'RRR' படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது அதன் டைரக்டர் ராஜமவுலி என்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது இந்தி நடிகர் அமீர்கானும் ராஜமவுலி பாணியில் ஆஸ்கார் விருதை குறிவைத்து காய் நகர்த்த தொடங்கி உள்ளார்.
ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அமீர்கான். வித்தியாசமான கதைகளில் நடிப்பது மட்டுமல்லாமல், சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'லால் சிங் சத்தா' திரைப்படம், பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
அமீர்கான் தயாரிப்பில் அவரது மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'லாபதா லேடீஸ்'. பெண்களின் அடக்குமுறையை காமெடி கலந்த படமாக கொடுத்து இந்த சமூகத்துக்கு எதிரான சாட்டையை சுழற்றியிருக்கிறார் இயக்குநர் கிரண் ராவ். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ரூ.22 கோடி வரை வசூல் செய்தது. இந்த படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
அந்த படத்துக்கு ஆஸ்கார் விருதை பெற்று விடும் முயற்சியில் அமீர்கான் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இதற்காக ஹாலிவுட் மீடியாவுக்கு அமீர்கான் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார். சர்வதேச ரசிகர்களுக்கு படத்தை நெருக்கமாக கொண்டு செல்ல 'லாபதா லேடீஸ்' என்ற தனது படத்தின் பெயரையும் 'லாஸ்ட் லேடீஸ்' என்று மாற்றி உள்ளார். தனது படம் ஆஸ்கார் நடுவர்கள் பார்வையில் படுவதற்கான தொடர்ந்து பலவிதமான முயற்சிகளை செய்து வருகிறார். ஆர் ஆர் ஆர் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததை போல் அமீர்கானும் ஆஸ்கார் விருதை வெல்வாரா என்பது பரபரப்பான எதிர்பார்ப்பாக உள்ளது.