நம்மில் பலருக்கும் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபி குடித்த பின்தான் உலகமே இயங்க ஆரம்பித்த உணர்வு உண்டாகும். காபியில் அதிகளவு நிறைந்துள்ள காஃபின் என்ற பொருள் நாடி நரம்புகளையெல்லாம் உசுப்பேற்றி படபடப்புடன் கூடிய சுறுசுறுப்பு பெற்று அன்றைய தினசரி வேலைகளை ஆரம்பிக்க உதவும். படபடப்பின்றி காபியை அதன் நறுமணத்தோடு சுவைக்க விரும்பும் காபி பிரியர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமைந்துள்ளது இந்த ‘டீகாஃப்’ (Decaf) என சுருக்கமாக அழைக்கப்படும் டீகாஃபினேடெட் (Decaffeinated) காபி. இதில் காஃபின், அதிகளவு நீக்கப்பட்டு, ரெகுலர் காபியில் இருப்பது போல் இன்றி, மிகக் குறைந்த அளவே உள்ளது. ஊட்டச் சத்துக்களின் அளவை ஒப்பிடுகையில் ரெகுலர் காபி சிறந்ததா அல்லது டீகாஃப் சிறந்ததா என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
காஃபின் என்ற கரையக்கூடிய பொருள், கார்பன்டை ஆக்ஸைட் அல்லது சார்கோல் ஃபில்டர் போன்ற ரசாயன கரைப்பான் கொண்டு காபி பீன்ஸிலிருந்து நீக்கப்படுகிறது. காபி பீன்ஸை வறுத்து அரைப்பதற்கு முன்பே காஃபின் நீக்கப்பட்டு விடுகிறது. ஆனாலும், காஃபின் முற்றிலுமாக நீக்கப்படுவதில்லை. ஒரு கப் ரெகுலர் காபியில் 70 முதல் 140 mg காஃபின் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் டீகாஃப் காபியில் 0 முதல் 7 mg மட்டுமே காஃபின் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இரண்டு வகை காபியிலுமே ஊட்டச் சத்துக்களின் அளவு சமமாகவே உள்ளதென்றும், டீகாஃபினேட்டிங் செயல்பாட்டில் டீகாஃப் காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவு பதினைந்து சதவிகிதம் குறைந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. டீகாஃப் காபியில் மிகக் குறைந்த அளவே காஃபின் உள்ளதால் இந்த காபி கால்சியம், இரும்புச் சத்து மற்றும் B காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களை உடல் உறிஞ்சுவதற்கு சிறந்த முறையில் உதவி புரிகிறது.
ரெகுலர் காபியிலிருந்து இந்த நன்மைகளைப் பெற இயலாது. ரெகுலர் காபியில் உள்ள அதிகளவு காஃபின் வயிற்றில் அசிடிட்டி உண்டுபண்ணவும் நெஞ்செரிச்சல் உண்டாக்கவும் செய்யும். டீகாஃப் இவ்வித கோளாறுகளை உண்டுபண்ணுவதில்லை.
இரண்டுக்கும் மேற்பட்ட ரெகுலர் காபி குடிப்பதற்கு பதில் டீகாஃப் குடித்தால் கோலோரெக்டல் (colorectal) கேன்சர் வரும் அபாயம் 48 சதவிகிதம் குறைகிறது. ரெகுலர் காபியில் உள்ள காஃபின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் நல்ல தூக்கத்திற்கு இடையூறு உண்டுபண்ணவும் செய்யும். டீகாஃப் இவ்வித குறைபாடுகளை உண்டாக்காது.
ரெகுலர் காபி மெட்டபாலிசம் சிறக்கவும், அதிக விழிப்புணர்வுடன் செயல்படவும் உதவும். இருந்தபோதும் டீகாஃப், சுவையில் குறைபாடின்றி அதிக நன்மைகள் கொண்டுள்ளதால், ஒரு நாளில் நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட முறை காபி குடிப்பவர்கள் டீகாஃப் காபியை குடிக்க ஆரம்பிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.