இந்திய ரூபாயைக் குறிக்கும் ₹ என்ற சின்னத்தை உருவாக்கியவர் ஒரு தமிழர் என்பது இங்கு எத்தனைப் பேருக்குத் தெரியும். ஆம், ரூபாயை உணர்த்தும் இந்த டிசைன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரால் எப்படி உருவானது என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
பொதுவாக இந்திய நாணயத்தை மதிப்பிட ரூபாய் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய நாணயத்தின் சின்னத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய நாணயத்தை வடிவமைக்கும் போட்டியை அறிவித்து, நாடு முழுவதும் உள்ள வடிவமைப்பாளர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இந்தப் போட்டியில் சுமார் 3,000 வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஆனால், இதில் வென்றவர் ஒரு தமிழர். நாடு முழுவதும் நடைபெற்ற ஒரு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெறுவது என்பது ஒட்டுமொத்த தமிழர்களுமே பெருமைப்படக் கூடிய விஷயமாகும்.
வரலாற்றில் ஒருமுறை மட்டுமே ஒரு நாட்டின் நாணயச் சின்னம் உருவாக்கப்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தையே இந்த ஒற்றைச் சின்னம் தான் உலகமெங்கும் எடுத்துச் செல்லும். இப்படி நாட்டின் வரலாற்றில் இடம் பிடிக்கும் ஒரு போட்டியில் வெல்ல யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆகையால் தான் இத்தனைப் பேர் இதில் கலந்து கொண்டனர். ஆனால் வடிவமைப்புத் திறனில் திறமையோடு, அறிவுக்கூர்மையும் வேண்டும் என்பதை நிரூபித்துக் காட்டினார் உதயகுமார் தர்மலிங்கம். ஆம், இந்திய நாணயத்தை உலகெங்கும் பிரதிபலிக்கும் ₹ என்ற சின்னத்தை வடிவமைத்த தமிழர் இவர் தான். 2009 இல் நடந்த இப்போட்டியின் முடிவு பலகட்ட தேர்வுகளின் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டு வெளியானது.
இந்திய மொழிகளை எழுத உதவும் தேவநாகரி (Devanagari) என்ற எழுத்து முறையில் “Ra” மற்றும் ரோமன் எழுத்து “R”-ஐப் பயன்படுத்தி உதயகுமார் வடிவமைத்த இந்திய நாணயச் சின்னம் தான் ₹ என்ற சின்னம். இந்தச் சின்னம் தான் தற்போது வரை இந்தியப் பணத்தை பிரதிபலிக்கப் பயன்பட்டு வருகிறது. டாலர், யென் மற்றும் யூரோ போன்ற உலக நாடுகளின் நாணயச் சின்னங்களின் வரிசையில் இந்திய நாணயச் சின்னமும் இணைந்திருப்பது இந்தியப் பொருளாதார வரலாற்றில் மிக முக்கியத் திருப்புமுனையாகும். இந்திய வரலாற்றை இனி உதயகுமாரின் பெயர் இல்லாமல் எழுதவே முடியாது. அந்த அளவிற்கு இவரது சாதனை வரலாற்றில் பேசப்படும் என்பது உறுதி.
சென்னையில் வசித்து வந்த உதயகுமாரின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் இருக்கும் மரூர் ஆகும். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்த இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதன் பின், மும்பை ஐஐடி-யில் தொழில் வடிவமைப்பு பிரிவில் விஷுவல் கம்யூனிகேஷன் முதுகலைப் பட்டத்தையும், பி.எச்டி பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.