முதுமை காலம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு கட்டமாகும். அதற்காக அனைவரும் தயாராக இருக்க வேண்டும். இந்தியாவின் மாறுபட்ட பொருளாதார நிலை மற்றும் மாறிவரும் சமூக செயல்பாடுகளில் ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. உங்களது முதுமை காலத்தில் வசதியான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த ஓய்வூதியத்தை சிறப்பாக திட்டமிட வேண்டும். இந்த பதிவில் இந்தியர்கள் தங்களின் ரிட்டயர்மென்ட்டை எப்படி திட்டமிடலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
சீக்கிரம் தொடங்குங்கள்: ஓய்வூதிய திட்டமிடலுக்கான சிறந்த யுக்திகளில் ஒன்று முடிந்தவரை சீக்கிரம் தொடங்குவதாகும். நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு எவ்வளவு அதிக காலத்தை கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு கணிசமாக வளர ஆரம்பிக்கும். நீங்கள் உங்களது முதுமை காலத்தை எப்படி கழிக்க விரும்புகிறீர்கள் என்பதற்கு ஏற்ற ஓய்வூதிய இலக்குகளை அமையுங்கள். உங்களது வருமானம், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் உட்பட நிதி நிலைமையை முழுமையாக மதிப்பிட்டு எதார்த்தமான ரிட்டயர்மென்ட் பிளானை தீர்மானிக்கவும்.
எதிர்கால செலவுகளை கணக்கிடவும்: உங்களுக்கு எதிர்காலத்தில் எவ்வளவு செலவாகும் வாய்ப்புள்ளது என்பதை கணக்கிட்டு ஓய்வூதியத்திற்கு திட்டமிடுவது முக்கியமானது. வீட்டு வசதி, சுகாதாரம், பயணம் மற்றும் பொழுதுபோக்குகள் போன்ற அத்தியாவசிய செலவுகள் அனைத்தையும் கருத்தில் கொள்ளுங்கள். இதுபோன்ற விஷயங்களை கணக்கெடுக்கும்போது பணவீக்கமும் முக்கிய காரணியாக இருக்க வேண்டும். நீங்கள் சேமிக்கும் பணமானது உங்களது ஓய்வு காலம் முழுவதும் பயன்படும் வகையில் மாற்றங்களைச் செய்யுங்கள்.
புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்: நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை அதிகரிக்க, உங்களது போர்ட்போலியாவை பன்முகப்படுத்துங்கள். அதாவது ஒரே இடத்தில் பணத்தை முதலீடு செய்யாமல், பல இடங்களில் முதலீடு செய்வது நல்லது. வங்கியில் பணத்தை சேமிப்பது மற்றும் பிக்சட் டெபாசிட் போன்றவை எதிர்கால பணவளர்ச்சிக்கு உத்திரவாதம் அளித்தாலும், ஈக்விட்டிகள், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் மற்றும் பத்திரங்கள் போன்ற சொத்து வகைகளில் முதலீடு செய்வது உங்களது லாபத்தை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
மருத்துவக் காப்பீடு: உடல் நல பராமரிப்பு செலவுகள் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும். இதனால் ஓய்வு காலத்தில் மருத்துவச் செலவுகளை திட்டமிடுவது அவசியம். மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் ஆபத்தான நோய்கள் மற்றும் ஏற்கனவே இருக்கும் உடல் பிரச்சினைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சுகாதாரக் காப்பீடு எடுப்பதில் முதலீடு செய்யுங்கள். இது உங்களது எதிர்காலத்தை பெரிதளவில் பாதுகாக்கும். மாறிவரும் சுகாதார தேவைகளுக்கு ஏற்ப உங்களது காப்பீட்டுத் தொகையை தவறாமல் புதுப்பிக்கவும்.
ஓய்வுக்கு முன் கடன்களை அடைக்கவும்: அதிகப்படியான கடன்களை வைத்துக்கொண்டு ரிட்டயர்மென்ட் அடைவது உங்களது நிதி நிலையில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன் எல்லா கடன்களையும் அடைத்துவிடுங்கள். குறிப்பாக அதிக வட்டியுடைய கடன்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். கடன் இல்லாமல் இருப்பது உங்கள் ஓய்வூதிய வருமானத்தை அத்தியாவசிய செலவுகளுக்கும், வாழ்க்கை முறை செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓய்வுக்கு பிந்தைய வருமானம்: இறுதி காலத்தில் உங்களது ஓய்வூதியத்தை மட்டுமே நம்பாமல், கூடுதலாக ஏதேனும் வருமானம் ஈட்ட முடியுமா என்பதையும் கவனியுங்கள். பகுதி நேர வேலை, ஃப்ரீலான்சிங் அல்லது சிறு தொழில் தொடங்குதல் போன்றவை கூடுதல் வருமானத்தை அளித்து உங்களை வாழ்க்கையில் ஒரு பிடிப்புடன் வைத்திருக்கும். எனவே உங்களது திறமைகள் ஆர்வங்கள் போன்றவற்றுடன் ஒத்துப்போகும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை கண்டறியுங்கள்.
இவற்றை நீங்கள் சரியாக கடைபிடித்து உங்களது ரிட்டயர்மென்ட் பிளானை அமைத்துக் கொண்டால், கடைசி காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.