதிப்புகள், வியாதிகள் – இவற்றாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
எதிர்பாராமல் ஏற்படும் விபத்து நம்மை நிலைகுலையச் செய்கிறது. போர், போராட்டங்கள், இயற்கைப் பேரிடர்கள் ஆகிய சூழ்நிலைகள் தோன்றும் போதும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
வேலையில் கொடுக்கப்படும் அழுத்தம் நிச்சயம் தேவை தான். அதுவே நமது திறமையைக் காட்ட உதவுகிறது. முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது. அதே போல அரசு மற்றும் சமுதாய தொடர்புகளில் உள்ள விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளும் தேவையே. இவற்றால் அலட்டிக் கொள்ளாமல் அதற்குத் தகுந்த முன்னேற்பாடுடன் அவற்றை எதிர்கொண்டால் அழுத்தம் நமக்கு நல்லதையே செய்யும்.
உடல் பாதிப்புகளை அலட்சியம் செய்யக் கூடாது. ஜீரணக் கோளாறுகள், தூக்கமின்மை, இடைவிடாத தலைவலி போன்றவற்றிற்கு தகுந்த டாக்டரை அணுகி உடனடியாக மருத்துவ உதவியை நாடினால் நீடித்த மன அழுத்தம் ஏற்படாது.
ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து எதனால் நமக்கு இந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்பதைச் சிந்தித்தாலேயே பாதி தீர்வு கிடைத்து விடும்.
இடைவிடாமல் சிகரெட் பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை விட்டு விட இப்போது நல்ல ஆலோசனைகளும் மருத்துவ தீர்வுகளும் உள்ளன. நல்ல டாக்டரையோ அல்லது ஒரு ஆலோசகரையோ அணுகுதல் இன்றியமையாதது.
தினமும் உடல்பயிற்சி குறைந்த பட்சம் 30 நிமிடங்களுக்குச் செய்தல் வேண்டும்.
யோகா, தியானம், தாய் – சி போன்ற அருமையான உத்திகள் மன ஓய்வுக்காகவும் மன சாந்திக்காகவும், உடல் மற்றும் மனத் திறனைக் கூட்டவும் உள்ளன. இவற்றை முறைப்படி கற்று அன்றாடப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இறை வழிபாடும் நல்லவர் சேர்க்கையும் மன அழுத்தம் போக்கவல்ல முக்கியமான வழிகளாகும்.
நல்ல நண்பர்களுடன் அன்றாட அரட்டையோ அல்லது குறிக்கோளுடன் கூடிய உரையாடலோ நல்லதையே செய்யும்.
அருமையான இசையைக் கேட்டல், நல்ல பத்திரிகைகள், மற்றும் புத்தகங்களைப் படித்தல் மனதுக்கு இதமளிப்பதோடு அறிவை வளர்க்கும் உத்திகளாகும்.
வாழ்க்கை லட்சியத்தை வரையறுத்துக் கொள்ளுதல், அதை நிறைவேற்ற இடைவிடாது பாடுபடுதல், எது முதலில் செய்ய வேண்டும், எவற்றை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பட்டியலிட ஒரு சில நிமிடங்களே ஆகும். FIRST THINGINS FIRST என்ற ஒரு உத்தியே போதும், - வாழ்க்கையை மேம்படுத்தி விடும்!
இவற்றையும் மீறி உள்ள தீவிரமான பிரச்னைகளை மன நல மருத்துவரே தீர்க்க முடியும்.