பச்சையாகவோ, வறுத்தோ, வேக வைத்தோ, எண்ணெயில் பொரித்தோ எந்த வகையில் சாப்பிட்டாலும் புரதச்சத்து சிறிதும் குறையாமல் இருக்கும் உணவு வேர்க்கடலைதான். எப்படி சாப்பிட்டாலும் பலன் தருவது வேர்க்கடலையின் மகிமை. வேர்க்கடலை புரதம் மனித ஆரோக்கியத்திற்கும், தசை வளர்ச்சிக்கும் தேவையான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட து. வேர்க்கடலைக்கு 'ஏழைகளின் புரதம்' என்றொரு பெயர் உண்டு. காஸ்ட்லியான பாதாம், வால்நட்ஸை விட அதிக புரதச்சத்து வேர்க்கடலையில் இருக்கிறது.
ஸ்நாக்ஸ் கொரிப்பதற்கு சிலர் முந்திரிப்பருப்பு, நிலக்கடலை போன்றவற்றை தேர்வு செய்வார்கள். அதில் முந்திரியை விட நிலக்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள். 30 கிராம் முந்திரியில் கலோரி 188, புரோட்டீன் 5 கிராம், 15 கிராம் கொழுப்பு, 11 கிராம் கார்போஹைட்ரேட், 1 கிராம் நார்ச்சத்து மற்றும் 210 மில்லி கிராம் சோடியம் உப்பும் உள்ளது. அதோடு, 30 கிராம் நிலக்கடலையில் கலோரி 189, புரோட்டீன் 9 கிராம், கொழுப்பு 14 கிராம், கார்போஹைட்ரேட் 5 கிராம், நார்ச்சத்து 3 கிராம் மற்றும் 4 மி.கிராம் சோடியம் உப்பும் உள்ளது.
வேர்க்கடலையில் காணப்படும் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. இந்த கொழுப்புகள் நீடித்த ஆற்றலை வழங்குகின்றன மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்சுவதில் உதவுகின்றன. இதில் உள்ள வைட்டமின் ஈ ஒரு ஆன்டி ஆக்சிடண்ட்டாக செயல்படுகிறது, ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது. அதே நேரத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நரம்பு செயல்பாடு, தசை ஆரோக்கியம் மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.
அடிக்கடி நிலக்கடலையை சாப்பிடுகிறவர்களை ஆராய்ந்ததில் அவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும் அவர்கள் இதய நோயால் தாக்கப்படாமல் இருப்பதையும் அமெரிக்காவின் வான்டர்பெல்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வேர்க்கடலையில் ரெஸ்வெராட்ரோல் மற்றும் பி-கூமரிக் அமிலம் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இது வேர்க்கடலையை இன்னும் ஆரோக்கியமான உணவுத் தேர்வாக மாற்றுகிறது.
ஆயுளைக் கூட்டும் அற்புத ஆற்றல்களைக் கொண்ட நிலக்கடலையை தினமும் 10 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும் என்கிறார்கள் நெதர்லாந்து மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பச்சை நிலக்கடலையை வறுத்து சாப்பிடுவதால்தான் அதில் அலர்ஜி தன்மை ஏற்படுகிறது என்கிறார்கள் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். வேர்க்கடலையை யார், எப்படிச் சாப்பிடலாம் என ஒரு கணக்கு இருக்கிறது. வயதானவர்களுக்கு வேகவைத்துக் கொடுப்பதுதான் சிறந்தது. வறுத்த வேர்க்கடலை அவர்களுக்கு எளிதில் செரிமானமாகாது. குழந்தைகளுக்கும், வொர்க் அவுட் செய்வோருக்கும்கூட வறுத்த வேர்க்கடலையை விட வேகவைத்த வேர்க்கடலையே சிறந்தது.
தினமும் 50 கிராம் வேகவைத்த வேர்க்கடலைச் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்கிறார்கள் நியூயார்க் எல்பாசா பல்கலைக்கழக விஞ்ஞானிகள். வேகவைத்த வேர்க்கடலையில் விஷக் கிருமிகளை கொல்லும் ஆற்றல் அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு மற்றும் காய்கறிகள் மூலமாக உயிர் கொல்லி நோய்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற விஷக் கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தி வேர்க்கடலையில் அதிகமாக உள்ளது என்கிறார்கள். தினமும் 50 கிராம் வேகவைத்த வேர்க்கடலையை காலையில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். அத்துடன் உடல் இளமையோடும் இருக்கும் என்கிறது ஆய்வு.
வேர்க்கடலை சாப்பிட்ட பின் குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும். இயற்கையாகவே வேர்க்கடலை வறட்சித்தன்மை உடையது. அதனால்தான் வேர்க்கடலை சாப்பிட்ட உடன் தாகம் எடுக்கிறது. வேர்க்கடலை சாப்பிட்டால் சிலருக்கு பித்தம் அதிகமாகும். அதனால் எந்த வடிவில் வேர்க்கடலையை எடுத்துக்கொண்டாலும் அளவோடு சாப்பிட வேண்டியது முக்கியம்.