ஓய்வு காலத்தில் எந்தச் சிரமுமின்றி வாழ இப்போதே முதலீடு செய்வது தான் நல்லது. ஓய்வு கால முதலீட்டைப் போன்றே, நாம் தற்போதைய மற்றும் குறுகிய காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு 3 பக்கெட் பிளான் எப்படி உதவுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
3 பக்கெட் பிளான் என்பது ஒரு முதலீட்டு அணுகுமுறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஓய்வு கால முதலீடு, உடனடித் தேவைக்கான முதலீடு மற்றும் குறுகிய கால முதலீட்டை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி நாம் 3 தனித்தனியான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு நம் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உதவியாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்ப பணத்தேவை என்பது மாறுபடும். நமது பணத்தேவையைப் பொறுத்தும், வருமானத்தைப் பொறுத்தும் தான் பக்கெட் பிளானில் முதலீடு செய்ய வேண்டும்.
முதல் பக்கெட்:
மருத்துவ செலவுகள், திடீர் செலவுகள் மற்றும் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முதல் பக்கெட்டில் முதலீடு செய்யலாம். இவை உடனடித் தேவையை முன்வைப்பதால், பாதுகாப்பான முதலீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன்படி அஞ்சல் சேமிப்புத் திட்டம், குறுகிய கால பிக்சட் டெபாசிட் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
இரண்டாவது பக்கெட்:
நடுத்தர அல்லது குறுகிய காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரண்டாவது பக்கெட்டில் முதலீடு செய்யலாம். அடுத்து வருகின்ற 5 முதல் 10 ஆண்டுகளில் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க இந்த முதலீடு நமக்கு உதவும். ஆகையால் குறுகிய கால வைப்புத் தொகைத் திட்டங்கள், அரசு சிறுசேமிப்புத் திட்டங்கள் மற்றும் பத்திர முதலீட்டுகளில் கவனம் செலுத்தலாம். பயணச் செலவுகள் மற்றும பொழுதுபோக்கு செலவுகளுக்காக கூட இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மூன்றாவது பக்கெட்:
நீண்ட கால முதலீடுகள் மூன்றாவது பக்கெட்டில் அடங்கும். ஓய்வு காலத்திற்குப் பிறகு நிலையான வருமானத்தை இது உறுதி செய்கிறது. யாரையும் நம்பி நாம் இருக்க வேண்டிய சூழல் இருக்காது. நமக்கான தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்ள இந்த முதலீடு உதவுகிறது. ஆகையால், நீண்ட கால முதலீடுகளில் மியூச்சுவல் ஃபண்ட்கள், தங்க முதலீடுகள் மற்றும் வைப்புத் தொகைத் திட்டங்களில் நாம் கவனம் செலுத்தலாம்.
பக்கெட் பிளான்களைத் தேர்ந்தெடுப்பது நம்முடைய விருப்பம் தான். இருப்பினும், நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் விரைவில் சேமிப்பைத் தொடங்குவது தான் புத்திசாலித்தனம். வீண் செலவுகளைக் குறைத்து, முதலீடுகளில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் வருங்காலம் சிறப்புற அமையும். ஒருவேளை உங்களால் மூன்று விதமான முதலீடுகளில் சேமிக்க முடியவில்லை எனில், குறைந்தபட்சம் ஒரு திட்டத்திலாவது முதலீட்டைத் தொடங்குங்கள்.