Common Mistakes to Avoid When Choosing Health Insurance 
பொருளாதாரம்

மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது இந்தத் தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!

கிரி கணபதி

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி காரணங்களால் மருத்துவக் காப்பீடு என்பது ஒருவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. உடல்நலக் காப்பீடு சார்ந்த விஷயங்கள் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அவற்றை தேர்ந்தெடுக்கும்போது அனைத்தையும் புரிந்துகொண்டு சரியான காப்பீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். இந்தப் பதிவில் ஒருவர் உடல்நலக் காப்பீடு எடுக்கும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

நோய்களை மறைப்பது: மருத்துவக் காப்பீடு எடுக்கும் பலர் செய்யும் பொதுவான தவறு, அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்களை மறைப்பதாகும். இப்படி உண்மையை மறைத்து மருத்துவ காப்பீடு எடுக்கும்போது, எதிர்காலத்தில் ஏதேனும் சுகாதாரத் தேவையின்போது நீங்கள் மறைத்த விஷயம் தெரிய வந்தால், உங்களது Claim ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே காப்பீட்டு நிறுவனத்திடம் எதையும் மறைக்காமல் உண்மையை சொல்வது நல்லது. 

சரியான கவரேஜ் தேர்ந்தெடுக்காமல்: மருத்துவக் காப்பீடு எடுப்பதற்கு முன் ஒருவரின் குறிப்பிட்ட சுகாதாரத் தேவைகளை மதிப்பிட்டு சரியான கவரேஜ் திட்டத்தை தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறாகும். உங்களது மருத்துவ வரலாறு, தற்போதைய நிலை மற்றும் எதிர்கால மருத்துவச் செலவுகள் போன்றவற்றை கண்காணித்து, உங்களது தேவைக்கு ஒத்துப்போகும் கவரேஜ் அடங்கிய திட்டத்தை தேர்வு செய்யவும். 

நெட்வொர்க் மருத்துவமனைகளை கவனிக்காமல் இருப்பது: நெட்வொர்க் மருத்துவமனை என்பது நீங்கள் எடுக்கும் மருத்துவக் காப்பீட்டை எந்த கட்டணமும் இன்றி ஏற்றுக்கொள்ளும் மருத்துவமனையாகும். எனவே உங்களது காப்பீட்டு திட்டத்தில் நீங்கள் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இடத்திற்கு அருகில் உள்ள நெட்வொர்க் மருத்துவமனை இருக்கிறதா என்பதை சரி பார்த்து திட்டத்தை தேர்வு செய்யவும். இதை நீங்கள் பார்க்கத் தவறினால், அவசர காலத்தில் சில நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிக்காமல் போவது:  மருத்துவக் காப்பீடு எடுக்கும் ஒவ்வொருவரும் அந்த காப்பீட்டின் கொள்கை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து புரிந்து கொள்வது அவசியம். கவரேஜ் வரம்புகள், விலக்குகள், ரைடர்ஸ், டாப் அப், செலவுகள் போன்றவற்றை கவனமாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காரணங்களை பற்றி அறிந்திருப்பது உங்களுக்கு மருத்துவத் தேவை ஏற்படும்போது காப்பீடு நிராகரிக்கப்படாமல் இருக்க உதவும். 

ஒப்பிட்டு பார்க்காமை: நீங்கள் இப்போதுதான் முதல் முறை மருத்துவக் காப்பீட்டு எடுக்கப் போகிறீர்கள் என்றால், இன்சூரன்ஸ் ஏஜென்ட் சொல்லும் நிறுவனத்தை கண்முடித்தனமாக நம்பாதீர்கள். நீங்களாகவே இணையத்தில் தேடிப் பார்த்து பல நிறுவனங்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கவும். இப்படி செய்யாத பட்சத்தில் நல்ல அம்சங்கள் கொண்ட காப்பீடு திட்டங்களை நீங்கள் இழக்க நேரிடலாம். நீங்கள் முதலீடு செய்யும் பிரீமியம் தொகையை தாண்டி, கவரேஜ் நன்மைகள், நெட்வொர்க் மருத்துவமனைகளின் அளவு, வாடிக்கையாளர் மதிப்பு, நற்பெயர் போன்ற அனைத்தையும் தேடிப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

எதிர்கால மாற்றங்களை கண்டுகொள்ளாமை: வாழ்க்கை என்பது எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது. இப்போது நீங்கள் நன்றாக இருப்பீர்கள், உங்களுக்கு குறைந்த கவரேஜ் தேவைப்படலாம். ஒருவேளை எதிர்காலத்தில் உங்களது வேலையில் மாற்றம், ஓய்வு பெறுவது, குடும்ப பிரச்சினைகள் போன்ற எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்களை பற்றியும் சற்று சிந்திக்கவும். இந்த மாற்றங்கள் உங்களது சுகாதாரத் தேவையை எப்படியெல்லாம் பாதிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, கவரேஜ் திட்டத்தை சரியாகத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த பொதுவான தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம் நீங்கள் சரியான முடிவை எடுத்து, மருத்துவக் காப்பீட்டின் எல்லா நன்மைகளையும் பெற முடியும். இது உங்களது தேவையை பூர்த்தி செய்து, மருத்துவ தேவை உள்ள காலங்களில் மன அமைதியை கொடுத்து நிதி சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.  

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT