Mutual fund  
பொருளாதாரம்

மிகச் சரியான ஃபண்டுகளை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்?

ரா.வ.பாலகிருஷ்ணன்

முதலீட்டுத் திட்டங்கள் பல இருப்பினும் மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளன. பல ஃபண்டுகள் இருக்கும் சந்தையில், சரியானதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது எப்படி என்று விளக்குகிறது இந்தப் பதிவு.

நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், சேமிப்பு குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் சில நிதி நிறுவனங்கள் முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பல முதலீட்டுத் திட்டங்கள் இருப்பினும், சமீப காலங்களில் மியூச்சுவல் ஃபண்டு போன்ற திட்டங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன‌. இது போதாதென்று அவ்வப்போது புதுப்புது ஃபண்டுகள் அறிமுகமாகி வருகின்றன. இதில் முதலீடு செய்ய நினைக்கும் பலருக்கும் எந்த ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் குழப்பம் நீடிக்கின்றன.

பொதுவாக ஒரு ஃபண்டைத் தேர்ந்தெடுக்கும் போது, எந்த ஃபண்டு குறுகிய காலத்தில் அதிக இலாபம் தருகிறது என்பதைத் தான் பார்ப்போம். இலாபம் முக்கியம் தான்; இருப்பினும் ஃபண்டுகளை பொறுத்தவரை, இதற்கு முன் நீண்ட காலத்திற்கு இலாபத்தைக் கொடுத்திருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். அதற்கு முதலில் ஒரு சில மாதங்கள் அனைத்து ஃபண்டுகளின் ஏற்ற இறக்க நிலைகளை கூர்ந்து கவனித்து வர வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து நிதானமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதன்பிறகு தான் முதலீட்டில் இறங்க வேண்டும். இந்த ஃபண்டுகளில் விரைவில் இலாபம் பெற எந்த குறுக்கு வழியும் இல்லை. ஆகையால் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு ஃபண்டு திட்டம் சீரான முறையில் வருவாயை ஈட்டித் தந்ததா என்பதைப் பார்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக பங்குச்சந்தை சரிந்திருந்த காலகட்டத்திலும் ஃபண்டு திட்டங்கள் வருவாயை ஈட்டியதா என்பதைப் பார்ப்பது மிக அவசியம். பங்குச்சந்தை சரிந்தால், ஃபண்டு திட்டங்களின் வருவாய் குறையுமெனில், அப்படிப்பட்ட ஃபண்டுகளை நாம் தேர்ந்தெடுக்க கூடாது.

ஒரு ஃபண்டு எந்த ஒரு குறியீட்டுடன் ஒப்பிடப்படுகிறதோ, அக்குறியீட்டை விடவும் தொடர்ச்சியாக நல்ல இலாபத்தை ஈட்டுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். அடுத்து அந்த ஃபண்டு ஏதேனும் கட்டணம் வசூலிக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இதில் மறைமுக கட்டணங்கள் இருக்கக் கூடும் என்பதால், அதிக முக்கியத்துவம் தர வேண்டியது அவசியமாகும். ஃபண்டுகளில் ஷார்ப் ரேஷியோ, இன்பர்மேஷன் ரேஷியோ மற்றும் சார்டினோ ரேஷியோ போன்ற பல்வேறு விதங்கள் இருக்கின்றன. முதலீட்டிற்கு முன் இதனையும் கவனிக்க வேண்டும்.

ஃபண்டு திட்டங்களை ஆராய்வது மட்டுமின்றி, இத்திட்டத்தை நிர்வகித்து வரும் மேலாளரின் தகுதி என்ன, எத்தனை வருடங்கள் அவர் வெற்றிகரமாக வருவாயை ஈட்டிக் கொடுத்திருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்துத் தகவல்களும் இணையத்தில் கிடைக்கின்றன. பலர் பல முதலீட்டு ஆலோசனைகளை வழங்கினாலும், நீங்கள் தான் சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் பணம் பலமடங்கு உயர வேண்டுமெனில், நீங்கள் தான் ஆராய்ந்து சரியான ஃபண்டு எதுவெனக் கண்டுபிடித்து முதலீடு செய்ய வேண்டும்.

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

SCROLL FOR NEXT