அலையும் மனதை அடக்கும் யோகா: ஸ்ட்ரெஸ்ஸில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களுக்கு மஸ்ட்!

தினசரி யோகா பயிற்சியானது, அலையும் மனதை நேர்வழிப்படுத்தி, உடலை நோயற்ற ஆரோக்கியமான வாழ்விற்கு இட்டுச் செல்கிறது.
Yoga
Yoga
Updated on

அலையும் மனதை அலைய விடாமல் நேர் வழிப்படுத்தவும், குறிப்பிட்ட கால அளவு வரை உடலை பயிற்சியில் ஈடுபட செய்யவும் உதவும் யோகா பல்வேறு வகை ஆசனங்களை கொண்டது.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்ட யோகாவை நடைமுறைப்படுத்தியவர் பதஞ்சலி முனிவர். யோக முத்ரா, வீராசனம், சர்வாங்காசனம், புஜங்காசனம், சிரசாசனம், தனுராசனம் என அநேக வகைகள் உள்ளன.

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணா, தியானம். சமாதி என்கிற எட்டு அங்கங்கள் கொண்டது யோகா.

இயமம்: பேராசை அற்ற தன்மை, உரிமை கொண்டாடாமல் இருத்தல்

நியமம்: போதுமென்ற மனம். கடவுளிடம் சரணாகதி.

ஆசனம்: அமர்தல், உடல்நிலைக் கட்டுப்பாடு.

பிராணாயாமம்: மூச்சை அடக்குதல்.

ப்ரத்யாஹாரம்: புற உலகப் பொருட்களில் இருந்து ஐம்புலன்களை விலக்குதல்.

தாரணா: மன ஒருமைப்பாடு.

தியானம்: உண்மைத் தன்மையை ஆய்ந்து சிந்தித்தல்.

சமாதி: உணர்வுகளை தியானிக்கும் பொருளுடன் இணைந்து விடுதல்.

கர்மயோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்கிற மூன்று முக்கியமான யோகாக்கள் பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரோக்கியத்தை முன்னேற்றும் வகையில் ஆரம்பமாகி, மோட்சத்தை அடைவது வரை யோகாவின் குறிக்கோள் அமைக்கப்பட்டுள்ளது.

யோகாவின் நன்மைகள்

உடல் நலம் பேண, பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்ய, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள, ரத்தத்திலுள்ள கொழுப்பை கரைத்து, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது.

சுய கட்டுப்பாடு, மன ஒருமைப்பாடு ஆகியவைகளை வளர்க்க யோகா பலவிதங்களில் உதவுகிறது. மேலும் பேறுகாலத்திற்கு முன்பாக பெண்கள் மேற்கொள்ளும் குறிப்பிட்ட யோகாசனம் பிரசவத்தை எளிதாக்குகிறது. மூச்சு பயிற்சி நம் நுரையீரல் நலத்தை மேம்படுத்துகிறது. இளையவர்கள் முறைப்படி செய்ய மனம் ஒருமைப்பட்டு சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். உடலை இலகுவாக்கி வாழ்க்கையை இனிமையாக்கும்.‌

இதையும் படியுங்கள்:
இந்த 10 விஷயங்கள் தெரிந்தால், இன்றே யோகா செய்ய ஆரம்பிப்பீர்கள்!
Yoga

வாழ்க்கைக்கு நலமளிக்கும் யோகாவை நாமும் கடைபிடித்து வளம் பெறுவோம்.

logo
Kalki Online
kalkionline.com