அரசு ஊழியர்களுக்காக மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது? இது அரசு ஊழியர்களுக்கு எவ்வகையில் பலன் அளிக்கும் போன்ற பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இதற்கு பதிலளிக்கும் விதமாக இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை இப்போது காண்போம்.
அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் பென்சன் தொகை தான் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே இருந்த பென்சன் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்து, புதிய பென்சன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. ஆனால், இத்திட்டத்தில் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பல முக்கிய அம்சங்கள் இடம் பெறாததால் இந்தியா முழுக்கவும் எதிர்ப்பலைகள் கிளம்பின. எங்களுக்கு பழைய பென்சன் திட்டம் தான் வேண்டும் என பல மாநிலங்களில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருந்தது மத்திய அரசு.
ஒருசில மாநிலங்களில் மட்டும் தேர்தல் வாக்குறுதியாக பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமலுக்கு வரும் எனக் கூறின. இதில் ஓரிரு மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தியும் காட்டின. தமிழ்நாட்டில் புதிய பென்சன் திட்டம் தான் தற்போது வரைத் தொடர்கிறது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெறும் ஊழியர்கள் அதிலேயே தொடர்வார்கள். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான விருப்பத்தைத் தெரிவிக்கலாம். பின்னர் இவர்களின் தகுதிகள் உறுதி செய்யப்பட்டு, அடுத்த ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள்.
முக்கிய அம்சங்கள்:
1 .25 ஆண்டு கால பணிக்காலம் முடிந்து அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்றால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் படி, அவர் கடைசியாக வாங்கிய 12 மாத அடிப்படைச் சம்பளத்தின் சராசரியில் 50% நிலையான ஓய்வூதியம் அளிக்கப்படும்.
2. இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர் இறந்து போகும் பட்சத்தில், அவரது குடும்பத்தாருக்கு குடும்ப ஓய்வூதியமாக 60% வழங்கப்படும்.
3. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அவ்வப்போது அகவிலைப்படியும் கொடுக்கப்படும்.
4. ஒரு அரசு ஊழியர் 10 ஆண்டுகளில் ஓய்வு பெற்றால், குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.10,000 மற்றும் அகவிலைப்படி ரூ.5,000 என மொத்தமாக ரூ.15,000 வழங்கப்படும்.
5. அரசு ஊழியர் ஓய்வு பெறும் சமயத்தில் பணிக்கொடையைத் தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படும். இது ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பத்தில் ஒரு பங்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.