இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் நிதித் தேவைகள் அதிகமாக உள்ளன. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட தொகையை நாளைய தேவைக்கு முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால் பலருக்கும் எப்படி முதலீடு செய்ய வேண்டும்? எந்தத் திட்டத்தை தேர்வு செய்வது என்பதில் குழம்புகின்றனர். இவர்களின் குழப்பத்தை தீர்க்க உதவுகிறது இந்தப் பதிவு.
சந்தையில் இன்று முதலீடு செய்வதற்கு எல்ஐசி, அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் உள்ளன. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதிலேயே பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. பொதுவாக அஞ்சல் அலுவலகத் திட்டங்களுக்குத் தான் அதிக வட்டி கிடைக்கும். அவ்வகையில் நாம் எந்தத் திட்டத்தில், எவ்வளவு முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி அதிகம் என்றாலும், பொதுமக்களால் ஒரே நேரத்தில் அதிக தொகையை முதலீடு செய்ய முடியாது. ஆகையால் ரெக்கரிங் டெபாசிட் முறையை நாம் தேர்ந்தெடுக்கலாம். மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் 5 ஆண்டுகளுக்குப் பின் நமக்கு ஒரு பெருந்தொகை கிடைக்கும். இத்திட்டத்திற்கு 6.8% வட்டி அளிக்கப்படும். மாதத் தவணையை செலுத்த தாமதமானால், 1% அபராதம் செலுத்த வேண்டும். அதாவது 100 ரூபாய்க்கு 1 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுவே தொடர்ந்து 4 மாதங்களுக்கு மேல் தவணையை செலுத்தாமல் இருந்தால், உங்கள் கணக்கு தானாகவே மூடப்படும். அதன்பிறகு, அஞ்சல் அலுவலக மேலாளரின் அனுமதியுடன் அபராதம் செலுத்தி கணக்கை மீட்டெடுக்கலாம்.
உதாரணத்திற்கு மாதந்தோறும் 10,000 ரூபாயை அஞ்சல் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் முறையில் முதலீடு செய்து வந்தால், 5 ஆண்டுகள் முடிவில் உங்கள் முதலீடு மட்டும் ரூ.6,00,000-ஐ தொடும். மேலும் 6.8% வட்டி ரூ.1,15,542 உடன் முதர்வுத் தொகையாக ரூ.7,15,542 கிடைக்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை நீங்கள் நீட்டித்தால், உங்கள் முதலீடு ரூ.12,00,000 ஆக உயரும். முதலீடு உயரும் போது வட்டித் தொகையும் உயருமல்லவா! 10 ஆண்டுகள் முடிவில் உங்கள் கையில் ரூ.17,17,972 முதிர்வுத் தொகை கிடைக்கும்.
இப்போது இந்தத் தொகையை நீங்கள் பிக்சட் டெபாசிட் செய்தால் அடுத்த 10 ஆண்டுகளில் இருமடங்காக பெருகி விடும். இருப்பினும் உங்கள் தேவை மற்றும் பொருளாதாரச் சூழலைப் பொறுத்து பிக்சட் டெபாசிட் திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். முதலீட்டை நாம் எவ்வளவு விரைவாகத் தொடங்குகிறோமோ அது நமக்கு தான் நன்மையைக் கொடுக்கும். ஆகவே முதலீட்டை விரைவாக தொடங்குவது கூட ஒரு யுக்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதலீடு தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறலாம். மேலும் மற்ற நிறுவனங்களில் வட்டித் தொகை எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.