விஜய் தொலைக்காட்சியின் பாக்யலட்சுமி ஒரு இல்லத்தரசியின் கதை தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் விஷால்.
பாக்யலட்சுமி தொடரில் கணவரால் தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தாயின் மனமறிந்து நடந்து கொள்ளும் மிகுந்த புரிதல் கொண்ட மகன் கதாபாத்திரத்தில் விஷால் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஷாலுக்கென சின்னத்திரையில் ரசிகர் பட்டாளமே உண்டு.
சாஃப்ட் பாய் தோற்றம் கொண்ட விஷால் நடிப்பில் சமீபத்தில் ஓமனே என்றொரு மியூசிக் விடியோ யூடியூபில் வெளியாகி இருக்கிறது. தீப்தி சுனைனா ஜோடியாக நடிக்க விஜய் பல்குனைன் இசையில் தீப்தியே தயாரித்திருக்கும் இந்த மியூசிக் விடியோ யூ டியூப் டிரெண்ட் லிஸ்டில் 21 ஆம் இடத்தில் இருக்கிறது. பாடலைப் பார்த்தவர்கள் பரவலாகப் பாஸிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
பாடல் புதிதாகத் திருமண தம்பதிகளின் சம்பிரதாய முதலிரவில் துவங்கினாலும் இருவருமே மனமொத்து தாம்பத்தியத்தில் ஈடுபாடு கொள்ளும் வரை நண்பர்களாகவே இருப்போமே என்ற முடிவில் பயணிக்கிறது. மனைவிக்கு படிப்படியாக கணவனின் மேல் ஈர்ப்பு வருமளவிற்கான காரணங்கள் பூர்த்தியான பிறகே அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். இருவரும் நிஜமான தாம்பத்தியத்தில் இணையலாம் என முடிவெடுத்ததும் சிறு பிள்ளை விளையாட்டாய் மீண்டும் தாலி கட்டுவதைப் போலவும் அப்போது தான் நிஜமாகத் திருமணம் செய்து கொள்வதைப் போலவும் தங்களுக்குள் பாவனை செய்து கொள்கிறார்கள்.
கணவனாகவே இருந்தாலும் கூட மனைவியான அந்தப் பெண்ணை டேக் இட் ஃபார் கிராண்டடாக எடுத்துக் கொள்ளாமல் அவளது உணர்வுகளுக்கும், மனநலனுக்கும் முக்கியத்துவம் அளித்து இதமானதொரு தாம்பத்திய வாழ்வு முகிழ இருவருமே மனமொத்து முயற்சிக்க வேண்டும் எனும் கருத்தை முன் வைக்கிறது இந்த மியூசிக் விடியோ.
விடியோவில் இருவருக்குமான ஈர்ப்பு காதலாக மாறும் தருணங்களை அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
பாக்யலட்சுமி விஷாலின் வெற்றிகரமான அடுத்த மூவ் ஆக இதைக் கருதலாம்.