இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் கட்டுமானத்துறை மிகப்பெரிய முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், மேலும் இந்தியாவில் கட்டுமான உபகரணங்கள் விற்பனை 31 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் இந்திய கட்டுமான உபகரண தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக இந்திய கட்டுமான உபகரண தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கட்டுமானத்துறை அதிதீவிர வளர்ச்சியை கண்டு வருகிறது. குறிப்பாக சர்வதேச வர்த்தக சந்தையின் நிலைத்தன்மைக்கு கட்டுமான துறையே முக்கிய காரணமாக இருக்கிறது. தொழில்நுட்பத் துறையினுடைய முன்னேற்றத்திற்கு இணையான வளர்ச்சியை கட்டுமானத்துறை கண்டு வருகிறது.
குறிப்பாக இந்திய கட்டுமானத்துறை உலக பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது. உள்நாட்டு உற்பத்தி, அந்நிய செலாவணி வேலைவாய்ப்பு, மக்களின் பொருளாதார நிலை முன்னேற்றம், வரி வருவாய் போன்ற பல்வேறு காரணிகளின் முன்னேற்றத்திற்கு கட்டுமானத் துறை பயன்படுகிறது.
இந்தியாவில் கட்டுமானத்துறை கண்டுவரும் வளர்ச்சியின் ஒரு பகுதியாக கட்டுமான உபகரணங்கள் உற்பத்தியும் அதிகரித்து இருக்கிறது. அதனுடைய விற்பனையும் அதிகளவில் முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. 2023 - 24 நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கட்டுமான உபகரணங்களுடைய விற்பனை 30,078 ஆக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தில் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது 31 சதவீத வளர்ச்சியாகவும்.
மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டில் விற்பனையான கட்டுமான உபகரணங்களினுடைய எண்ணிக்கை 27, 423 ஆக உள்ளது. மேலும் ஏற்றுமதி 2,655 ஆக இருக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் கட்டுமான துறையிலும் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாக புகுத்தப்பட்டு வருவதால் கட்டுமான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய புதிய தயாரிப்புகளையும், கண்டுபிடிப்புகளையும் உடனுக்குடன் உருவாக்கி விற்பனையை துரிதப்படுத்தி வருகின்றன. இதனால் வரும் காலங்களில் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.