ULI 
பொருளாதாரம்

கடன் வசதியை எளிதாக்கும் ULI அம்சம்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நீங்கள் அடிக்கடி கடன் வாங்குபவராக இருந்தால், இந்தத் தகவல் உங்களுக்குத் தான். ஆம், இனி நீங்கள் கடன் பெற அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. விரைவான கடனை உறுதி செய்ய விரைவில் அறிமுகமாக இருக்கும் யுஎல்ஐ அம்சம் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க!

பொருளாதார வளர்ச்சி உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இன்றைய நிலையில், புதிய தொழில்நுட்பங்களும் நமக்கான வேலையை சுலபமாக்குகின்றன. முன்பெல்லாம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றாலும், பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்றாலும் நாம் நேரடியாக வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. அதன்பின் ஏடிஎம் இயந்திரங்கள் பணம் எடுக்க உதவியதால், வங்கிகளுக்குச் செல்வதைக் குறைத்தன. தற்போதுள்ள யுபிஐ வசதி பணப்பரிமாற்றத்தை மேலும் எளிதாக்கியது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று பலரும் மொபைல் போன் பயன்படுத்துகிறோம். இதன் உதவியோடு பெரும்பாலான மக்கள் யுபிஐ வசதியை பயன்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் நேரடி பணப்பரிமாற்றங்கள், டிஜிட்டல் பரிமாற்றமாக மாறி விட்டன. இந்நிலையில் கடன் வழங்குவதற்கும் புதிய அம்சம் விரைவில் வரவிருக்கிறது. இதற்கு 'யுனிபைட் லெண்டிங் இன்டர்பேஸ் (ULI)' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடன் பெற விண்ணப்பிக்கும் நபர்களின் முழுமையான விவரங்களை யுஎல்ஐ உதவியுடன் கடன் வழங்கும் நிறுவனங்கள் அறிந்து கொள்ள முடியும். இதனால் கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும் சிறு கடன் பெறுவோருக்கு விரைவாக கடன் வழங்க முடியும். இதில் விண்ணப்பதாரரின் ஒப்புதலுக்கு உட்பட்டு அவருடைய விவரங்கள் சரிபார்க்கப்படுவதால், தனிப்பட்ட தகவல் உரிமையும் பாதுகாக்கப்படும். தொழில்நுட்ப சேவைகளில் சில சிக்கலான பரிசீலனைகளை யுஎல்ஐ குறைப்பதால் விரைவான கடனை உறுதி செய்கிறது.

சிறு, குறு கடன்கள் மற்றும் விவசாயக் கடன்கள் உள்பட அனைத்திற்கும் ஆவணங்களை மின்னணு முறையில் சரிபார்த்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன்களை வழங்கும். யுஎல்ஐ முறை ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு அதில் வெற்றியைக் கண்டதால், வெகு விரைவிலேயே நாடு முழுவதும் அமுலுக்கு கொண்டு வரப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

யுஎல்ஐ செயல்படும் முறை:

விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்களை உறுதி செய்ய ஆதார் கார்டு, கேஒய்சி-யை உறுதி செய்ய வங்கிக் கணக்கு விவரங்கள், கடன் ஒழுங்கை உறுதி செய்ய சிபில் ஸ்கோர், மின்னணு ஆவணங்களை உள்ளடக்கிய டிஜி லாக்கர் மற்றும் மத்திய மாநில அரசுகளிடம் இருக்கும் தனிநபர் விவரங்கள் என அனைத்தையும் பரிமாறும் தளமாக யுஎல்ஐ செயல்பட இருக்கிறது. விண்ணப்பதாரரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, எளிதாக அடையாளம் காண உதவும் 'பிளக் அண்ட் பிளே' முறையில் கடன் வழங்கலை உறுதிப்படுத்துவது முதல் நிராகரிப்பது வரை அனைத்தும் விரைவாக நடக்கும்.

மின்னணு தொழில்நுட்பத்தில் பணப்பரிமாற்றத்திற்கு யுபிஐ சேவை பெரும் உதவியாக இருந்ததைப் போலவே, விரைவான கடனுக்கு யுஎல்ஐ பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தக்காளி பாத் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! 

கிஞ்சுகி (Kintsugi) எனக்கு உணர்த்திய 4 வாழ்க்கைப் பாடங்கள்! 

குழந்தைகள் சிறந்த மனிதர் என்று பெயரெடுக்க 10 வாழ்க்கைப் பாடங்கள்!

மரத்தை பாமாவுக்கும் மலரை ருக்மிணிக்கும் அருளிய பரந்தாமன்!

சிறுகதை – மரியாதை!

SCROLL FOR NEXT