Income 
பொருளாதாரம்

ஏற்றத்தாழ்வு வருமானம் உடையவரா நீங்கள்? கடன் வாங்கி உள்ளீர்களா? மீளுவது எப்படி?

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

ஏற்றத்தாழ்வு வருமானம் உடையவர் கடனில் இருந்து மீளுவது எப்படி?

நீங்கள் சொந்தமாக தொழில் புரிந்து, ஏற்றத்தாழ்வு உடைய வருமானத்தை கொண்டு உள்ளீர்களா? மேலும் கடன் வாங்கி உள்ளீர்களா?  உங்களுக்கு இந்தப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். 

நீங்கள் கடனிலிருந்து வெளிவர இரண்டு விஷயங்கள் முக்கியம்.

1. அதிகமாக சம்பாதிப்பது - இது அவ்வப்போது உங்களுக்கு நிகழ்கிறது. இன்னும் கூட, அதிகமாக சம்பாதிக்க வழிகளைப் பாருங்கள்.

2. சிக்கனமாக வாழ்வது - உங்களது செலவுகளை பட்டியலிடுங்கள். இதன் மூலம் உங்களது செலவுகளை எவ்வாறு கட்டுக்குள் வைக்கமுடியுமென்ற தெளிவு கிடைக்கும். நிதி திட்டமிடல் (பட்ஜெட்) செய்யுங்கள்.

ஏற்றத்தாழ்வு வருமானத்தில், எவ்வாறு நிதி திட்டமிடல் செய்வது?

உங்களுக்கு வருமானம் ஏற்றத் தாழ்வுடன் வருகிறது. குறைந்தபட்ச வருமானத்தைக் கொண்டு நிதி திட்டமிடல் செய்யுங்கள். உதாரணமாக, 6 மாதங்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஜனவரி - 1 இலட்சம்

பிப்ரவரி - 50 ஆயிரம்

மார்ச் - 1.5 இலட்சம்

ஏப்ரல் - 60 ஆயிரம்

மே - 80 ஆயிரம்

ஜூன் - 1.2 இலட்சம்

இப்போது, இதுவரை வந்த குறைந்தபட்ச வருமானம் = ரூபாய் 50 ஆயிரம். 

இதை உங்களது வருமானமாகக் கொண்டு, நிதி திட்டமிடல் செய்யுங்கள்.

ஏற்கனவே, உங்களுக்கு செலவுகளைக் குறித்த புரிதல் உள்ளது. உங்களது செலவுகளை, உங்களது குறைந்தபட்ச வருமானத்தைக் கொண்டு, நிதி திட்டமிடல் செய்யுங்கள்.

உங்களுடைய அடிப்படைத் தேவைகள் (உணவு, உடை, இருப்பிடம்), அடுத்தபடியான அவசியத் தேவைகள் (போக்குவரத்து, தொலைத் தொடர்பு, உபயோகங்கள் (மின்சாரம் போன்றவை)), நிறுவனத்தை நடத்துவதற்கான அவசிய செலவுகள், கடன் தவணைகள் போன்றவற்றைத் தவிர, மற்ற இதர செலவுகளுக்கு உங்களது நிதி திட்டமிடலில் பணத்தை ஒதுக்காதீர்கள். 

உங்களுடைய குறைந்தபட்ச வருமானத்திற்குள்ளாக, உங்களது செலவுகளை வைத்திருங்கள். இதற்கு நிதி திட்டமிடல் உதவும். அதாவது, உங்களது செலவுகள் ரூபாய். 50 ஆயிரத்திற்குள்ளாக இருக்குமாறு நிதி திட்டமிடல் செய்ய வேண்டும். செலவுகளை அதற்கேற்றவாறு குறைக்க முயலுங்கள். சிக்கனமாக வாழுங்கள்.

எவ்வாறு கடனிலிருந்து மீளுவது ?

இப்போது, உங்களுக்கு ஒரு மாதம் வருமானம் அதிகமாக வருவதாகக் கணக்கில் கொள்வோம். உதாரணமாக, 1 இலட்சம். இந்த உபரியான ரூபாய். 50 ஆயிரம் ரூபாயினை கடன்களை சீக்கிரமாக கட்டி முடிக்கப் பயன்படுத்துங்கள்.

நான் மேல் குறிப்பிட்ட முறை, அமெரிக்காவின் பிரபல நிதி மேலாண்மை நிபுணர் டேவ் ராம்சே பரிந்துரைப்பது.

கடன்களைப் பட்டியலிட்டு, குறைந்த கடன் முதல் அதிக கடன் வரை வரிசைபடுத்தி, ஒவ்வொன்றாக அடைத்து முடியுங்கள். இதற்கு கடன் பனிப்பந்து முறை (debt snowball) என்று பெயர்.

இவ்வாறு கடன்களைக் கட்டி முடிக்க, முடிக்க, கடனில்லாத மனிதராக மாறி, உங்களால் குறைந்தபட்ச வருமானத்திற்கு மேல் வரும் உபரி வருமானத்தைக் கொண்டு, வியாபாரத்தைப் பெருக்குவது, உங்களுக்கு பிடித்த சில விஷயங்களுக்கு நிதி ஒதுக்குவது என்று பின்னர் செய்யலாம்.

ஆனால், எந்த செலவானாலும், நிதி திட்டமிடலின் கீழ் தான் செய்ய வேண்டும். சிக்கனமாக வாழ்ந்தால் தான், பணக்காரராகத் தொடர முடியும்.

நீங்கள் சீக்கிரமாக கடன்களை அடைக்க வாழ்த்துகள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT