Zepto 
பொருளாதாரம்

அதானி, அம்பானி வரிசையில் 21 வயது இளைஞர்கள்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

இந்தியாவில் பணக்காரர்கள் என்றால் நமக்கெல்லாம் உடனே நினைவுக்கு வருபவர்கள் அம்பானி மற்றும் அதானி தான். இவர்களைத் தவிர்த்து சில தொழில்துறை நிறுவனர்களும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்கள்‌. ஆனால் 21 வயது மற்றும் 22 வயது நிரம்பிய இரண்டு இளைஞர்கள் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. யார் அந்த இளைஞர்கள் இப்போதே தெரிந்து கொள்வோமா!

ஆண்டுதோறும் இந்தியாவில் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், இந்த வருடம் இரண்டு இளைஞர்கள் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பது இன்றைய இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் அறிக்கைப்படி கவுதம் அதானி இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தையும், முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மருந்து மாத்திரைகள் கூட எளிதாக கிடைத்து விட்டது. ஆனால், மளிகை சாமான்கள் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இதனை மனதில் வைத்து 2021 ஆம் ஆண்டில் மும்பையில் உதயமானது தான் ஜெப்டோ (Zepto) எனும் விரைவு வணிக செயலி. இதன் நிறுவனர் பெங்களூரைச் சேர்ந்த 21 வயதே ஆன இளைஞர் கைவல்யா வோரா, தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் செயலியின் பங்குதாரர் 22 வயதான இளைஞர் ஆதித் பலிச்சா தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களாக இருந்து, பாதியில் படிப்பை கைவிட்டவர்கள்.

கொரோனா காலத்தில் வீட்டிற்கே மளிகை பொருள்களை கொண்டு சேர்க்கும் தேவை அதிகமாக இருந்தது. ஏற்கனவே அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஜியோ மார்ட் உள்ளிட்ட முன்னணி ஆன்லைன் செயலிகள் இருந்தாலும், இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அசுர வளர்ச்சியை அடைந்தது ஜெப்டோ நிறுவனம். 'கான்டாக்ட்லெஸ் டெலிவரி' தான் இந்தச் செயலியின் அடிப்படை நோக்கம். இதற்கு ஏற்றாற் போல் ஜெப்டோ நிறுவனத்தை உருவாக்கி, மளிகைப் பொருள்களை வீட்டிற்கே கொண்டு போய் சேர்த்தனர் இந்த இரண்டு இளைஞர்கள்.

மூன்றே ஆண்டுகளில் இந்தியா முழுக்க அசுர வளர்ச்சியை அடைந்ததன் விளைவாக பல கோடி லாபத்தை ஈட்டியுள்ளது ஜெப்டோ நிறுவனம். இதன் காரணமாகத் தான் இளைஞர்கள் இருவரும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் கைவல்யா வோராவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.3,600 கோடி, பங்குதாரர் ஆதித் பலிச்சாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.4,300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளன. இளைய கோடீஸ்வரர் பட்டியலில் இவர்கள் இருவரும் முதலிரண்டு இடங்களைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.

தொழில் முனைவோருக்கான ஆர்வமும், புதிய யுக்தியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இந்த இரண்டு இளைஞர்கள் திகழ்கின்றனர்.

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

SCROLL FOR NEXT