Gold vs Post office 
பொருளாதாரம்

தங்கமா? அஞ்சல் சேமிப்பா? முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

ரா.வ.பாலகிருஷ்ணன்

முதலீடு செய்யும் எண்ணம் நமக்கு வந்து விட்டால், சில கேள்விகளும், குழப்பங்களும் கூடவே சேர்ந்து வரும். எங்கு முதலீடு செய்வது? எப்படி முதலீடு செய்வது? இதுபோன்ற பல கேள்விகள் நமக்குள் எழும். இதற்கெல்லாம் விடையறிந்து கொள்ளாமல் முதலீடு செய்வதும் தவறு. சிலருக்கு தங்க முதலீட்டில் ஆர்வம் இருக்கலாம்; அதேநேரம் அதிக வட்டி தரும் அஞ்சல் அலுவலக சேமிப்பும் பலன் தரும் என நினைக்கலாம். இருப்பினும் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால், எதைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்படுவது இயல்பு தான்.

பெரிய அளவில் முதலீடு செய்பவர்களுக்கு எந்தவிதக் குழப்பமும், பிரச்சினையும் இருக்காது. ஏனெனில், அவர்கள் பல திட்டங்களில் முதலீடு செய்திருப்பார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்குத் தான் குழப்பம் அதிகமாக இருக்கும். நமது பணம் பாதுகாப்பாக இருக்குமா என்பதில் தொடங்கி எப்போது கைக்கு பணம் கிடைக்கும் என்பது வரை இந்தக் கவலை நீடிக்கிறது.

தங்கத்தின் தொடர் விலையேற்றம், பலரையும் முதலீடு செய்ய ஈர்க்கிறது. இப்போதே ஒரு சவரன் தங்க நகை ரூ.60,000-ஐ தொட இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 30 சதவிகிதத்திற்கும் மேல் உயரும் என்று பொருளாதார வல்லுநர்களும் கணித்துள்ளனர். இந்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்தால் நிச்சியமாக வருங்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். தங்கத்தை நகையாக வாங்குவது நல்லதா அல்லது தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வது நல்லதா என்றும் சிலருக்கு சந்தேகம் ஏற்படலாம்.

தங்கப் பத்திர முதலீட்டை மத்திய அரசே ஏற்று நடத்துவதால், இதுவும் பாதுகாப்பான மற்றும் நல்ல இலாபம் தரக்கூடிய முதலீடு தான். நகையாக வாங்கி பிற்காலத்தில் அதனை விற்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு தங்க நகை முதலீடு நல்ல பலனளிக்கும். தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே தான் இருக்கப் போகிறது. ஆகையால் தங்கத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்து விட்டால் உடனே செய்து விடுங்கள்.

அஞ்சல் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால், நமது முதலீட்டிற்கு எவ்வித பாதிப்பும் நேராது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீண்ட காலத் திட்டத்திற்கு அஞ்சல் சேமிப்பு கைக்கொடுக்கும் என்பதையும் மறக்கக் கூடாது. மற்ற நிதி நிறுவனங்களை விடவும் அஞ்சல் அலுவலகத்தில் வட்டி அதிகம். அதிலும் பெண்களுக்காக சிறப்புத் திட்டங்களும் உள்ளன. குறைவான வருமானம் கொண்டவர்கள் முதலில் ரெக்கரிங் டெபாசிட்டில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, அதில் கிடைக்கும் முதிர்வுத் தொகையை பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும்.

முதலீடு செய்ய முடிவெடுத்த பிறகு, தங்கம் வாங்குவதா அல்லது அஞ்சல் அலுவலகத்தில் முதலீடு செய்வதா என்ற குழப்பமே வேண்டாம். முடிந்தால் இரண்டிலுமே முதலீடு செய்யுங்கள். உங்களிடம் மொத்தமாக பணம் இருந்தால் தங்கத்தில் முதலீடு செய்யலாம். ஒருவேளை நீங்கள் குறைவான வருமானம் கொண்டவராக இருந்தால் அஞ்சல் சேமிப்பில் சிறுகச் சிறுக சேமிக்கலாம். இரண்டு விதமான முதலீடும் நாளைய எதிர்காலத்திற்கு உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT