ஒரு தள்ளுவண்டி காய்கறி வியாபாரி காய்கறிச் சந்தை செல்கிறார். அங்கு எந்தெந்த காய்கறிகள் விற்கப்படுகின்றன, காய்கறிகளின் சந்தை விலை எப்படி, காய்கறிகளின் தரம் எப்படி (வெண்டைக்காயை வளைப்பதன் மூலம் அதன் தரத்தைப் பரிசோதிப்பது, தேங்காயை தட்டிப் பார்ப்பதன் மூலம் அழுகலா இல்லையா என்று கண்டறிவது) , நாளை காய்கறிகளின் விலை கூடுமா அல்லது குறையுமா (உதாரணமாக, கனரக வாகன ஓட்டுனர்களின் வேலை நிறுத்தத்தால், காய்கறி விலை கூடும்), காய்கறிகள் சீக்கிரம் கெட்டுவிடக் கூடிய வகையா அல்லது பல நாட்கள் வைத்திருந்து விற்கலாமா, போன்ற விபரங்களின் மூலம், அவர் காய்கறி வாங்குவதை முடிவெடுக்கிறார்.
எப்படி தள்ளுவண்டி காய்கறி வியாபாரி, காய்கறிகளைப் பற்றியும், காய்கறிகளின் சந்தையைப் பற்றியும் தெரிந்தப் பிறகே காய்கறி வியாபரத்தில் இறங்குகிறாரோ, நாமும் அவ்வாறே பங்கு சந்தையை நன்றாக புரிந்துக் கொண்ட பின்னரே, பங்கு சந்தையில் பங்கெடுப்பதை முடிவு செய்ய வேண்டும். பின்வரும் கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள வேண்டும்.
பங்குச் சந்தை என்றால் என்ன? பங்குச் சந்தையில் எவ்வாறு நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்கின்றன? அந்த நிறுவனங்களின் பின்புலம் என்ன? பங்குச் சந்தை பங்குகளின் ஏற்ற இறக்கத்தைப் பற்றி ஆராயும் அடிப்படை அலசுதல் (Fundamental Analysis) & தொழில்நுட்ப அலசுதல் (Technical Analysis) என்றால் என்ன? பங்குச் சந்தையில் மொத்த வியாபாரிகளின் பங்கு என்ன? நம்மைப் போன்ற சில்லறை வியாபாரிகளின் பங்கு என்ன? உலகளவில், தேசிய அளவில் நடக்கும் விஷயங்களுக்கும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்ன?பங்குச் சந்தை முதலீட்டாளருக்கும் (Investor) பங்குச் சந்தை வாணிபத்திற்கும் (Trading) உள்ள வித்தியாசம் என்ன? போன்ற விஷயங்களைப் பற்றி அறியாமல் பங்குச் சந்தையில் இறங்குவதென்பது, துடுப்பில்லாத படகில் கடலில் பயணம் செய்வதைப் போன்றது. மிகவும் ஆபத்தானது.
நேரடி பங்குச் சந்தையைப் பொறுத்த வரை, உங்களுடைய முதலீட்டின் ஒரு சிறு பகுதியை முதலீடு செய்வதென்பது நல்லது. அதிக பட்ச பகுதியை, பரவலாகப்பட்ட பரஸ்பர நிதிகளில் (Mutual Fund) முதலீடு செய்வது நல்லது. பரஸ்பர நிதிகள் என்பவை மிக அதிக பங்குகளில் பரவலாக முதலீடு செய்வதால், அவற்றில் பணத்தை இழக்கும் அபாயம் குறைவு. வருமானம் சுமார் தான்.
ஆனால், நேரடி பங்குச் சந்தையில் பணத்தை இழக்கும் அபாயம் அதிகம். வருமானமும் அதிகம். எல்லாவற்றையும் நேரடி பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், முதலுக்கே மோசம் ஏற்பட்டால், உங்களுடைய ஓய்வு காலத்தின் நிதி நிலைமைக்கு பாதகம் உண்டாகலாம். எனவே, நேரடி பங்குச் சந்தையின் அபாயங்களை அறிந்து, ஒரு குறிப்பிட்ட சதவிகித பணத்தை அதில் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 5% நேரடி பங்குகளில் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 95% பரவலான பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம்.
பரஸ்பர நிதிகள் ஒரு தேர்ந்த பொருளாதார வல்லுநரின் மேற்பார்வையில் செயல்படுவதால், பண இழப்பை பற்றி நீங்கள் மிகவும் கவலைக் கொள்ளத் தேவையில்லை. இது ஒரு ஓலா, ஊபர் மகிழ்வுந்தில், பின் வரிசை இருக்கையில் உல்லாசமாக பயணம் செய்வதைப் போன்றது. வாகன ஓட்டுநர் வாகனத்தில் பத்திரமாக பயணிப்பதைப் பார்த்துக்கொள்வார்.
நேரடி பங்குச் சந்தை என்பது, நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தை நீங்களே ஓட்டுவதைப் போன்றது. ஜாக்கிரதையாக ஓட்ட வேண்டும். விபத்தை தவிர்க்க வேண்டும்.
பரஸ்பர நிதிகளைப் போன்ற, ஓலா, ஊபரில் சென்றால் கூட, அவ்வப்போது கவனிக்க வேண்டும். ஓட்டுநர் சரியாக ஓட்டவில்லையெனில், இறங்கி வேறொரு வாகனம் ஏறிக் கொள்ள வேண்டும்.
பங்கு சந்தையைப் பற்றி பல புத்தகங்கள் வந்துள்ளன. அவற்றைப் படித்து பங்குச்சந்தையைப் புரிந்து கொண்டபின், அதில் இறங்குங்கள்.