டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு வரி சலுகை அளிக்க தற்போது வாய்ப்பில்லை.
உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் டெஸ்லா நிறுவனம். இந்தியாவில் தனது விற்பனை நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தது, ஆனால் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க ஏற்ற சூழல் இல்லை என்றும் அதனால் முதலில் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யும் சோதனை முயற்சிக்குப் பிறகு தொழிற்சாலை தொடங்கப்படும் என்று டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவர் எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
அதே சமயம் இந்தியாவில் கார் இறக்குமதி செய்வதற்கு அதிக அளவிலான சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இதனால் காரின் விலை இரண்டு மடங்கு உயர்வதாகவும் டெஸ்லா நிறுவனம் குற்றம் சாட்டியது. இதன் காரணமாக டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மின்சார வாகன விற்பனையை தொடங்காமல் காலம் கடத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எலான் மஸ்க் சந்தித்து பேசினார். மேலும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகன இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். டெஸ்லா நிறுவனமும் மின்சார வாகன இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது.
இதன் தொடர்ச்சியாக டெஸ்லா மின்சார வாகன கார் இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்க பல்வேறு துறை அமைச்சகங்களுக்கும் இடையான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முடிவு எட்டப்படாமலேயே கூட்டம் முடிவடைந்தது. இதை அடுத்து டெஸ்லா நிறுவனத்தின் கார்களை இறக்குமதி செய்ய தற்போது வரிச் சலுகை அளிக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாகனங்களுக்கான இறக்குமதிக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் பட்சத்தில் அனைத்து நிறுவனங்களின் மின்சாரக் கார்களையும் உள்ளடக்கும் வகையில் அது இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.