SIP Investment  
பொருளாதாரம்

பங்குச்சந்தை சரிந்தால் எஸ்ஐபி முதலீட்டை நிறுத்துவது சரியா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப முதலீட்டு வாய்ப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. பல முதலீட்டுத் திட்டங்கள் இருப்பதால், எது பாதுகாப்பானது? எது நம்பகத்தன்மை வாய்ந்தது போன்ற குழப்பங்களும் மக்களிடையே ஏற்படுகின்றன. இதுதவிர்த்து பங்குச்சந்தை சரிந்தால், அது நமது முதலீட்டை பாதிக்குமா என்ற சந்தேகமும் பலருக்கும் எழுகிறது. எஸ்ஐபியில் முதலீடு செய்த ஒருவர், பங்குச்சந்தை சரிவதைக் காரணம் காட்டி, முதலீட்டை நிறுத்தலாமா அல்லது தொடரலாமா என்பதற்கு விளக்கம் அளிக்கிறது இந்தப் பதிவு.

சிறு முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக, குறைந்த முதலீட்டை அடிப்படையாகக் கொண்டது தான் எஸ்ஐபி. மாதாமாதம் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பலரும் எஸ்ஐபியில் முதலீடு செய்து வருகிறார்கள். பங்குச்சந்தைக்கும், எஸ்ஐபிக்கும் சம்பந்தம் உண்டு. எஸ்ஐபி மட்டுமல்ல அனைத்து விதமான முதலீடுகளுக்கும், பங்குச்சந்தைக்கும் தொடர்பு இருக்கிறது. பங்குச்சந்தையானது சரிவதும், உயர்வதும் வாடிக்கையாக நடப்பது தான். இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு உத்தரவாதம் இருக்காதோ என பயப்பட வேண்டிய அவசியமில்லை.

முதலீட்டைத் தொடங்கிய காலத்தின் ஃபண்டுகளின் நிகர சொத்து மதிப்பு குறைவாகவே இருக்கும். ஒரு ஃபண்டின் நிகர சொத்து மதிப்பானது (NAV), ஒரு யூனிட்டின் விலையை மதிப்பிடுகிறது. மூலதனத்தின் சந்தை மதிப்பு குறையும் நேரத்தில், என்ஏவி மதிப்பும் குறையும். அவ்வகையில் என்ஏவி, ஒரு ஃபண்டின் சரியான விலையை அறிய உதவுகிறது. தொடர்ந்து எஸ்ஐபியில் முதலீடு செய்வதன் மூலம், என்ஏவி மதிப்பை அதிகப்படுத்த முடியும்.

பங்குச்சந்தை சரிவதைக் காரணமாக வைத்து, எஸ்ஐபி முதலீட்டை நிறுத்துவது சரியான யுக்தி அல்ல. பங்குச்சந்தை சரியும் காலகட்டத்தில் தான் நீங்கள் தொடர்ந்து முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். வழக்கமாக நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு எப்போதும் கூடுதல் யூனிட்டுகள் கிடைப்பது தான், எஸ்ஐபியின் சிறப்பம்சம் ஆகும். பங்குச்சந்தை சரிகிறதோ அல்லது உயர்கிறதோ அதைப்பற்றி கவலை கொள்ளாமல், சீராக தொடர்ந்து முதலீடு செய்து வாருங்கள். முதலீட்டுக்கு ஏற்ப உங்கள் யூனிட்டுகள் கணிசமாக உயர்வது நிச்சயம். எஸ்ஐபி முதலீட்டைத் தொடங்கிய 5 அல்லது 7 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களின் முதலீடு பன்மடங்கு பெருகுவதற்கான வாய்ப்பு தான் இது.

பொருளாதாரப் பிரச்சினை, வேலையிழப்பு மற்றும் நோய்த் தாக்குதல் போன்ற சூழலில், உங்களால் தொடர்ந்து முதலீடு செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது. இம்மாதிரியான நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே, எஸ்ஐபி முதலீட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். மற்றபடி தொடர்ந்து எஸ்பிஐ முதலீட்டை மேற்கொள்வது தான் எதிர்கால வாழ்விற்கு நல்லது.

எஸ்ஐபி மட்டுமல்ல, நீங்கள் எதில் முதலீடு செய்திருந்தாலும், அதனைப் பாதியில் நிறுத்துவது உங்களுக்கு நஷ்டத்தையே அளிக்கும். மேலும் நமக்கு கிடைக்க வேண்டிய போனஸ் தொகை மற்றும் வட்டித் தொகை குறைவாகவே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விலைவாசி உயர்ந்து வரும் இன்றைய சூழலில், தொடர் முதலீடு தான் நாளைய எதிர்காலத்தை எதிர்கொள்ள துணை நிற்கும்.

Jeff Bezos-ஐ கோடீஸ்வரன் ஆக்கிய விதி என்ன தெரியுமா? 

முகத்தை மூடித் தூங்குபவரா நீங்கள்? அச்சச்சோ போச்சு!

குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

முகம் ஒரு ஓவியம் என்றால், உதடுகள் அதன் இதயம்!

மரங்களைப் பற்றி மனிதர்கள் ஏன் கவலைப்படுவதில்லை?

SCROLL FOR NEXT