Management 
பொருளாதாரம்

மேலாண்மை நிர்வாகத்தில் முன்னேறுவது எப்படி?

ச. நாகராஜன்

சில சின்ன நீதிகளைப் பார்க்கலாமா? வேறொன்றுமில்லை மேலாண்மை நிர்வாகத்தில் – மானேஜ்மென்டில் - முன்னேறுவதற்காகத் தான்!

1. சும்மா உட்காரும் இடம்!

காகம் ஒன்று உயரமான மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தது. நாள் முழுவதும் அது ஒன்றுமே செய்யவில்லை. சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது ஒரு முயல். 

அது காகத்தைப் பார்த்துக் கேட்டது: “நானும் உன்னைப் போலவே நாள் முழுவதும் சும்மாவே உட்கார்ந்திருக்கவா?"

உடனே காகம் சொன்னது: “ஏன் முடியாது? உட்கார்ந்திருக்கலாமே?”

ஆகவே உடனே முயலும் மரத்தின் அடியில் சும்மாவே உட்கார்ந்திருந்தது.

அப்போது திடீரென்று அங்கு வந்த நரி ஒன்று முயல் மீது பாய்ந்து அதை ஒரே அடியில் கொன்றது; தின்றது!

இதில் என்ன மேலாண்மை நீதி பொதிந்து இருக்கிறது?

ஒரு வேலையும் செய்யாமல் சும்மாவே உட்கார்ந்திருக்க நீ மிக மிக மேலான உயரத்தில் இருக்க வேண்டும். (அதாவது கம்பெனி சேர்மனாகவோ அல்லது சி இ ஓ ஆகவோ இருக்க வேண்டும்!)

2. யாரிடம் மோதுகிறோம் என்பதை யோசித்துப் பேசு!

இரண்டு சண்டைக் கப்பல்கள் ஒத்திகைக்காக கடலில் விடப்பட்டன. கடுமையான கால நிலை. கிட்ட இருக்கும் எதையும் கூடச் சரியாகப் பார்க்க முடியாத படி பனி மூட்டம்!

ஆகவே கப்பலின் காப்டன் மேல் தளத்திற்கு வந்து தானே அனைத்தையும் பார்க்க ஆரம்பித்தான்.

இருள் சூழ்ந்தது. மேல் தளத்தில் இருந்த ஒருவன் காப்டனிடம், “காப்டன், எதிரில் ஒரு வெளிச்சத்தைப் பார்க்கிறேன்.” என்றான்.

காப்டன் கேட்டான் : “அந்த வெளிச்சம் நகர்கிறதா அல்லது ஒரே இடத்தில் இருக்கிறதா?”

“ஒரே இடத்தில் இருக்கிறது காப்டன்” என்று பதில் வந்தது.

அப்படியானால் ஒரு அபாயகரமான மோதல் ஏற்படப்போகிறது! உடனே காப்டன், சிக்னல்மேனை அழைத்தான்; உரக்கக் கூவினான்:  "எதிரில் வரும் கப்பலுக்கு ஒரு சிக்னலைக் கொடு. இப்படியே போனால் மோதப்போகிறோம். ஆகவே அதை 20 டிகிரி திருப்பி விடச் சொல்.”

உடனே பதில் சிக்னல் வந்தது: “நீ உன் வழியை 20 டிகிரி மாற்றிக் கப்பலைத் திருப்பிச் செல்.”

கப்பல் காப்டனுக்கும் பெரும் கோபம் வந்தது: “என்னையா மாற்றிப் போகச் சொல்கிறாய்! நான் பெரிய சண்டைக் கப்பலின் காப்டன்! என்ன ஆகும் தெரியுமா? மரியாதையாக மாற்றிச் செல்.”

உடனே பதில் வந்தது: “நான் லைட் ஹவுஸ். என்னால் மாற முடியாது நான் உனக்கு வழிகாட்டி! நீ தான் மாறிப் போக வேண்டும்!”

நீதி: யாரிடம் எதைப் பேசுகிறோம் என்பதை நன்கு யோசித்துப் பேசு. இல்லையேல் விளைவு விபரீதமாகத் தான் இருக்கும்!

3. பிரச்சினையை எதிர் கொண்டு கலங்காமல் இருப்பது தான் அமைதி

அரசன் ஒருவன் ஒரு முறை தனது அரசாங்கத்தில் ஓவியர்களுக்கான ஒரு போட்டியை அறிவித்தான். அமைதியை நன்கு சித்தரிக்கும் ஓவியத்திற்கு நூறு பொற்காசுகள் தரப்படும் என்று தண்டோரா போட்டு அறிவித்தான். ஓவியங்கள் வந்து குவிந்தன. அவற்றில் இரண்டை நடுவர்கள் தேர்ந்தெடுத்து அரசனிடம் இறுதி முடிவை எடுக்குமாறு கூறினர்.

இரண்டு படங்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத் தான் இருந்தன.

முதல் படத்தில் ஒரு அழகிய பிரம்மாண்டமான ஏரி. அதைச் சுற்றி அற்புதமான பெரிய மலைகள். மேலே அழகிய நீல வானம். எங்கும் அமைதி.

அடுத்த படம் அதே போலத் தான் இருந்தது. பிரம்மாண்டமான ஏரி. சுற்றி கடுமையான பாறைகளை உடைய மலைகள். ஆனால் வானத்தில் கரும் மேகங்கள் இருக்க மழை பொழிந்து கொண்டிருந்தது. மின்னல் பளீர் பளீரென்று வீசிக் கொண்டிருந்தது. மலையின் ஒரு புறத்திலிருந்து அருவி ஒன்று விழுந்து கொண்டிருந்தது. அரசன் அந்தப் படத்தை உற்றுப் பார்த்தான். அருவி கொட்டிக் கொண்டிருந்த போது அந்த பாறைக்குப் பின்னால் ஒரு சிறிய பொந்து இருந்தது. அதில் ஒரு பறவை கூடு கட்டி இருந்தது. தன் குஞ்சை அது அணைத்துக் கொண்டிருந்தது. ஒரே அமைதி!

அரசன் இரண்டாவது படமே சிறந்தது என்று கூறித் தன் முடிவை அறிவித்தான். அனைவரும் ஏன் என்று கேட்டனர்.

அதற்கு அரசன் கூறினான்: “அமைதி என்றால் சத்தமே இல்லாத இடத்தில், பிரச்சினையே இல்லாத இடத்தில், கடுமையான உழைப்பே இல்லாத இடத்தில் ஏற்படும் ஒன்று என்று அர்த்தமில்லை. அமைதி என்பது இவை அனைத்திற்கும் நடுவில் உன் மனதை அமைதியுடன் வைத்து வாழ்வது தான்; முன்னேறுவது தான். அதோ அந்தப் பறவையைப் பாருங்கள். இந்தக் கடுமையான சூழ்நிலையிலும் ஒரு கூட்டைக் கட்டித் தன் குஞ்சை அது எப்படிப் பாதுகாக்கிறது! இதுவே அமைதிக்கான சிறந்த ஓவியம்!”

அரசனின் முடிவை அனைவரும் மெச்சினர்.

நீதி: போட்டி மிகுந்த சூழ்நிலையில் தான் கம்பெனி வளரும். அப்போது இதயத்தை அமைதியுடன் உற்சாகமாக வைத்து சூழ்நிலையை எதிர்  கொள்ள வேண்டும்.

4. மாற்றி யோசி

ஒரு டூத் பேஸ்ட் கம்பெனியில் விற்பனை சற்று சரிந்து விட்டது. விலையைக் கூட்டினால் இன்னும் விற்பனை பாதிக்கும். டூத் பேஸ்ட் டியூபை பெரிதாக்கினாலோ அல்லது சிறிதாக்கினாலோ விலை கூடும் அல்லது குறையும்.

என்ன செய்வது?

தலைமை நிர்வாகி அனைவரையும் ஓரிடத்தில் கூட்டினார். இதற்கு என்ன செய்வது என்று யோசனை கேட்டார். சிறந்த யோசனைக்கு மாபெரும் பரிசு என்றும் அறிவித்தார்.

ஏராளமான யோசனைகள் கூறப்பட்டன.

ஆனால் மாற்றி யோசித்த ஒருவர், “என்னிடம் ஒரு சின்ன யோசனை உள்ளது. அதைச் செய்தால் விற்பனை இரட்டிப்பாகும். விலையும் கூட்டவே வேண்டாம். சைஸையும் மாற்றவே வேண்டாம்" என்றார்.

நிர்வாகி ஆச்சரியப்பட்டுப் போனார். “சொல்லுங்கள், என்ன யோசனை?” என்று ஆவலுடன் கேட்டார்.

“ஒன்றுமில்லை. இப்போது டியூபில் பேஸ்ட் வரும் ஓட்டையைக் கொஞ்சம் பெரிதாக்கலாமே!” என்றார் அவர்.

ஓட்டை யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவில் சிறிதே பெரிதானது. டியூபுகள் சீக்கிரம் தீரத் தீர விற்பனை அமோகமாகப் பெருகியது.

நீதி: மாற்றி யோசியுங்கள்; முன்னேறலாம்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

ஸ்கிசோஃப்ரினியா காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!

நீங்கள் சாப்பிடுவது தூய்மையான கோதுமையே இல்லை… உண்மைய முதலில் தெரிஞ்சுக்கோங்க!

நீங்கள் தினமும் Mouth wash பயன்படுத்துபவரா? அச்சச்சோ ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT