

நீரழிவு நோயாளிகள் கூட மறதியாக ஒருநாள் மாத்திரைகளை சாப்பிடாமல் இருக்க முடியும். ஆனால், உயர் இரத்த அழுத்த நோயாளிகள் ஒருநாள் மாத்திரையை மறந்தால் கூட கடும் விளைவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி, சர்வதேச அளவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 44% மக்கள், தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதே தெரியாமல் நீண்ட காலம் இருக்கின்றனர். வேறு சில மருத்துவ சந்தர்ப்பங்களில் தான், இதை அறிந்துக் கொள்கின்றனர்.
உயர் இரத்த அழுத்த நோயாளிகள் தவறாமல் மாத்திரையை தினமும் சாப்பிட வேண்டும். தினசரி மாத்திரை சாப்பிடும் வழக்கம் சலிப்பை ஏற்படுத்தும், நாம் நோயாளி ஆகிவிட்டோம் என்ற எதிர்மறை எண்ணத்தையும் ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தினசரி மாத்திரைக்கு தீர்வாக,'6 மாதத்திற்கு ஒருமுறை ஊசி போட்டால் போதும் , இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்கலாம்' என்ற செய்தி, மகிழ்ச்சியாக இருக்கும்.
அல்நைலம் (Alnylam) பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்த சில்பெசிரன் (zilebesiran bp injection) என்ற ஊசி தான் இரத்த அழுத்தத்தினை 6 மாதங்கள் கட்டுக்குள் வைப்பதாக கண்டறியப்பட்டது. இந்த மருந்து RNA தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அமெரிக்க இதய சங்கம் மற்றும் தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின் வெளியிட்ட ஆய்வுகளின்படி, மருத்துவ பரிசோதனையில் 394 நோயாளிகளுக்கு சில்பெசிரன் ஊசி செலுத்தப்பட்டது. ஒருமுறை இந்த ஊசி போட்டுக் கொண்ட மனிதர்களுக்கு 3 மாதங்களுக்கு பின்னர், அவர்களின் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் சராசரியாக 14mmHg முதல் 20 mmHg வரை குறைந்திருந்தது.
கல்லீரலில் உருவாகும் ஆஞ்சியோடென்சின் என்ற புரதம், இரத்த நாளங்களைச் சுருக்கி, உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சில்பெசிரன் ஊசி, இந்த புரதத்தினை உண்டாக்கும் 'மெசஞ்சர் ஆர்.என்.ஏ' (mRNA)-வை தற்காலிகமாகத் தடுக்கிறது. இதனால், உடலில் ஆஞ்சியோடென்சின் குறைந்து இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இரத்த அழுத்தமும் சீராக இருக்கிறது. இந்த ஆய்வுகள் வருடத்திற்கு இரண்டு ஊசிகளை உடலில் செலுத்திக் கொள்வதன் மூலம், ஆண்டு முழுக்க உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதற்குரிய மாத்திரைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும் என்று கூறுகிறது.
இது எப்போது சந்தைக்கு வரும்?
இந்த ஊசி இன்னும் சோதனை கட்டத்திலேயே உள்ளது. இந்த மருந்தின் நீண்ட கால விளைவுகள் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் தேவை. தற்போது இந்த மருந்து மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் உள்ளது. இதன் பாதுகாப்பு தன்மையை பலவித சோதனைகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் FDA வின் அனுமதியைப் பெற்று, சர்வதேச மருந்து சந்தைகளில் இந்த ஊசி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடைபெற்ற சோதனைகளின் அடிப்படையில் இந்த ஊசி கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றிற்கு பெரிய அளவில் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. இந்த மருந்து பயன்பாட்டிற்கு வந்தால், தினசரி மாத்திரை எடுக்கும் பழக்கத்திலிருந்து விடுபடலாம். உயர் இரத்த அழுத்தத்திற்கு ஊசி செலுத்திக் கொள்வதன் மூலம் இதயம், சிறுநீரகம், மூளை ஆகியவற்றின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)