அதானி குழுமம் முன்னணி செய்தி ஊடக நிறுவனமான IANS செய்தி நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கைப்பற்றி தன்வசம் ஆக்கி உள்ளது.
அதானி குழுமம் செய்தி ஊடக தொலைக்காட்சி நிறுவனங்களை தொடங்கவும், வாங்கவும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஏ.எம்.ஜி மீடியா நெட்வொர்க் என்ற ஊடக நிறுவனத்தை தொடங்கி ஊடகத்துறையில் கால் பதித்தது. அதன் பிறகு வர்த்தக மற்றும் பிசினஸ் ஊடக நிறுவனமான க்வின் டில்லியன் பிசினஸ் மீடியா நிறுவனத்தை வாங்கியது.
அதன் பிறகு புகழ்பெற்ற ஆங்கில செய்தி நிறுவனமான என்டிடிவியின் 65 சதவீத பங்குகளை கைப்பற்றி, அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது ஐஏஎன்எஸ் செய்தி ஊடக நிறுவனத்தின் 50.5 சதவீத பங்குகளை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாக முடிவையும் எடுக்கூடிய இடத்திற்கு அதானி குழுமம் வந்துள்ளது.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் வாரிய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பங்குகள் கைமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதே சமயம் எவ்வளவு தொகைக்கு நிறுவனத்தின் பங்கு வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஐ ஏ என் எஸ் நிறுவனத்தின் நிர்வாக முடிவுகள் மற்றும் இயக்குனர் நியமனம் உள்ளிட்ட அனைத்து அதிகாரமும் அதானி குழுமம் கைவசம் வந்துள்ளது.
மேலும் இந்நிறுவனம் அதானி குழுமத்தின் செய்தி ஊடக முதன்மை நிறுவனமான ஏ எம் ஜி மீடியா நெட்வொர்க்கின் துணை நிறுவனமாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.